திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் ஆலயம்
எறும்பீஸ்வரர் ஆலயம், தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள திருவெறும்பூரில் அமைந்துள்ளது.

தலப்பெருமை
சைவசமயக் குரவர்களால் பாடல்பெற்ற தலம். இறைவன் திருநாமம்: எறும்பீஸ்வரர். இறைவி திருநாமம் நறுங்குழல் நாயகி. 60 அடி உயர மலைமேல் அமைந்துள்ளது. இக்கோயில் ஏழாம் நூற்றாண்டில், காவிரி நதி தீரத்தில் ஆதித்யன் என்னும் சோழ வம்சத்து அரசனால் கட்டப்பட்டது. திருப்புறம்பியம் போரில் வெற்றி பெற்றதன் காரணமாக இக்கோயிலை மன்னன் கட்டியதாக வரலாறு. இது தென்னிந்திய கைலாசம் என்றும் அழைக்கப்படுகிறது. மலைப்படிகள் மேல் ஏறிச் சென்று இறைவனை தரிசிக்கவேண்டும்.

எறும்பீஸ்வரரின் மற்றைய பெயர்கள்: மதுவனேஸ்வரர், மணிகூடசலபதி, பிப்பீலிகேஸ்வரர், மாணிக்கநாதர். அம்பாளுக்கு சுகந்தக் குழலாள், சௌந்தர்ய நாயகி, மதுவனேஸ்வரி, ரத்னாம்பாள் என்ற திருப்பெயர்கள் உள்ளன. சைவசமயக் குரவர்களில் அப்பர் எறும்பீசனைப் பாடியுள்ளார். மாணிக்கவாசகர் திருவாசகத்தில் திருவெறும்பியூர் புராணத்தில் பாடியுள்ளார். வடலூர் ராமலிங்க வள்ளலார் திருவருட்பாவில் பாடியுள்ளார்.

தாரகாசுரன் பூமி, சொர்க்கம் இரண்டையும் வென்று தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்கள் பிரம்மாவிடம் சென்று உதவி வேண்டினர். அதற்கு பிரம்மா அவர்களை திருவெறும்பூர் கோயிலுக்குச் சென்று ஈசனை வழிபடும்படிக் கூறினார். தாரகாசுரனை ஏமாற்ற தேவர்கள் எறும்பு வடிவமெடுத்து மலையிலுள்ள ஈசனைத் தரிசிக்க அவதிப்பட்டனர். ஆதலால் சிவன் ஒரு எறும்புப் புற்றில் காட்சி அளித்தார். இதனால் எறும்பு வடிவிலிருந்த தேவர்களால் எளிதில் சிவனை வணங்க முடிந்தது. எறும்பீஸ்வரர் என்னும் பெயர்க்காரணம் இதுவே. இங்கு சிவன் தலையைச் சாய்த்து அருள்பாலிக்கிறார். திருவெறும்பூர், திருப்பனந்தாள், விரிஞ்சிபுரம் ஆகிய மூன்று இடங்களில் இன்றும் இறைவன் தலையைச் சாய்த்து காட்சி தருகிறார். இத்தலத்திற்கு ரத்னகூடம், திருவெறும்பீபுரம், எறும்பீசம், பிரம்மபுரம், லட்சுமிபுரம், மதுவனம், மணிகூடபுரம், குமாரபுரம் எனப் பல பெயர்கள் புராணங்களில் காணப்படுகின்றன.

கோயில் 60 அடி உயர மலைமேல் சலவைக்கல் படிக்கட்டுகளுடன் அமையப்பெற்றது. இதனை மலைக்கோயில் என்றும் அழைக்கின்றனர். கோயிலினுள் இரண்டு பிரகாரம், இரண்டடுக்கு ராஜகோபுரம் நுழைவாயிலில் உள்ளது. இறைவன் சன்னிதி கிழக்கு நோக்கி உள்ளது. எறும்பீசர் சாய்ந்த மணல் புற்றில் காட்சியளிக்கிறார். சலவைக்கற்களால் ஆன பிள்ளையார், முருகன், சிவன், வாகனமான நந்தி, நவக்கிரகங்கள் சன்னிதிக்குச் செல்லும் வழியில் உள்ள மண்டபத்தில் உள்ளன. சன்னிதியைச் சுற்றி தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர் சிலைகள் உள்ளன.இரண்டாம் பிரகாரத்தில் நறுங்குழல் நாயகி, அம்மன் சன்னிதியில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பிரகாரம் சலவைக்கற்களால் சூழப்பட்டது. மலையடிவாரத்தில் கிரிவலப் பாதை நல்ல வசதிகளுடன் தமிழ்நாடு சுற்றுலா நிர்வாகத்தினரால் 2011ல் சீரமைக்கப்பட்டது. ஒவ்வொரு பௌர்ணமியிலும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.

எறும்பீஸ்வரர், நறுங்குழல் நாயகி அம்மன் இருவருக்கும் தினசரி ஆறுகால பூஜை நடைபெறுகிறது. புற்றினுள் இறைவன் இருப்பதால் நேரடி அபிஷேகம் கிடையாது, ஒரு கவசம் சார்த்தி அதன்மீதே அபிஷேகம் செய்கின்றனர். பிரம்மோற்சவம், அன்னாபிஷேகம். மகா சிவராத்திரி திருவிழாக்கள் நடைபெறுகின்றன. பிரதோஷம், அமாவாசை, கிருத்திகை, சதுர்த்தி நாட்களில் சிறப்பு பூஜைகள் உண்டு. கோவிலினுள் முதலாம் ஆதித்யன், சுந்தர சோழன், முதலாம் ராஜராஜன் ஆகியோர் செய்த திருப்பணிகளை விளக்கும் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. எறும்பீஸ்வரருக்கு 10 கழஞ்சு தங்கம் ஒரு பக்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். சிறுதாவூர் செம்பியன் வேதிவேளன், கிளியூர் நாடு பகுதியிலிருந்து, ஈசன் சன்னிதி கர்ப்பக்கிரகத்தின் மேல் விமானம் கட்டுவித்தார். 1752ல், பிரிட்டிஷ்- பிரெஞ்சு இரு தேசத்தாருக்கும் நடந்த போரின்போது கோயிலின் உள்ளே பிரெஞ்ச் வீரர்கள் தங்குவதற்கு இடம் கொடுத்தனர் என்ற குறிப்புகள் காணப்படுகின்றன.

விரும்பி யூறு விடேல்மட நெஞ்சமே
கரும்பி னூறல்கண் டாய்கலந் தார்க்கவன்
இரும்பி னூறல றாததோர் வெண்டலை
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.


- திருநாவுக்கரசர் தேவாரம்

சீதா துரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com