உன்னத உறவு
கடைசியாகப் பார்க்க விரும்புபவர்கள் யாராவது இருந்தால் சீக்கிரமாக இன்னொரு முறை பார்த்துக்கொள்ளுங்கள் எனச் சத்தமாக கத்திக் கொண்டிருந்தார் அந்தப் பெரிய வண்டியின் மீது கையில் நீளமான வெள்ளைத்துணியுடன் நின்றிருந்த நபர். வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை என்பதற்கு இதோ மற்றோர் உதாரணம்.

பக்கத்து ஊர்களிலிருந்து வந்திருந்த மக்களும் திரண்டுவிட்டதால் முண்டியடித்த கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருந்தனர் அங்கிருந்த இரு காவலர்களும். மஞ்சுவிரட்டு, தீமிதி, தேர்தல் போன்ற சமயங்களில் சம்பிரதாயத்திற்காக மட்டும் ஊருக்குள் போலீஸார் வந்து போவது வழக்கம். ஆனால் இன்று நிலைமை கைமீறிப் போனதால் ஊரின் தலைக்கட்டு டவுனில் இருந்து போலீசை கூட்டியாரும்படி ஆகிவிட்டது.

சுற்றியிருந்தவர்கள் எவ்வளவோ ஆறுதல் சொல்லியும் கண்ணாமூச்சி விளையாட்டில் கால்தவறி விழுந்து வலி தாங்கமுடியாமல் கதறும் சிறு குழந்தையைப்போல அழுதுகொண்டிருந்தார் பண்ணையார். ஊரில் எப்படிப்பட்ட கொடிய துயரம் நிகழ்ந்தாலும் தனியாளாக நின்று அத்தனையையும் வென்றெடுத்தவர். இன்று அவரே தவித்து நிற்கும்படி ஆகிவிட்டது! சுற்றி நின்றவர்கள் அவருக்கு எப்படி ஆறுதல் சொல்வது எனத் தெரியாமல் கையை பிசைந்துக் கொண்டிருந்தனர்.

ஒன்றல்ல இரண்டல்ல கடந்த நாற்பது வருடங்களாக உடலும் உயிருமாக ஒன்றிப் போய்விட்ட உறவு இன்று தன்னைவிட்டுப் பிரியப்போவதை நினைத்து உடைந்து போயிருந்தார் பண்ணையார். இதுநாள்வரை ஊரில் மட்டுமல்ல ஊருக்கு வெளியில் ஒரு நல்லது கெட்டது நடந்தாலும் பண்ணையாருடனே வாழ்ந்து அவரை தூக்கிச் சுமந்த உறவு. வெளியில் சொல்லமுடியாத(!) எத்தனையோ நிகழ்வுகளை அறிந்த ஒரே உறவு. ஒரு சின்ன நகக்கீறல் பட்டுவிட்டால்கூடத் துடித்துப் போய்விடுவார். ஏதாவது ஒன்று என்றால் பதறிப்போய் உடனடியாக டவுனுக்குக் கொண்டுபோய் எல்லாம் சரியாகும்வரை தானே அருகிலிருந்து அனைத்தையும் கவனித்துக்கொள்வார்.

எல்லை அய்யனார் கோவிலில் திருஷ்டித் தேங்காய் உடைத்து, மாலையும், மஞ்சள் குங்குமமுமாக முதன்முறை பண்ணையாருடன் ஊருக்குள் நுழைந்தபோது ஊரே பண்ணையாரைப் பார்த்து பொறாமைப்பட்டது. "நம்ம பண்ணை அதிர்ஷ்டக்காரன்யா, இதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும்யா, காசும் பணமும் இருந்தாமட்டும் போதுமா? நம்ம ஆளு மாதிரி ரசனைக்காரனாகவும் இருக்கணும்யா" என ஊர்ப் பெரிசுகள் மந்தைவெளியிலும் டீக்கடையிலும் பேசிக்கொண்டார்கள். அன்றைய காலகட்டத்தில், ரோட்டில் இறங்கிவிட்டால் ஊரே ஒருகணம் நின்று பார்த்துவிட்டு பெருமூச்சுவிடும் அப்படி ஒரு அழகு.

அன்றுமுதல் இன்றுவரை ஊர்மக்கள் கண் பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு அமாவசைக்கும் தவறாமல் பூசணிக்காய் உடைத்து திருஷ்டி கழித்துவிடுவார். தினமும் தன் கையாலேயே குளிப்பாட்டி குங்குமம் வைப்பது, புதுப்பூ சூடிவிடுவது என இவர் செய்யும் வேலைகளை எல்லாம் பார்த்துவிட்டு, இவ்வளவு வயசான பின்னாலும் இந்த மனுஷனுக்கு ஆசையப் பாரு, பித்துப்புடிச்சு அலையுறாரு என ஊரில் கேலியும் கிண்டலும் பேசினார்கள். இன்னும் சிலர் "பண்ணை வயசான காலத்துல ஏன் இப்படி கஷ்டப்படுறீக, ஒரு வேலையாளை வச்சுக்கிடலாம்ல? இனிமே என்னத்தக் கொண்டு போகப் போறீக" எனப் பகடி செய்தார்கள். ஆனால் அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு எப்போதும்போலக் கண்ணை இமை காப்பதுபோல் பொக்கிஷமாகப் பார்த்துக்கொண்டார். உலை வாயை மூடலாம் ஊர் வாயை மூட முடியாதல்லவா.

"ஏம்பா, மோதிரம், செயின் ஏதாவது இருக்குதான்னு செக் பண்ணிடுங்க" எனக் கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர் கத்தினார். "நேரமாய்க்கிட்டே போகுது, பண்ணையார் வந்து ஒருமுறை பார்த்துட்டா துணியைப் போட்டு மூடிட்டு மேல ஆக வேண்டியத பாக்கலாம்" ஒருத்தர் அவரின் காதருகில் மெல்ல ஓதினார். அருகில் இருந்த இருவரின் தோள்களில் கை போட்டு எழுந்தவர் மெல்ல நடந்து வண்டியை நெருங்கி அதன் மீது கிடத்தப் பட்டிருந்த உருவத்தைச் சிறிது நேரம் வெறித்துப் பார்த்தார். சிதிலமடைந்திருந்த உருவத்தின் பகுதிகளை பெரிய பிளாஸ்டிக் உறையால் மூடியிருந்தார்கள். நடுங்கிய கைகளால் ஒருமுறை தொட்டு தடவிப் பார்த்துவிட்டு "ப்பா, ப்பா" என ஏதோ முனகினார். பாசி பிடித்த கிணற்றின் சுவரில் ஏற முடியாமல் சறுக்கிவிழும் தவளையைப் போல வார்த்தைகள் அவரின் தொண்டைக்குள்ளேயே வழுக்கி விழுந்தன.

சில நிமிட மௌனத்திற்கு பிறகு கூடியிருந்தவர்கள் அவரை ஆசுவாசப்படுத்தி அரவணைத்து பிடித்துக்கொள்ள, அந்தப் பெரிய வண்டியின் மீதிருந்தவர்கள் முழு உருவத்தையும் வெள்ளைத் துணியால் மூடி இறுக்கிக் கட்டினார்கள். காவலர்கள் கூட்டத்தை விலக்கி வழி ஏற்படுத்திக் கொடுக்க, வண்டி மெதுவாக நகரத் தொடங்கியது.

அதன்மேல் சலனமில்லாமல் கிடந்தது, நேற்றிரவு அடித்த புயலில் சாய்ந்த மரத்தில் சிக்கி அப்பளமாக நசுங்கிப்போன, தன்னந்தனியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பண்ணையாரின் ஃபியட் பத்மினி கார்!

ப. சரவணன்,
வர்ஜீனியா

© TamilOnline.com