இனிப்பு நீரின் மர்மம்
(அத்தியாயம் - 5)

ஆயா மிஸ் லேக்குடன் வீட்டுக்குத் திரும்புகையில், அவர் பள்ளிக்கூடத் தண்ணீர் பற்றிச் சொன்னது அருணின் காதில் ரீங்காரம் செய்துகொண்டே இருந்தது. அவருக்கும் தண்ணீரின் தித்திப்பு அபூர்வமாகத் தோன்றினால், தான் நினைத்தது சரிதான் என்று நம்ப ஆரம்பித்தான். ஆனால், ஏன் தன் நண்பன், அந்த 'லொடலொட' சாம் ஒண்ணுமே சொல்லலை? ஆயிரம் கேள்விகள் அருணின் மனதில்.

"அருண், என்ன பேசாமல் இருக்க?" மிஸ் லேக் கேட்டார். "டீச்சர் ஏதாச்சும் திட்டினாங்களா?"

அருண் சைக்கிளைத் தள்ளிக்கொண்டே யோசனையிலேயே இருந்தான். மிஸ் லேக்கிடம் என்ன கேட்பது, எப்படிக் கேட்பது.

"அருண், ஆர் யூ ஓகே?"

"ம்ம்..."

அவருக்கு அருணின் பதில் சற்றுக் கவலை கொடுத்தது. அவனை நிறுத்தி, செல்லமாக அவன் தலையை கோதிவிட்டார். அவனது தோள்களைத் தன் இரு கரங்களால் பிடித்து ஆதரவாக அவன் தலையில் ஒரு முத்தம் கொடுத்தார்.

"ஒண்ணுமில்ல, நான் ஆழ்ந்த சிந்தனையில இருக்கேன்" என்றான் அருண். அவருக்கு அது ஹாஸ்யமாகத் தோன்றியது. பட்டென்று சிரித்துவிட்டார். அருணுக்கு வந்ததே கோபம்.

"என்னை என்ன கோமாளின்னு நினைச்சீங்களா? நான் உண்மையிலேயே ஆழ்ந்த சிந்தனையில இருக்கேன்."

மிஸ் லேக் சிரிப்பதா அழுவதா என்று புரியாமல் குழம்பினார். இந்த சின்னப்பையனுக்கு அப்படி என்ன ஆழ்ந்த சிந்தனை!

"ஆழ்ந்த சிந்தனை?" மெதுவாகத்தான் கேட்டார், கொஞ்சம் சிரிப்பு வரத்தான் செய்தது.

"என்னைச் சின்னக் குழந்தைன்னு நினைச்சீங்களா? எனக்கு ஆழ்ந்த சிந்தனை வரக்கூடாதா? நீங்க பெரியவங்கன்னா என்ன வேணும்னாலும் சொல்லலாமா?" அருண் பொரிந்து தள்ளினான்.

அவருக்கு அருணின் கோபம் எரிச்சலை உண்டாக்கியது. சட்டென்று கோபம் வந்தது.

"அருண், என்ன இது. அதிகப்பிரசங்கி மாதிரி. மன்னிப்புக் கேளு என்கிட்ட" என்றார். சொன்னவுடனேயே, என்னடா இது ஒரு சின்னப் பையனைத் திட்டிவிட்டோமே என்றும் இருந்தது. "அருண், சாரிப்பா. நான் அப்படி உன்னைக் கேலி பண்ணுற மாதிரி சிரிச்சிருக்கக் கூடாது."

அருண் புரிந்துகொண்டு புன்னகைத்தான்.

"Friends forever?" என்று அவர் High-5 காட்டினார். அருண் உடனையே அவர் கையைத் தனது கையால் தட்டினான்.

"என், பிரியமுள்ள, அதிபுத்திசாலியான, சிறுவனுக்கு என் மன்னிப்பு கலந்த அன்பு வணக்கம்" என்று சொல்லி அவனைச் செல்லமாக முதுகில் தட்டினார்.

"Friends forever" என்று அருணும் பதிலுக்குச் சொன்னான்.

"ஓகே, இப்ப சொல்லு, சாருக்கு அப்படி என்ன ஒரு ஆழ்ந்த சிந்தனை?"

"அதுவா?" அருண் தயக்கத்தோடு பேச ஆரம்பித்தான். "நீங்க எங்க பள்ளிக்கூடத்தில இன்னிக்கு தண்ணி குடிக்கிறப்ப, அது ஒருமாதிரி இருக்குன்னு சொன்னீங்க இல்ல...?"

"நானா? எப்ப சொன்னேன்?"

"வீடு திரும்பும்போது…"

"நிஜமாவா? நானா?"

"ஆமாம், மிஸ் லேக். ஞாபகப்படுத்திப் பாருங்க."

கொஞ்சதூரம் நடந்ததும், அவருக்கு ஞாபகம் வந்தது. "அட, ஆமாம், நான்தான் சொன்னேன். அந்தத் தண்ணியில தித்திப்பு திகட்டலா இருந்தது உண்மைதான்."

"தித்திப்பு? திகட்டல்?" அருண் உற்சாகம் பொங்கச் சத்தமாகக் கேட்டான்.

"ஆமாம்."

"அதுல ஏதோ கோளாறுமாதிரி தோணலையா?"

அருண் அப்படிக் கேட்டதும் மிஸ் லேக்குக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவருக்கு அருணைப்பற்றி நன்றாகவே தெரியும். பக்கரூவின் வயத்துவலி மூலமாக ஒரு பெரிய தப்பு ஒன்றை அவன் கண்டுபிடித்தான் என்றுதான் பார்த்திருக்கிறாரே.

"இல்லை அருண், இதையெல்லாம் பெரிசுபடுத்தாதே. நான் சும்மா ஏதாவது அப்பப்ப இந்தமாதிரி உளறுவேன். இந்த ஷெர்லாக் ஹோம்ஸ் வேலையெல்லாம் வேண்டாமே!" அவர் மழுப்பப் பார்த்தார். அருண் விடவில்லை.

"இல்லை, நான் விளையாட்டா இதை நினைக்கலை. எனக்கு ஏதோ இதுலையும் ஒரு தில்லுமுல்லு இருக்குன்னு படுது. இதுல ஹோர்ஷியானா கை இருக்கலாம்."

"அருண் நீ இதை முதல்ல உங்கப்பா அம்மாகிட்ட சொல்லு. அவங்கதான் நல்லா வழி காட்டுவாங்க."

"அம்மாவா? அவங்க இந்தப் பேச்சை எடுத்தாலே டென்ஷன் ஆய்டுவாங்க. அப்பாவைப் பத்தி கேட்கவே வேண்டாம். நீங்கதான் எனக்கு உதவி பண்ணுங்களேன், ப்ளீஸ்..."

வீடு வந்துவிட்டது. என்ன சொல்லலாம் என்று யோசித்தார். அருணின்மேல் அவருக்கு அன்பும், மதிப்பும் இருந்தாலும், அவருக்கு ஹோர்ஷியான நிறுவனம் போன்றதின் அரசியலில் மாட்டிக்கொள்ள பயமாக இருந்தது. இப்படி பயப்படுகிறோமே என்று கொஞ்சம் வெட்கமாகவும் இருந்தது. அருணைப்போல தனக்கு தைரியம் இல்லையே என்று வருந்தினார். இப்படிப் பெரியவர்களே உண்மையை ஏற்க பயந்தால், அப்புறம் அருண் போன்ற சிறுவர்கள் தங்களிடமிருந்து என்ன கற்றுக்கொள்வார்கள் என்று நினைத்தார்.

அருண் ஒன்றும் பேசவில்லை. வீட்டு வாசலில் கீதா பக்கரூவோடு விளையாடுவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார் மிஸ் லேக்.

"இன்னிக்குக் கொஞ்சம் சீக்கிரமாவே வந்திட்டேன்" என்று சொன்னார் கீதா.

"அருண், பாரு அம்மா இன்னிக்கு சீக்கிரமா வந்திட்டாங்க" மிஸ் லேக் அருணைச் சமாதானப்படுத்தப் பேச்சை மாற்றினார். அருண் ஒன்றும் சொல்லாமல் தனது சைக்கிளைத் தள்ளிக் கொண்டுபோய் கராஜில் வைத்தான்.

மிஸ் லேக், கீதாவிடம் விடை பெறும்போது, அருண் அவர் அருகே சென்று மெல்லிய குரலில், "மிஸ் லேக், யாரும் உண்மையைக் கண்டுபிடிக்கத் தயங்கக்கூடாது. நீங்களும்தான்." என்றான்.

(தொடரும்)

ராஜேஷ்

© TamilOnline.com