அர்ஜுனன் திரும்பினான்
மிக நீண்டதும், ஏராளமான சம்பவங்களைக் கொண்டது வனபர்வம். இதில் இடநெருக்கடி காரணமாகச் சில சம்பவங்களைச் சொல்லவில்லை. அப்படி விடுபட்டவற்றுள் மிகவும் பிரபலமான ஜடாஸுரன் வதமும், மணிமான் வதமும் அடங்கும். ஜடாஸுரன் என்ற அரக்கன் பாஞ்சாலியையும், பாண்டவர்களுடைய ஆயுதங்களையும் தூக்கிச் செல்லும் நோக்கத்துடன் அந்தண வேடம் தரித்து, பாண்டவர்களோடு தங்கியிருந்தான். அந்தண வேடத்தில் இருக்கவே, தர்மபுத்திரரும் அவனைத் தம்முடன் தங்க அனுமதித்தார். ஒருநாள் பீமன் இல்லாத சமயத்தில், அந்த அசுரன் பாஞ்சாலியையும் மற்ற நான்கு பாண்டவர்களையும் தூக்கிக்கொண்டு சென்றான். இவனை எதிர்த்துச் சண்டையிட சஹதேவன் துடித்தபோது, "பீமன் வந்து இவனைக் கவனித்துக் கொள்வான். கவலைப்படாதே" என்று தர்மர் அவனைச் சமாதானப்படுத்தினார். பின், தன் யோக ஆற்றலால் தன்னை பாரமிக்கவராக ஆக்கிக்கொண்டார். பீமன் திரும்பி வந்ததும் இவர்களைத் தேடிக்கொண்டு வந்தபோது, தன் சகோதரர்களையும் பாஞ்சாலியையும் தூக்கிச் செல்லும் ஜடாஸுரனைக் கண்டு, வழிமறித்துப் போரிட்டு, நீண்டநேரம் போரிட்ட பிறகு ஜடாஸுரனுடைய தலையை, உடலிலிருந்து பறித்தெடுத்து அவனைக் கொன்றான். இது, பீமன் ஸௌகந்திக மலர்களைத் தேடிப் புறப்படுவதற்கு முன்னால் நடந்தது.

ஸௌகந்திக மலர்களைக் கொய்யச் சென்ற சமயத்தில் அங்கே நடந்த யட்ச யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களில் முக்கியமானவன் குபேரனுடைய தோழனான மணிமான் என்ற யட்சன். "ஒரு மனிதன் யட்சர்களாகிய தங்களைக் கொல்கிறான்" என்று இரண்டாவது முறையாக வந்து முறையிட்டு, "மணிமானும் கொல்லப்பட்டான்" என்று மற்ற யட்சர்கள் சொன்னதும் பெரிதும் கோபமடைந்த குபேரன், பீமனோடு போர் தொடுக்கக் கிளம்புகிறான். குபேரன் அப்படிக் கிளம்பிய சமயத்தில் தர்மபுத்திரர், பீமனைத் தேடிக்கொண்டு வந்துவிடுகிறார். தர்மபுத்திரரைப் பார்த்ததும் குபேரனுக்குக் கோபம் அடங்கிவிடுகிறது. "மணிமான் உள்ளிட்ட யட்சர்கள் கொல்லப்படுவதற்கு பீமன் ஒரு கருவியாக இருந்திருக்கிறான். எனக்கு அவனிடத்தில் கோபம் ஏதும் இல்லை. முன்னொரு காலத்தில் மணிமானும் நானும் அகத்தியரால் சபிக்கப்பட்டோம். குசஸ்தலி என்ற இடத்தில் தேவர்கள் நடத்திய ஒரு கூட்டத்தில் பங்கேற்க நான் சென்றபோது, வழியில் அகத்தியரைக் கண்டோம். பெரும் திமிரினாலும் அகம்பாவத்தாலும் மணிமான் அவருடைய தலையில் எச்சில் உமிழ்ந்துவிட்டான். என் கண்முன்னாலேயே இப்படி அவரை அவமதித்ததால் கோபமடைந்த அகத்தியர் 'நீ ஒரு மனிதனால் கொல்லப்படுவாய்' என்று அவனைச் சபித்தார். 'அப்படி இவனைக் கொல்லும் மனிதனை நேரில் கண்டதும் நீ சாபத்திலிருந்து விடுபடுவாய்' என்று எனக்குச் சொல்லியிருந்தார். அதன் பயனாகத்தான் இப்போது மணிமான் பீமனுடைய கையால் இறந்திருக்கிறான். பீமனைப் பார்த்ததால் எனக்கும் சாபவிமோசனம் கிடைத்தது" என்ற சொல்கிறான் குபேரன். மேலும் அர்ஜுனன் இந்திரலோகத்தில் நலமுடன் விளங்குவதைச் சொல்லி, "இந்திரனிடமிருந்து ஆயுதங்களைப் பெற்றுக்கொண்டு அர்ஜுனன் விரைவிலேயே திரும்பி வருவான். அதுவரையில் நீங்கள் இங்கே தங்கியிருக்கலாம். உங்களுக்குத் தேவையான இறைச்சி உள்ளிட்ட எல்லாவற்றையும் என்னுடைய பணியாட்களான யட்சர்கள் உங்களுக்குக் கொடுப்பார்கள்," என்று சொல்லிவிட்டு மறைந்தான். குபேரன் சென்றதும், உயிரிழந்து வீழ்ந்திருந்த யட்சர்களுடைய உடல்களை, மலையுச்சியிலிருந்து வீசியெறிந்து அகற்றினர். பாண்டவர்கள் அங்கே சிறிதுகாலம் தங்கினர்.

பாண்டவர்கள் ஆர்ஷ்டிஷேணர் ஆசிரமத்துக்கு வருவதற்கு முன்னால் நரநாரயண ஆச்ரமத்தில் தங்கியிருந்தனர். அப்போது ஒருநாள் தர்மபுத்திரர் பாஞ்சாலியையும் மற்ற பாண்டவர்களையும் தன்னருகில் அழைத்தார். பாரதம் சொல்கிறது: "திரெளபதியுடனிருக்கும் அந்த யுதிஷ்டிரர் ஸமயத்தில் பிராதாவான அர்ஜுனனை நினைத்துக் கொண்டு, அந்தத் தம்பிமார்களையும் அழைத்து, 'க்ஷேமமாக வனத்தில் ஸஞ்சரிக்கின்ற நமக்கு நான்கு வருஷங்கள் சென்றன." என்று சொல்லத் தொடங்கினார். (வனபர்வம், யக்ஷயுத்த பர்வம், அத். 159, பக். 572) தர்மபுத்திரர், காலத்தைத் தொடர்ந்து கணக்கிட்டு வந்தார் என்பதற்கான சான்றுகளில் ஒன்று இந்த இடம். அதாவது, இப்போது அர்ஜுனன் இந்திரலோகத்துக்குப் புறப்பட்டுச் சென்று நான்கு வருடங்கள் முடிந்தன என்று சொல்கிறார். இத்தோடு, அர்ஜுனன் இந்திரலோகத்துக்குக் கிளம்புவதற்கு முன்னால் கழிந்திருந்த பதின்மூன்று மாதங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். (காண்க: போர்புரிவதே அரசவம்சத்தின் தர்மம்) அதாவது, பாண்டவ வனவாசம் தொடங்கி ஐந்தாண்டுகளுக்குச் சற்றுக் கூடுதலாக ஆகியிருந்தன. அர்ஜுனன் இந்திரலோகம் சென்று நான்காண்டுகள் முடிந்துவிட்டன. இது ஐந்தாம் ஆண்டு. தர்மபுத்திரர் மேலும் சொல்கிறார்: "மிக்க புண்யமானதும், பரிசுத்தமானதும், தேவர்களாலும் அஸுரர்களாலும் அடையப்பட்டதும், பர்வதராஜனுமான கைலாஸத்தைக் குறித்து ஐந்தாவது வர்ஷக் கடைசியில் நான் வருகிறேன்' என்று அர்ஜுனன் ஸங்கேதம் செய்திருக்கிறான். அர்ஜுனனுடைய வரவைக் காண எண்ணங்கொண்ட நம்மாலும் அந்த இடத்தில் (வந்து பார்ப்பதாக) ஸங்கேதம் செய்யப்பட்டிருக்கிறது. அளத்தற்கரிய ஆற்றலுள்ள அந்தப் பார்த்தனால், முற்காலத்தில், 'அஸ்திர வித்தையை விரும்பியவனாக ஐந்து வர்ஷங்கள் (ஸ்வர்க்க லோகத்தில்) வசிப்பேன்' என்று என்னிடத்தில் ஸங்கேதம் செய்யப்பட்டிருக்கிறது" என்றார். (வனபர்வம், மேற்படி இடம்) தமிழில் கைலாச பர்வதம் என்றிருப்பதை ஆங்கிலத்தில் 'ஸ்வேத மலை' என்று கிஸாரி மோகன் கங்கூலி மொழிபெயர்க்கிறார்: "We have passed these four years peacefully ranging the woods. It hath been appointed by Pibhatsu that about the fifth year he will come to that monarch of mountains, the excellent cliff Sweta." இரண்டும் ஒரே மலையைத்தான் குறிக்கின்றன.

பாண்டவர்கள் அங்கே தங்கியிருந்த காலத்தில் அவர்களுடைய புரோகிதரான தௌம்யர் அவர்களுக்கு மந்தரம் முதலான மலைகளைப் பற்றியும் சூரிய சந்திரர்களுடைய இயக்கங்களைப் பற்றியும் விளக்கமாக எடுத்துச் சொன்னார். அந்த நான்கு பாண்டவர்களுக்கோ, ஒவ்வொரு நாளையும் கழிப்பது ஒரு வருஷத்தைக் கழிப்பது போலிருந்தது. "பாரதரே! அப்படியே அஸ்திரங்களைக் கற்கவேண்டி இந்திரனை அடைந்த அந்த ஸ்வேதவாகனனை (அர்ஜுனனை) நினைக்கின்ற பாண்டவர்களுக்கு அந்த மலையில் நீண்ட அந்தக் காலமானது அரிதில் சென்றது" என்கிறது பாரதம். (வன பர்வம், யக்ஷயுத்த பர்வம், அத். 145, பக். 607) கும்பகோணம் பதிப்பில் இந்த இடத்தில் அடிக்குறிப்பு ஒன்று இருக்கிறது. 'அப்பொழுது ஒரு மாதம் பிரயாஸத்தால் சென்றது' என்பது வேறுபாடத்தின் பொருள்' என்கிறது அது. கிஸாரி மோகன் கங்கூலி, 'ஒருமாதம் கழிந்தது' என்றே மொழிபெயர்க்கிறார்: "O Bharata, in this way, on that mountain those descendants of Bharata passed a month with difficulty, thinking of him of the white steeds, who had gone to Vasava's abode for learning arms."

இப்படி ஒருமாத காலம்-மிக நீண்ட பொழுதாக-கழிந்தபின்னர், தேவலோகத்தில் ஐந்து வருடங்களைக் கழித்த அர்ஜுனன் இந்திரனிடம் விடை பெற்றுக்கொண்டு தன் சகோதரர்களிடத்துத் திரும்பினான். இங்கே, அவன் தேவலோகத்தில் பெற்ற திவ்யாஸ்திரங்கள் என்னென்ன என்றொரு சிறு பட்டியல் இடம்பெறுகிறது. ஆக்னேயம் (அக்கினியாஸ்திரம்), வாருணம் (வருணாஸ்திரம்), ஸௌம்யம் (சோமன்-சந்திரனுக்கு உரியது), வாயவ்யம் (வாயுவாஸ்திரம்), வைஷ்ணவாஸ்திரம்*, ஐந்திராஸ்திரம், பாசுபதம், பிராம்மம், பாரமேஷ்ட்யம், ப்ரஜாபதி, யமன், தாதா (Dhata) ஸவிதா, த்வஷ்டா, வைஸ்ரவண (குபேரனுடைய) அஸ்திரம் என்பன அவை. (பின்னால், பன்னிரண்டாம் நாள் யுத்தத்தில் பகதத்தன் அர்ஜுனன்மீது தன் அங்குசத்தை வைஷ்ணவாஸ்திரமாக்கி எறிகிறான். அப்போது கிருஷ்ணன், தன் கையிலுள்ள குதிரைச் சவுக்கையும் கீழே போட்டுவிட்டு, அதைத் தன் மார்பில் தாங்கிக் கொள்கிறான். ஆகவே, அர்ஜுனனிடத்தில் வைஷ்ணவாஸ்திரம் இல்லை என்போர் உண்டு. அர்ஜுனனிடத்தில் வைஷ்ணவாஸ்திரம் இருந்தது என்பதற்கு இந்த இடம் சான்று.

இத்தனை திவ்யாஸ்திரங்களையும் பெற்றுக்கொண்ட அர்ஜுனன், இந்திரனை வணங்கி, அவனிடம் விடைபெற்றுக்கொண்டு கந்தமாதனத்தை வந்தடைந்தான். இந்திரனுடைய சாரதியான மாதலி செலுத்திக்கொண்டு வந்த அந்தத் தேர் வானத்தில் தோன்றியது. இந்திரனிடத்தில் அவனுடைய கிரீடத்தைப் பெற்றதால் கிரீடி என்ற பெயரை உடைய அர்ஜுனன் இந்திரனுடைய தேரிலிருந்து இறங்கி, தர்மபுத்திரரை நமஸ்கரித்தான். பாண்டவர்கள் அந்தத் தேரை வலம்வந்து, மாதலியையே இந்திரனாகப் பாவித்து, வணங்கி, உரையாடினார்கள். மாதலி தன் மகன்களுக்குக் கூறுவதுபோல் அவர்களுக்கு அறிவுரைகளைச் சொன்னான். பிறகு விடைபெற்றான்.

மாதலி சென்றதும் அர்ஜுனன், இந்திரன் கொடுத்த ஆபரணங்களையும் ரத்தினங்களையும் பாஞ்சாலிக்குப் பரிசளித்தான். தான் தேவலோகத்தில் பெற்ற ஆயுதங்களைப் பற்றியெல்லாம் தர்மபுத்திரனுக்கும் மற்ற பாண்டவர்களுக்கும் எடுத்துச் சொல்லிவிட்டு, அன்றிரவு நகுல-சகதேவர்களுடன் உறங்கினான். காலையிலெழுந்ததும் யுதிஷ்டிரனை அர்ஜுனன் வணங்கிக் கொண்டிருந்தபோது, வானத்தில் இந்திரனுடைய தேர் தோன்றியது. அங்கே வந்திறங்கிய இந்திரனைப் பாண்டவர்கள் வணங்கினார்கள். இந்திரன் யுதிஷ்டிரனைப் பார்த்து, "வேந்தே! பாண்டு நந்தன! நீ இந்தப் பூமியை ஆளப்போகிறாய். குந்தீபுத்திர! நீ க்ஷேமமாக மீண்டு, காம்யகவன ஆச்ரமத்தை அடைவாயாக. அரசே! பரிசுத்தனான அர்ஜுனனால் என்னிடத்திலிருந்து எல்லா அஸ்திரங்களும் அடையப்பட்டன. தனஞ்சயனால் பிரியமான காரியம் செய்யப்பெற்றவனாக இருக்கிறேன். இந்த அர்ஜுனன், மூன்று உலகங்களாலும் ஜயிக்க முடியாதவன்' என்று சொன்னான்."

இந்திரன் சொன்னபடி பாண்டவர்கள் காம்யக வனத்துக்குத் திரும்புவதற்கு முன்னால் அர்ஜுனன், கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்தது, சிவனிடத்தில் பாசுபதம் பெற்றது, பிற ஆயுதங்களை அடைந்தது, இந்திரன், தனக்குக் குரு தட்சிணையாக நிவாத கவசர்களை வென்று அழிக்குமாறு சொன்னது, ஹிரண்யபுரத்தை அழித்தது என்று எல்லாவற்றையும் விவரமாகச் சொன்னான்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com