தென்றல் பேசுகிறது...
கோவிட்-19 தீநுண்மி (வைரஸ்) புயல் மனிதகுலத்தின் அஸ்திவாரத்தையே ஆட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்தத் துயரம் என்பது நம்மை ஒன்றுபட வைக்கும் சக்தியாக இருந்திருக்கலாம். அதற்கு மருந்து கண்டுபிடித்தல், பொருளாதாரத்தை மீட்டெடுத்தல் ஆகியவற்றுக்கு நாடுகள் தோளோடு தோள் சேர்த்துச் செய்தால் விரைந்த முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும். அந்த வாய்ப்பைக் கைநழுவ விட்டுவிட்டோம். சில நாடுகள் தமது பாரம்பரிய அல்லது மாற்று மருத்துவ முறைகளால் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்ட நிலையில் அமெரிக்க மருத்துவத்துறை இன்னமும் அதற்கென நிர்ணயிக்கப்பட்ட அங்கீகாரப் புதைமணலில் சிக்கிக்கொண்டு நகர மறுப்பதோடு, தினந்தோறும் ஆயிரக்கணக்கான குடிமக்களைப் பலிகொடுத்துக் கொண்டிருக்கிறது. காப்பீட்டுத் துறையும் மருத்துவத்துறையும் கை கோர்த்துக்கொண்டதில், சராசரிக் குடிமகன் மருத்துவமனைக்குப் போவதைவிட நோயில் அவதியுறுவதே நல்லது என்று நினைக்கத் தொடங்கியுள்ளது மற்றோர் அவலம். உலகம் சகோதரத்துவத்தில் இணைந்து, அறிவு மற்றும் பிற வளங்களைப் பகிர்ந்துகொள்வதே மனிதகுலத்தை மீண்டும் பிழைக்கவும் தழைக்கவும் வைக்கும்.

★★★★★


இதயமில்லாத அரசின் இரும்புக்கரம் என்ன செய்யுமென்பதை ஜார்ஜ் ஃப்ளாயிட் மரணத்தில் பார்க்கிறோம். ஒரு வைரஸின் தாக்கத்திலிருந்தே மீளவில்லை, அதற்குள் இந்தத் தேவையில்லாத மரணத்தின் பின்விளைவாக மூண்டுள்ள எதிர்ப்பின் தாக்கம் தேசத்தை நிலைகுலைய வைத்திருக்கிறது. இறந்துபோன அந்தத் தனிநபர், ஆயுதம் தாங்காதவர், மூச்சுவிடத் தவித்தபடி எதிர்ப்புக் காட்டாமல் இருந்தபோதும் அவரது கழுத்தை அழுத்திய அசுரக் காலணி அசையவில்லை என்பது நினைத்தாலே நடுங்கவைக்கும் பரிதாபம். போலீசார் எங்கே, எந்த அளவு வன்முறையைப் பயன்படுத்தலாம் என்பதற்கான சட்டங்களை மறுபார்வை செய்யவேண்டுவது மிக அவசியம். இல்லையென்றால், மனிதத்துவத்தைவிடச் சட்டத்தின் ஆட்சி உயர்ந்தது என்றாகிவிடும்.

★★★★★


சென்ற இதழில் தொடங்கிய டாக்டர் கோபி நல்லையனின் மனதை உருக்கும் நேர்காணல் இந்த இதழிலும் பல முக்கியத் தகவல்களோடு தொடர்கிறது. வீரத்துறவி விவேகானந்தரின் உணர்ச்சியூட்டும் வரலாறும் தொடர்கிறது. நீண்ட சிறுகதையான 'முதல்துளி' உங்களை வேறோர் உலகத்துக்குக் கொண்டுசெல்லும். ருசியுங்கள், ரசியுங்கள்.

அனைத்துலக யோக தினம் மற்றும் சுற்றுச்சூழல் நாள் வாழ்த்துகள்.

தென்றல்
ஜூன் 2020

© TamilOnline.com