தென்றல் பேசுகிறது...
பிரிட்டனில் பேசும்போது மிக் முல்வனி கூறியது, "சென்ற மாதம் 125,000 பணியிடங்களை நாங்கள் உண்டாக்கினோம். ஆனால் எங்கள் பொருளாதாரத்தை துரிதப்படுத்தப் போதிய ஆட்கள் இல்லை." இவர் வெள்ளை மாளிகையின் முதன்மைப் பணியாளர் (Chief of staff), அதிபர் ட்ரம்ப்பின் அமைச்சரவையிலும் இருக்கிறார். சட்டபூர்வமாக அமெரிக்காவுக்குள் வருவதற்கு ஏகப்பட்ட தடைகளை ட்ரம்ப் ஏற்படுத்தியுள்ளார். இன்னொரு புறம் பார்த்தால், போயிங் விமானக் கம்பெனி தனது போயிங் 737 மேக்ஸ் விமான உற்பத்திச்சாலையை மூடியுள்ளது. இந்த வகை விமானங்கள் விபத்துக்குள்ளானதில் 300 பேருக்குமேல் இறந்ததைப்பற்றி நாம் முன்னரே இங்கு பேசியுள்ளோம். இதன் மென்பொருள் நிரலில் இருக்கும் சில குளறுபடிகள்தாம் (software glitches) விபத்துக்குக் காரணம் என்பதை அறிந்தும், அதைத் துருவிப்பார்த்துச் சரிசெய்ய முடியாமைக்குத் தகுதியுள்ள ஆட்கள் கிடைக்காததே காரணமாக இருக்கலாம். அதற்கும் குடிவரவுக் கொள்கைக்கும் நிச்சயம் தொடர்பு உள்ளது. போயிங் ஒரு கம்பெனி மட்டுமே அமெரிக்க GDPயில் 0.5 புள்ளிக்கு ஆதாரமாக இருக்கிறது என்ற பட்சத்தில் அதன் தடுமாற்றம் பொருளாதார ரீதியாக எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஊகிக்கலாம். போதாக்குறைக்குச் சீனாவில் புறப்பட்டு ஹாங்காங், கொரியா, இரான், சவுதி அரேபியா என்று பரவிக்கொண்டு வரும் கரோனா வைரஸ் வேறு பெரிய அபாய விளிம்பை நோக்கி உலகத்தை இழுத்துப் போய்க்கொண்டு இருக்கிறது. எனவே அதிபர் கண்மூடித்தனமாகக் கொள்கையைப் பிடித்துக் கொண்டிராமல், காரண-காரியங்களைச் சிந்தித்து, வெவ்வேறு மட்டங்களில் அமெரிக்கப் பெருந்தேரை நகர்த்தவல்ல கற்றோரும் மற்றோரும் வருவதற்கான வழிவகைகளைச் செய்ய முனையவேண்டும். பின்தங்கி நிற்பதில் பெருமையில்லை.

★★★★★


குடிவரவுக் கொள்கை மாற்றம், குறிப்பாக எவருக்குப் புகலிடம் தருவது என்பதில் ஏற்பட்ட புரிதற்குறைவு, சிறு பொறியாக தில்லி ஷாஹீன்பாகில் தோன்றி, கிழக்கு தில்லியில் பெருந்தீயாகக் கனன்று எழுந்துள்ளது. இந்தக் கணம்வரை 35 பேர் இதில் பலியாகியுள்ளனர். வழக்கமாக உறுதியோடு எதையும் எதிர்கொள்ளும் மோதி அரசின் மெத்தனம் இவ்விஷயத்தில் வியப்பை அளிக்கிறது. எதிர்க்கட்சிகளோ எரிகிற கொள்ளியில் குளிர் காய்கின்றன. பி.ஜே.பி. அல்லாத மாநிலங்கள் எதிர்த்துள்ளன. ஆனால் இன்றைக்கு பாரதத்தில் நடப்பதற்குப் பெயர் அறப்போராட்டம் அல்ல என்பதை மட்டும் தெளிவுபடுத்தி, அடிப்படையில் நமது அமைதிக் கலாசாரம் இன்னமும் அழிந்துவிடவில்லை என்ற நம்பிக்கையுடன் விடியலை எதிர்பார்ப்போம்.

★★★★★


உலக மகளிர்தினச் சிறப்பிதழ் அரிய மாதர்குல மாணிக்கங்களை உங்கள் பார்வைக்குக் கொண்டுவருகிறது. வேலையிலிருந்து ஏதோ காரணத்தால் நின்ற பெண்களுக்கு மறுவாய்ப்பு தேடித்தந்து அவர்களது கல்வியையும் திறமையையும் மீண்டும் சமுதாயத்துக்குப் பயனுறச் செய்வதுடன், பிற்பட்ட நிலையில் வாழும் மாணவியருக்குத் திறனும் தைரியமும் கொடுத்து, தமது வறுமையென்னும் விஷவட்டத்தைத் தாண்டச் செய்யும் டாக்டர் சௌந்தர்யா ராஜேஷின் பேட்டி ஓர் ஒளிரும் வைரம். பெருநாரைகளுக்கு மறுவாழ்வு தரும் முனைவர் பூர்ணிமாதேவி ஒரு மாணிக்கம். நம்மைத் தன் இன்குரலால் கட்டிப்போடும் சூர்யகாயத்ரி ஒரு வைடூரியம். இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். வேண்டாம், நீங்களே இந்தச் சுரங்கத்தில் நுழைந்து அள்ளுங்கள் செல்வங்களை.

வாசகர்களுக்கு ஹோலி மற்றும் யுகாதிப் பண்டிகை வாழ்த்துகள்.

தென்றல்
மார்ச் 2020

© TamilOnline.com