சென்னை சபாக்களில் 'சுருதி பேதம்'
அமெரிக்காவில் தமிழ் நாடகம் என்றால் சென்னை குழுக்கள் அளிப்பதுதான் என்ற நிலை மாறியது தெரியும். இங்கிருக்கும் அமெச்சூர் குழுக்களே எந்தத் தொழில்ரீதிக் குழுவையும் விட நேர்த்தியான தயாரிப்புகளை வழங்கத் தொடங்கிவிட்டன. அந்த வகையில் அண்மையில் அரங்கேறிய க்ரியா நாடகக்குழுவின் 'மாயா' எல்லா அம்சங்களிலும் சிறப்பானதொரு நாடகம். இப்போது இந்த அமெரிக்கக் குழு தன் நாடகத்தைச் சென்னைக்குக் கொண்டுபோகிறது!

'க்ரியா'வின் பன்னிரண்டு நடிகர்களும் இரண்டு இசைக் கலைஞர்களும் சென்னையில் சபாக்களுக்கு 'மாயா'வை எடுத்துச் செல்லப் போகிறார்கள். நாடகத்தைப் பார்த்த தமிழ்நாட்டின் பிரபலங்களான டி.வி.வரதராஜனும், பாம்பே சாணக்யாவும் மாயாவின் சிறப்பு அம்சங்களைப் பாராட்டிச் சென்னையில் அரங்கேற உழைத்தார்கள்.

நுட்பமான அரங்க அமைப்புகளும், ஒலி ஒளி அமைப்புகளும் செய்யப் பெருத்த பொருட்செலவு ஆகிறது. சபாக்கள் தரும் குறைந்த ஊதியம் போக மிச்சத்தைக் குழுவினரே செலவு செய்கின்றனர். விமானப் பயணம் மற்றும் தங்குவதற்கான செலவுகளையும் கலைஞர்கள் தாமே ஈடுசெய்கின்றனர். இதன் பொருட்டாக க்ரியா விளம்பரதாரர்களைத் தேடி வருகிறது.

சென்னையில் ஜூலை மாதம் 9-ம் தேதி ஆரம்பித்து 15-ம் தேதி வரை நாரதகான சபாவில் தொடங்கி, கிருஷ்ணகானசபா, ஹம்சத்வனி என்று மொத்தம் எட்டு சபாக்களில் 'சுருதி பேதம்' மேடையேறும்.

முழு விபரங்களுக்கு: http://www.kreacreations.com

சுருதி பேதம் அமெரிக்காவின் பிற பகுதிகளிலும் மேடையேற ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. சென்னைக்குப்பின் குவையத்தில் நடத்தவும் அழைப்பு வந்திருக்கிறது.

© TamilOnline.com