சுபா பேரி
மெரில் லின்ச் நிதி நிறுவனத்தின் வெள்ளையரல்லாத முதல் நிதி ஆலோசகராகத் தொடங்கி, கிளை நிர்வாகியாகப் பணி செய்தபின் அதன் முதல் துணைத் தலைவராக உயர்ந்தவர் சுபா பேரி (Subha Barry). அதற்கு முன்பு பண்டச் சந்தையில் (commodity market) வர்த்தகம், ஒரு பிரிட்டிஷ் ஓய்வூதிய நிதிக்கு ஆய்வாளர், உலக வங்கியில் மேற்கு ஆப்பிரிக்கக் கடன்களை மதிப்பீடு செய்பவர் என்று பல அனுபவங்கள் இவருக்கு உண்டு.

புற்றுநோயை மூன்றுமுறை புறங்காணச் செய்த இவர், இப்போது அந்நோய் குறித்த பல பணிகளில் ஈடுபட்டுள்ளார். இவர் நியூ ஜெர்ஸி புற்றுநோய்க் கழகம், பிரின்ஸ்டன் நலவாழ்வு அறக்கட்டளை ஆகிய அமைப்புகளின் நிர்வாகக் குழுக்களில் சேவை செய்கிறார். 1997-ம் ஆண்டு 'Tribute to Women in Industry' மற்றும் 2000-வது ஆண்டு வங்கி மற்றும் நிதித் துறையில் சாதனையாளர் விருது ஆகியவற்றைப் பெற்றவர்.

முன்னோடித் தமிழ்-அமெரிக்கப் பெண் மணியான சுபா பேரியுடன் தொலை பேசியில் உரையாடியதிலிருந்து...

தென்றல்: இளமைக் காலமும் கல்வியும் பற்றிச் சொல்லுங்கள்...

சுபா பேரி: என் தாய் தந்தையர் கொல்கத்தாவில் இருந்தபோது நான் பிறந்தேன். ஆனாலும் நான் சென்னையைச் சேர்ந்தவள் தான். புது தில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா என்று என் தந்தை எல்லா இடங்களிலும் பணிசெய்ததனால் என்னுடைய சிறுவயது ஊர்சுற்றி வாழ்க்கையானது. ஆனாலும் சென்னையில் என் பாட்டி தாத்தாக்கள் இருக்கவே எங்கள் வேர் அங்குதான் இருந்தது.

சிறுவயதில் நான் மருத்துவராக ஆசைப்பட்டேன், இப்படியாவதல்ல என் ஆசை. தென்னிந்தியாவின் எதிர்பார்ப்புகள் என்ன என்று உங்களுக்குத் தெரியுமே -டாக்டராகவோ, எஞ்சினியராகவோ ஆகவில்லை என்றால் பேசாமல் படுத்துத் தூங்கவேண்டியதுதான்.

சமீபத்தில் ஹார்வார்டு பல்கலையின் தலைவர் அறிவியல் துறையில் பெண்கள் பற்றி விமர்சிக்கையில் அவர் தெற்காசியப் பெண்களைப் பற்றிப் பேசவில்லை என்று நினைக்கிறேன். நமது சமூகத்தில் கணிதமும் அறிவியலும் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றன!

ஒருவழியாக, நான் கணக்காளராகி விட்டேன். எனது பி.காம் படிப்பை மும்பையின் போதார் கல்லூரியில் செய்தேன். C.A.வையும் மும்பையில் முடித்த பின் மேற்படிப்புக்கு உதவித்தொகை பெற்று ரைஸ் பல்கலைக்கு (ஹ¥ஸ்டன்) வந்தேன். கணக்கியலில் MBA பெற்றேன்.

தெ: நீங்கள் செய்த பணிகளும், உங்கள் வளர்ச்சியும் எப்படி நிகழ்ந்தன?

சு: உலகவங்கியில் மேற்கு ஆப்பிரிக்கத் திட்டப்பணிப் பகுதியில் சிறிதுகாலம் பணியாற்றிவிட்டு பேங்கர்ஸ் டிரஸ்ட் வங்கியின் ஓய்வூதியப் பிரிவில் சேர்ந்தேன். அதையடுத்ததுதான் பண்டச் சந்தை வர்த்தகம்.

1989-ல் மெரில் லின்ச்சில் நிதி ஆலோசகராக நுழைந்தேன். இந்தப் பதவியை 2001 வரை வகித்தேன். 1995-லிருந்து எனது வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை தருவது தவிர ஒரு கிளையை நிர்வகிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. இவற்றை நான் வெற்றிகரமாகச் செய்தேன்.

மெரில் லின்ச்சின் உயர்மட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் எனக்குச் சாதகமாக அமைந்தது. 2000-ம் ஆண்டில் ஸ்டான் ஓ நீல் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கர் ஓர் உயர்நிலைப் பதவிக்கு வந்தார். அவர் புதிய செயல்பாட்டுக்கான எண்ணங்களோடு வந்தார். அவரை நன்கு அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றேன்.

அமெரிக்காவின் பலதரச் சமூகக் கலாசாரம் அரிய வர்த்தக வாய்ப்புகளை அளிப்பதாக நான் கருதினேன். வெள்ளையரல்லாத ஒரே கிளை-நிர்வாகி நான்தான். எனது அனுபவத்தினால் இதிலே வணிக வாய்ப்பை நான் கண்டுகொண்டேன்.

அது முக்கியமல்ல; எது முக்கியம் என்றால், 8 ஆண்டுகள் நான் மிக வெற்றிகரமாகச் செயல்பட்ட போதும், மற்றொரு வெள்ளையரல்லாதவரை அவர்கள் அந்தப் பொறுப்புக்கு எடுக்கவில்லை.

ஏன் என்று ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவேளை எல்லா வாடிக்கையாளர்களும் வெள்ளையர்கள் என்பது காரணமாக இருக்கலாம். ஆனால் யதார்த்தம் அதுவல்ல.

தனக்குப் பழகிவிட்டதைச் சவுகரியமாக மக்கள் உணருகிறார்கள். ஒரு வழியில் சென்று, வெற்றிகரமாக வணிகம் நடந்தால், அதை ஏன் மாற்றவேண்டும்?

மாற்றம் ஏன் தேவைப்படுகிறது என்றால் இங்கே மக்கள் கலவை விகிதம் மாறி விட்டது. நீங்களும் நானும் ஒரே ஒரு இந்தியப் பலசரக்குக் கடைக்குச் சென்று வந்தோம். திடீரென்று பார்த்தால் ஐந்தாறு கடைகள் வந்துவிட்டன. தமிழ்த் திரைப்படம் பார்க்க ஒரு காலத்தில் டி.வி.டி.தான் இருக்கும். இப்போதோ நாம் திரையரங்குகளில் போய்ப் பார்க்கமுடிகிறது. இந்த மாற்றத்தை அதே சமூகத்தில் இருப்பவர்கள் முதலில் உணர்கிறார்கள்.

வெள்ளையரான எனது உயரதிகாரி இதை உணரவேண்டும் என்று எதிர் பார்ப்பது நியாயமல்ல. இந்தியச் சமூகத்திற்கு ஏற்பட்டது போன்ற மாற்றங்கள், ஹிஸ் பானியர்கள் மற்றும் சீனர்களுக்கும் இங்கே ஏற்பட்டது.

பிற சமூகத்தினரைப் பணிக்கு அமர்த்தாத கொள்கைக்கு மாறாக எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. 'யாராக இருந்தாலும் நிதி நிறுவனச் சேவைகள் அவர்களுக்கும் தேவை. அதைப் பூர்த்தி செய்தால், நிறுவனம் லாபம் பெறும்' என்பதே அந்த எண்ணம்.

இந்த எண்ணத்தை என் மேலாளர்கள் ஒப்புக்கொண்டு ஆதரித்தனர். அக்டோபர் 2001-ல் இந்த எண்ணம் செயல்வடிவம் பெற்றது: Multicultural and Diverse Business Development Group உருவாயிற்று.

எனது கவனம் முழுவதும் தெற்காசியர்கள் மேலேயே இருந்தது. எனவே முதன்முதலில் ஜோதி சோப்ரா என்னும் தெற்காசியரைப் பணிக்கு எடுத்துக் கொண்டேன். அவர் பிரிட்டனில் வளர்ந்த வட இந்தியர். நான் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர். பலவகையிலும் நாங்கள் ஒருவருக்கொருவர் முழுமை செய்பவராக இருந்தோம். இருவருமே இந்தியர்களான போதும், இருவேறு உட்பிரிவுகளுக்கு நாங்கள் பிரத்தியேகமானவராக இருந்தோம். இது எங்களுக்கு மிகுந்த அனுகூலமாக இருந்தது.

ஜோதி வணிக உத்திகளிலும் நான் விற்பனையிலும் வல்லவராய் இருந்தோம். இந்தக் கூட்டமைப்பு 2001-ல் எங்களுக்கு வெற்றிகரமானதாக அமைந்தது.

தெ: உங்கள் சமூக ஈடுபாடுகள்...

சு: சென்ற ஆண்டு 'அமெரிக்க இந்திய அறக்கட்டளை' (American India Foundation) நியூயார்க்கில் நடத்திய ஏ.ஆர். ரஹ்மானின் 'பாம்பே ட்ரீம்ஸ்' நிகழ்ச்சிக்குத் மெரில் லின்ச் துணைநின்றது. எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் பல உயர்மட்ட அதிகாரிகள் இந்நிகழ்ச்சிக்கு வந்தனர். இந்தியர்களின் செழுமை, செல்வாக்கு ஆகியவைபற்றி அவர்கள் நேரடியாக அறியமுடிந்தது. அதன் தாக்கத்தை நம்பவே முடியாது.

இரண்டாவதாக, அந்த நிகழ்ச்சியில் ஒரு மில்லியன் டாலர் நிதி திரட்டப்பட்டது. இது நமது வலுவைக் காட்டியது. இது மிகவும் முக்கியம். மேல்நிலை அலுவலரின் ஆதரவு நமது முயற்சிகளுக்குக் கிடைக்க இந்தப் புரிதல் மிக அவசியம்.

தெ: நீங்கள் அமெரிக்காவுக்கு வருவதற்கான காரணங்கள்

சு: இந்தியாவிலேயே இருந்தால் ஒரு கல்யாணம் செய்துகொண்டு இருந்திருப்பேன். வேலைக்குப் போகக்கூட விட்டிருக்க மாட்டார்கள். ஆனால் நான் என்னை ஒரு தொழில்முறை (professional) நபராகக் கருதினேன். அதற்கு முதலில் நான் சில தளைகளை உடைக்க வேண்டியதாக இருந்தது.

என் குடும்பம் மிகப் பாரம்பரியமான தென்னிந்தியக் குடும்பம். என் தாயார் தனது தலைமுறையில் முதல் பெண் பட்டதாரி. என் தலைமுறையில் நான்தான் திருமணம் ஆகாமலே வீட்டுக்கு வெளியே சென்ற முதல் பெண். இதுவே ஓர் ஆணாக இருந்தால் திருமணம் செய்துகொள்ளாமல் வெளி நாட்டுக்குப் போய்ப் படித்திருக்கலாம். அவரைக் குடும்பம் ஆதரித்திருக்கும். நானும் மிகவும் போராடத்தான் வேண்டியதிருந்தது. பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கா விட்டால் தங்கள் கடமையில் தவறியதாகப் பெற்றோர் கருதினர்.

நானும்-உண்மையோ கற்பனையோ-சில மனத்தடைகளை வைத்திருந்தேன். என் மனதில், திருமணம் என் வேலையில் முன்னேறத் தடங்கலாகத் தோன்றியது. எனவே இங்கே சுதந்திரமாக வரவே விரும்பினேன். ஓரளவு சில எதிர்பார்ப்புகளை நான் சிதைத்திருக்கலாம், நான் இங்கு வந்தபோது சிலர் வருத்தப்பட்டனர். எனக்கு இங்கே படிக்க நிதியுதவி கிடைத்திருந்தது. என் குடும்பம் அதிகம் செலவழிக்காமலே நான் இங்கு வரமுடிந்தது.

ரைஸ் பல்கலைக்கு வந்தபோது அற்புதங்கள் எல்லாவற்றுக்கும் எனக்கும் அனுமதிச் சீட்டு கிடைத்துவிட்டதாக நினைத்தேன்.

நல்ல கல்வி முக்கியம் என்றாலும், அந்தக் கல்வியை வைத்துக்கொண்டு நீ என்ன செய்கிறாய் என்பது இன்னும் முக்கியம். திருமண நாளுக்கும் திருமணத்திற்கும் இருக்கும் வித்தியாசம் என்று நான் அதைச் சொல்வேன். திருமண நாள் என்பது ஒருநாள் தான். திருமணம் என்பதோ வாழ்நாள் முழுவதுக்கும் ஆனது. ஆக, கல்லூரிக்குப் போய்ப் பட்டம் பெறலாம். ஆனால், அந்த அனுபவத்தை வைத்து வாழ்க்கையில் நீ என்ன செய்கிறாய் என்பதுதான் நீ என்னவாக ஆகப்போகிறாய் என்பதை நிர்ணயிக்கிறது.

தெ: உங்களுக்குள்ளே ஒரு கலகக்காரர் இருக்கிறார்...

சு: அதுதான் என்னைப் பற்றிய நேர்மறையான சித்திரம். இன்னும் நான் அப்படித் தான். என்னுடைய சிறுவயதிலிருந்தே நான் பெற்ற நல்லவற்றில் ஒன்று என்னவென்றால், படிப்பைப் பொறுத்தவரை நான் எவ்வளவு வேண்டுமானாலும் ஆசைப்படலாம். நமது சமூகத்தின் நோக்கு அப்படிப்பட்டது. ஒருவர் படித்துக்கொண்டே இருந்தால் அவரை மற்றவர்கள் ஆதரிக்கிறார்கள். ஆக, கல்வி தான் விடுதலைக்கான இறுதி வழி என்ற எண்ணம் என்னை இயக்கியது.

தெ: உங்களை உந்தும் சக்திகள் எவை?

ப: என் குடும்பத்தினர்தாம். என் தந்தையின் தாக்கம் மிகப் பெரியது. அவர் வேலைப் பித்தர், எனவே அவரை அதிகம் பார்க்க முடியாது. வெற்றிகரமான வணிக நிர்வாகி. அவருடைய ஊக்கம், ஆர்வம், கருணை, மற்றவர்கள் மேலான செல்வாக்கு இவற்றை நான் வியப்பதுண்டு. அவருடைய தலைமை, மற்றவர்களை எவ்வளவு எளிதில் அவர் தன்னோடு இணைத்துக் கொள்வார் என்பது எனக்கும் உற்சாகம் தரும். நான் என்னவாக வரப்போகிறேன் என்பதில் அவர் கொடுத்த ஊக்கத்துக்குப் பெரும்பங்கு உண்டு.

எனது கல்விக்கு அம்மா சரோஜா விஸ்வநாதன்தான் வழிகாட்டி. நான் 98% மார்க் வாங்கினால், அம்மா 'மீதி 2% எங்கே போச்சு?' என்று ஜோக் அடிப்பார். படிப்பில் உயரங்களை எட்டுவது நமது வேலை என்பதை எப்போதும் நினைவூட்டுவார். அது தான் மந்திரச் சாவி. எதைச் செய்தாலும் வெகு நேர்த்தியாகச் செய்வது பழக்கமாகிவிடும்.

என் தாத்தா சங்கரநாராயணனைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். வேறொரு தலை முறையைச் சேர்ந்த அவர் திறந்த மனது கொண்டவராக இருந்தார்.

நான் வணிகக் கல்லூரியில் ஐரிஷ் அமெரிக்கரான ஜிம் பேரியைச் சந்தித்துக் காதலித்தேன். அவரை மணக்க விரும்பி னேன், குடும்பத்தினரின் சம்மதம் இருந்தால் தான். ஒரு புதிய வாழ்க்கையைப் பழைய வாழ்வின் சாம்பலில் தொடங்கமுடியாதே.

குடும்பத்தினர், உறவினர் எல்லோருக்கும் இது கேள்விப்படாத அதிசயம். எதிர்த்தார்கள். என் தாத்தா மட்டும் அப்போது எனக்குப் பரிந்து முன்வந்தார். "அவளது தீர்மானத்தை நம்பவேண்டும். நாம் அவளை வளர்த்திருக்கிறோம். ஆகவே அவளது தேர்வு சரியானது என நம்ப வேண்டும்" என்று சொன்னார்.

ஜிம்மை நான் மணந்து இப்போது 19 ஆண்டுகள் ஆகிவிட்டன. என் தீர்மானம் சரியானதாகத்தான் இருந்திருக்கவேண்டும். என் தாத்தா பக்தியுள்ளவர்தான் ஆனால் சடங்குகளில் சிக்கியவரல்ல. ஆன்மிகவாதி. மிக மேம்பட்ட மனிதர்.

தெ: உங்கள் குழந்தைகளைப் பற்றி...

சு: என் மகளை அவளுக்கு 8 வயது ஆகும்வரை ஒரு தென்னிந்தியச் செவிலி பார்த்துக்கொண்டார். எனவே அவள் நல்ல தமிழ் பேசுவாள். என் மகனுக்குத் தமிழ் புரியும், ஆனால் தமிழில் என் அம்மாவுடன் பேச மறுக்கிறான். என் அம்மாவின் தாக்கம் அவர்கள்மேல் எப்போதும் உண்டு.

ஆண்டுதோறும் இந்தியாவுக்குச் செல்கிறோம். என் பாட்டி இன்னும் அங்கு இருக்கிறார். அவருக்கு ஆங்கிலம் தெரி யாது, ஆனால் குழந்தைகள் அவரோடு உரையாடும்!

குழந்தைகளுக்குத் தென்னிந்திய உணவு ரொம்ப இஷ்டம். நான் அதை 'soul food' என்று அழைப்பேன். அவர்கள் தினமும் அதைச் சாப்பிடாவிட்டாலும், உடம்புக்கு வந்தால் உடனே ரசம் சாதம் கேட்பார்கள்.

தெ: அமெரிக்காவில் இந்தியர்கள்...

சு: சமீபத்தில் ஏராளமான பேர் இங்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் பொருளாதார வளர்ச்சி, வீழ்ச்சி, இறக்கம் என்று இந்தச் சுழல்களைச் சந்திக்கவில்லை. செல்வத்தை நிர்வகிப்பது, சொத்துத் திட்டமிடுதல், உயில் எழுதுதல், பொருளாதாரத் திட்டமிடுதல், ஓய்வுக்காலத்தைத் திட்டமிடுதல் என்று இவற்றில் அவர்களுக்கு அனுபவம் இல்லை.

தெ: இதுகுறித்த சில வழிமுறைகள் சொல்லுங்களேன்...

சு: தெற்காசியச் சமூகத்தில் சில இயல்பான விஷயங்கள் உண்டு. வாடிக்கையாளர் என்ற முறையிலும், நிதிச் சேவை நுகர்வோர் என்ற முறையில் அவர்கள் ரொம்பச் சிறப்பானவர்கள்.

இங்கே வரும்போது வெறும் அறிவுத் திறனைத்தான் கொண்டு வந்தோம். தொழில்நுட்பம் விரிவடைந்தபோது, அதில் வல்லுநரான நாம் மிக இயல்பாக அதில் நம்மைப் பொருத்திக் கொண்டோம். செல்வம் வளரும்போது, நாம் நமது குழந்தைகளுக்குக் கல்வி, நல்ல வீடு, சில சமயம் மற்றொரு வீடு, நல்ல கார், இன்னொரு கார்-இப்படி நமது தேவைகளை வரிசைப்படுத்துகிறோம். அதே நேரத்தில் ஊரில் இருக்கும் அவ்வளவு வசதியில்லாத நம் குடும்பத்தையும் ஆதரிக்க வேண்டியிருக்கிறது.

இப்போது செல்வநிலை இன்னும் உயர்ந்து விட்டதால் தர்ம காரியங்கள் செய்யத் தொடங்கியிருக்கிறோம். 'நான் எதை விட்டுச் செல்வேன்' என்று சிந்திக்கத் தொடங்கியிருக்கிறோம். தேவைகளின் வரிசையில், அடிப்படைத் தேவைகளைத் தாண்டி சாதனைகளைத் தொடும் செல்லும் தளத்துக்கு வந்துவிட்டோம்.

அதைச் செய்யும்போது, தெற்காசியச் சமுதாய உறுப்பினர்களான நாம், அந்தச் சமூகத்தின் தேவைகளுக்கு மட்டுமல்லாமல், பெண்கள், சிறுபான்மையினர், அறக் கட்டளைகள் என்று பரந்துபட்ட கொள்கை களை ஆதரிக்கத் தொடங்கிவிட்டோம். நிதி நிறுவனங்கள் அவர்களுக்குச் சேமிப்பைச் சொல்லித் தருவதோடு, எவ்வாறு அறச் செயல் செய்யலாம் என்பதையும் சொல்லித் தரவேண்டும்.

இப்போது இங்கேயே பிறந்து வளர்ந்த அடுத்த தலைமுறை வந்துவிட்டது. அவர்கள் வசதியாக வளர்ந்தவர்கள். வறுமை என்றால் என்ன என்று தெரியாதவர்கள். அவர்களுக்குப் பொருளாதாரத் திட்டமிடுதலைச் சொல்லித் தரவேண்டும். இது மெரில் லின்ச் போன்ற நிறுவனங்களின் முக்கியக் கடமை என்று நான் நினைக்கிறேன்.

தெ: பல-கலாச்சார சமூகங்களுக்கான திட்டங்கள் என்னென்ன...

சு: எங்களுடைய திட்டம் மூன்று திசை யிலானது. ஒன்று, பல-கலாச்சாரச் சமூகங்களை ஆராய்ந்து, அவற்றுக்கு எங்களது சேவையை விஸ்தரிப்பது.

இரண்டாவது, அவர்களது தொழில்முறை, சமூக, சமயரீதியான முக்கிய அமைப்புகளை இனம் காணுதல்.

மூன்றாவது, அவற்றை எட்டுவதற்கான திட்டங்கள் வகுப்பது. விழாக்கள், கல்வி நிகழ்ச்சிகள் நடத்துதல், அவற்றின் நிர்வாக அமைப்புகளில் பங்குபெறுதல் ஆகியவை மூலமாக இதைச் செய்வது.

இதைச் செய்ய எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. கடைசியில், அந்தச் சமுதாயத்தில் நிதியைச் சேமிக்கவும், முதலீடு செய்யவும் இருக்கும் வாய்ப்புகளைப் பற்றிய விழிப்புணர்வை வளர்ப்பது எங்கள் நோக்கம். மெரில் லின்ச் போன்ற நிறுவனங்கள் இதனை புத்திசாலித்தனமாகச் செய்ய வழிகாட்டுகின்றன.

தெ: எந்தச் சமுதாயத்தை அணுகுவதென்று எப்படித் தீர்மானிக்கிறீர்கள்?

சு: அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் குறைந்தபட்சம் இத்தனைபேர் ஒரே பகுதியில் வசிக்கவேண்டும். தெற்காசியர்கள் அயோவா, மில்வாக்கி ஆகிய இடங்களில் சிலர் இருக்கலாம். ஆனால் அது போதாது. நாங்கள் இதில் ஈடுபடுத்தும் வளங்களுக்குத் தக, போதிய எண்ணிக்கையில் இருக்க வேண்டும். பிறகு அப்படி இருக்கும் இடங்களை வரிசைப் படுத்துகிறோம். கலி·போர்னியாவில் தொடங்கி, வளை குடாப் பகுதி, லாஸ் ஏஞ்சலஸ், சிகாகோ, மயாமி என்று இப்படி.

தெற்காசியச் சமுதாயத்தின் சிறப்பு என்னவென்றால், அதிலே கால் பகுதிப்பேர் ஆண்டுக்கு 100,000 டாலர்களுக்குமேல் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் சிகாகோவில் இருந்தாலும் சரி, நியூயார்க்கில் இருந்தாலும் சரி, அவர்களது செல்வச் செழிப்பு குறிப்பிடத் தக்கது.

ஹிஸ்பானிய சமுதாயத்தை அப்படிச் சொல்ல முடியாது. அவர்களின் எண்ணிக்கை, செல்வச் செழிப்பு இரண்டையும் ஆய்ந்து அறிந்த பின்னரே ஓரிடத்துக்கு நாங்கள் செல்லமுடியும்.

இடத்தைத் தேர்ந்தெடுத்த பின்னர் எந்த அமைப்புடன் பங்குகொள்வது என்பதைத் தீர்மானிப்போம். தெற்காசியர்களுக்கு American Association of Physicians of Indian Origin மற்றும் The Indus Enterpreneurs ஆகியவற்றை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். மதம் சார்ந்த அல்லது சமூக அமைப்புகளைத் தவிர்த்தோம். ஒரு தொழில்முறை அமைப்பில் நல்ல தெளிவு இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம். அவற்றின் தேசிய, மாநில மற்றும் ஊரகக் கிளைகளில் பங்கு கொண்டோம். ஆங்காங்கே இருக்கும் நிதி ஆலோசர்கள் இவற்றின் நிர்வாகக் குழுக்களில் பங்கெடுத்தனர். அது மேற்கொண்டு வளர்ச்சிக்கு உதவியது.

தெ: தெற்காசியர்களின் தற்போதைய நிலைமை குறித்து...

சு: எண்ணிக்கையில் அதிகம் இல்லாது இருக்கலாம். ஆனால் செல்வ வளத்தில் அவர்கள் விஞ்சி நிற்கிறார்கள்.

தெ: சமுதாய, கலாசார அமைப்புகள் ஒரு சமூகத்தை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவற்றுடன் நீங்கள் கைகோர்ப்பது உண்டா?

சு: அதில் ஒரு பிரச்சனை உண்டு. சமூக அமைப்புகளில் நாங்கள் பங்கேற்றால், அதிலிருந்து எங்களுக்குக் குறிப்பிடத் தக்க வியாபார முன்னேற்றம் ஏற்படுவதில்லை. எங்களுடைய குறைந்த வளங்களைத் தொழில் முறை அமைப்புகளில் ஈடுபடுத்துகையில் அதிக நல்விளைவைக் காணமுடிகிறது.

இந்தியச் சமூகம் பல்வேறு உட்பிரிவு களைக் கொண்டது. அதில் ஏராளமான துணைக்-கலாசாரங்கள் நிரம்பியிருக்கின்றன. இப்படி 50 கலாசார அல்லது சமூக அமைப்புகளுடன் செயல்படுவது கடினம். ஆனால் தொழில்வகை அமைப்புகளில் தமிழ்ப் பொறியாளரும் இருப்பார், கன்னட மருத்துவரும் இருப்பார். இது எங்கள் பணியை எளிமையாக்குகிறது.

தெ: தற்போது ஆசிய இந்தியர்கள் சொந்தத் தொழில் தொடங்குகிறார்கள். சில உள்ளூர்ச் சரக்குகள், சில உலகளாவிய பொருள்கள். சிலர் விளம்பரம் செய்கின்றனர், சிலரால் மக்களை எட்ட முடியவில்லை. இதைப்பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

சு: தெற்காசியர்களின் வணிகம் நல்ல வளர்ச்சியுற்று இருக்கிறது. அவர்களில் ஒரு வலுவான பகுதியினருக்கு எங்கள் சேவைகளை வழங்குகிறோம். உணவு விடுதிகள், மோட்டல்கள், 7/11 உரிமையாளர்கள், சிறுதொழில் உரிமையாளர்கள்0-தொழில் நுட்ப நிறுவனத்தில் இருந்து 'கேஸ் ஸ்டேஷன்' உரிமையாளர் வரை-இவர்கள் இதில் அடங்குவர். விளம்பரத்தைவிட, நுகர்வோர் கூறும் நல்ல வார்த்தையைத்தான் அவர்கள் பெரிதும் நம்புகிறார்கள்.

தரைமட்டத்தில் நம்பகத் தன்மையை வளர்ப்பதை நாங்களும் முக்கியமாகக் கருதுகிறோம். பிறகுதான் வருகிறது விளம்பரம். அடிமட்டத்தில் வேலை செய்வதன் மூலம் எங்கள் நுழைவுக்கான உரிமை யைப் பெறுகிறோம். அது இல்லாமல் விளம் பரம் செய்தால், அதை வெறும் வியாபாரத் தந்திரமாகவே மக்கள் பார்ப்பார்கள்.

சிறிய குழுக்களுக்காவது வளர்ச்சிப் பணிகளை செய்யாவிட்டால், நீடித்த நம்பகத்தன்மையைப் பெறமுடியாது. அதை அடிமட்டத்தில் செய்து, அந்தச் சமூகத்துடன் வணிகம் செய்யும் உரிமையை நாங்கள் சம்பாதித்தபின், விளம்பரம் செய்வோம்.

மெட்லை·ப் அல்லது நியூயார்க் லை·ப் இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். எத்தனை நாட்களாக இதே சமூகத்துடன் வியாபாரம் செய்துவருகிறார்கள்! அவர்களின் உச்ச வணிகம் செய்வோர் விளம்பரங்களில் பத்து ஆசிய சாதனையாளர்கள் இருந்தால் அதில் ஏழு பேர் தெற்காசியர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் தம் உரிமையைச் சம்பாதித்துவிட்டனர்.

நாங்கள் பெரிய நிறுவனம் என்பதனால் விளம்பரத்தைப் பார்த்ததும் எங்களைத் தேடி ஓடிவருவார்கள் என்று கற்பனை செய்துகொள்ளக் கூடாது. மக்கள் மிகுந்த புத்திசாலிகள்.

மற்ற பல நிறுவனங்களைப் போலல்லாமல், நாங்கள் நேரடி விற்பனை நிறுவனம் அல்ல. எல்லாமே ஆலோசகர் வழியேதான், தனிநபர் கவனத்துடன், வர்த்தகம் நடக்க வேண்டும். அங்குதான் மெரில் லின்ச் ஒரு நீண்டநாள் உறவை ஏற்படுத்திக்கொள்கிறது.

தெ: இந்த நீண்டநாள் உறவைத்தான் மெர்ரில் லின்ச் போன்ற நிறுவனங்களில் நீங்கள் வலியுறுத்துகிறீர்கள், இல்லையா?

சு: ஆசியச் சமூகத்தை மட்டுமல்ல, பெண்கள், ஹிஸ்பானிய சமூகம், ஆப்பிரிக்க அமெரிக்கச் சமூகம், ஓரினச் சேர்க்கையாளர் என்று பல குழுவினரின் உறவுகளையும் வலியுறுத்துகிறேன். இந்தக் குழுக்களை நமக்குப் பிடிக்குமா பிடிக்காதா என்பது கேள்வியல்ல, இங்கே வணிக வாய்ப்புகள் இருக்கின்றன என்று சுட்டிக் காட்டுகிறேன். ஒவ்வொரு குழுவும் தம்மை எவ்வாறு அணுக வேண்டும் என்று கருதும் தனித்தன்மையைப் புரிந்துகொண்டு, அவர்களது தேவைகளையும் குறிக்கோள்களையும் புரிந்துகொண்டு அவர்களை அணுக வேண்டும். உதாரணமாகச் சிறுபான்மைச் சமூகத்திற்கும் பெரும்பான்மைச் சமூகத்துக்கும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு; சிறுபான்மைச் சமூகம் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதை வாழ்க்கையின் அத்தியாவசியமாகக் கருதுவதால், அவர் களில் பெரும்பாலோர் தம் குழந்தைகளின் கல்விக்கு அதிக அளவில் பணம் ஒதுக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

தெ: புற்றுநோய் பற்றிய உங்கள் அனுபவம்...

சு: 1997-ம் ஆண்டு முதன்முதலில் புற்று நோய் தாக்கியது. ஹாட்கின்ஸ் நோய் (Hodgkin's Disease-நாளமில்லாச் சுரப்பிகளைத் தாக்கும் புற்று) தாக்கியபோது என் குழந்தைக்கு இரண்டு வயது. அதைப் பார்த்தபோது ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்டேன்: சர்வசாதாரணமாக நினைத்துச் சரியாக வேலை வாங்கிய என் உடல் கொஞ்சம் நொய்மையானதுதான் என்பதே அது. 'நீ சின்ன வயசுலே சாப்பிட்ட தயிர் சாதம் உன்னை ஆரோக்கியமா வைத்திருக்கும்'னு அம்மா சொல்வார்கள். வைக்கவில்லை.

என் தந்தை இறந்தபின்னர் 'யார் இல்லாவிட்டாலும் வாழ்க்கை தன்பாட்டுக்கு நடக்கும்' என்பதைப் புரிந்துகொண்டேன். நாம் ஏதோ தோற்கடிக்க முடியாதவர்கள் போலவும், நாம் இல்லாவிட்டால் உலகமே ஸ்தம்பித்துவிடும் என்பதுபோலவும் நாம் வாழ்கிறோம். உண்மையில், வாழ்க்கை நடக்கும்; சில சமயம் நாம் இல்லாவிட்டால் நன்றாகவே நடக்கும். அது எனக்கு அடக்கத்தைத் தந்தது.

இன்னொரு முக்கியமான விஷயமும் நடந்தது. எல்லோரும்-குடும்பம், நண்பர்கள், நம்பமுடியாத அளவுக்கு மற்றொரு குடும்பம் போல என் நிறுவனம்-எல்லோருமே என்மீது ஆதரவைப் பொழியத் தொடங்கினார்கள். அது என்னைப் பிரமிக்கச் செய்தது. ஓ, இதோ ஒரு பெரிய நிறுவனம், அது அன்பால் நிரம்பியிருந்தது. நிர்வாகம் முழுவதும் எனக்குப் பரிவு காட்டியது.

என்னுடைய கடினமான அந்த நாட்களில் நான் நன்கு செயலாற்ற வேண்டும் என்று இன்னும் கடினமாக உழைத்தேன். பரிசீலனை நேரம் வந்தபோது, எனது அணி சாக்குப்போக்குச் சொல்லாமல், திறம்படச் செய்திருந்ததைப் பார்த்து என் நிர்வாகம் மகிழ்ந்தது.

நான் புற்று நோயாளிகளுடன் என் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். போரிடத் தூண்டுகிறேன்.

தெ: ஸ்டெம் செல் ஆய்வினால் பலன் அடைந்த நீங்கள் அதை ஆதரிக்கிறீர்களா?

சு: நிச்சயம். எனக்கு முதல் பெண்மணி யான லாரா புஷ் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தபோது, எனது மற்றும் என் கணவரின் சார்பில் ஸ்டெம் செல் ஆய்வை ஆதரித்து நோய்நிவாரண வழிகளை ஏற்படுத்த வற்புறுத்தினோம்.

தெ: சமுதாயப் பாதுகாப்பை (Social Security) புஷ் நிர்வாகம் தனியர் வசம் தந்ததைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

சு: நிதிச் சேவை செய்யும் அணியில் இருக்கும் நாங்கள் மிகவும் மகிழ்கிறோம். மக்கள் தமது சமுதாயப் பாதுகாப்பு நிதியை என்ன செய்யலாம் என்பதில் மக்களுக்கு சுதந்திரம் இருப்பது நல்லது; ஆனால் அதுபற்றி அவர்கள் போதுமான அளவு கற்கவேண்டும்.

தெ: ஆசிய இந்திய, குறிப்பாகத் தமிழ்ச் சமூகத்தின் இளைய தலைமுறைக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

சு: முதலாவது, புதியவற்றை முயற்சி செய்யும் துணிச்சல் கொள்ளுங்கள். சவால் களை எதிர்கொள்ளுங்கள், தோல்விக்கு அஞ்சாதீர்கள். வாழ்க்கையின் வெற்றிக்கு ஒவ்வொரு தோல்வியும் படிக்கல்தான்.

அவருக்கு நன்றி கூறி விடைபெற்றோம்.

சி.கே. வெங்கட்ராமன், மதுரபாரதி

© TamilOnline.com