பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும்...
திருமண மண்டபத்தில் தோழிகளுடன் சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருந்த மகள் சம்யுக்தாவைப் பெருமையுடன் பார்த்தாள் மகேஸ்வரி. இன்று சம்யுக்தாவிற்கு திருமண நிச்சயம் நடந்தது. அந்தச் சம்பந்தத்தில் ஏற்பட்ட சந்தோஷம் அவள் முகத்தில் தெரிந்தது. கன்னங்கள் ரோஜாவைப் போல் சிவந்து மிக அழகாக இருந்தாள்.

"சம்யூ, மாப்பிள்ளை எங்கே, என்ன வேலை செய்கிறார்?" என்று கேட்டாள் தோழி பல்லவி.

"கலிஃபோர்னியாவில், சாஃப்ட்வேர் எஞ்சினியர்" சம்யுக்தா.

"மாப்பிள்ளையைப் பற்றி நன்றாக விசாரித்தார்களா?" என்றாள் தோழி நிகிலா, பொறாமை இழையோடும் குரலில்.

"உனக்கேண்டி பொறாமை?" என்று மற்ற தோழிகள் கலகலவென்று சிரித்தனர்.

மாப்பிள்ளை வீட்டார் போட்ட வைரநெக்லஸை அவர்கள் கையில் வாங்கி ஒருவர் மாற்றி ஒருவர் பார்த்தனர். "நெக்லஸ் ஒரேயடியாக ஜொலிக்கிறதே! என்ன விலையிருக்கும்?" நிகிலா.

"கிம்பர்லியிலிருந்து வைரக்கற்களை வரவழைத்து வீட்டிலேயே ஆசாரிகளை வைத்துக் கட்டினார்களாம். சுளையா நாற்பது லட்சம் ஆகியதாம்" சம்யுக்தா. எல்லோரும் வாயைப் பிளந்தனர்.

"ஒரிஜினல் புளூஜாகர் வைரமாம். என் மாமாவும் சித்தப்பாவும் போய் டெஸ்ட் செய்துகொண்டு வந்தார்கள்" சம்யுக்தா.

"அப்பா, இதன் விலையில் ஒரு வீடே வாங்கலாம் போலிருக்கே!" ஆச்சரியப்பட்டாள் பல்லவி.

"ஆஃப்டர் ஆல் ஒரு நெக்லஸப் பற்றி இத்தனை ஆராய்ச்சி செய்திருக்கிறார்களே, மாப்பிள்ளையைப் பற்றி எவ்வளவு விசாரித்திருப்பார்கள்! பாவம் மாப்பிள்ளை" என்று ஒருத்தி கலாட்டா செய்ய எல்லோரும் சிரித்தனர்.

"என்னை கலாட்டா செய்வது இருக்கட்டும். நம் க்ளாஸ்மேட்ஸ் ஸ்ரீதர், அகிலேஷ் எல்லோரும் வந்திருக்காங்களே, அவங்களை கவனித்தீர்களா?" சம்யுக்தா.

"ஏய், கல்யாணப் பெண் நீ! நாங்கள் விசாரிக்க வேண்டுமா?" கலாய்த்தாள் நிகிலா.

பல்லவி மட்டும் அருகில் வந்து ரகசியமாக "சம்யூ, ஸ்ரீதர் முகம் சரியாக இல்லை. அவனிடம் கொஞ்சம் பேசக்கூடாதா?" என்றாள்.

"முட்டாள் மாதிரி பேசாதே! அவன் சம்பந்தமேயில்லாமல் ஏதோ நினைத்துக் கொண்டால் நான் என்ன செய்யமுடியும். அதுவுமில்லாம மாப்பிள்ளை வீட்டார் எல்லோரும் இருக்கும் இந்த நேரத்தில் போய் நான் என்ன பேசமுடியும்?" சம்யுக்தா.

பல்லவி அவர்கள் எல்லோரையும் நன்கு கவனித்துக் கொண்டாள். சம்யுக்தா தொலைவில் நின்று ஸ்ரீதரும், மற்றவர்களும் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். எல்லோரும் எம்.எஸ்ஸி. ஃபிஸிக்ஸ் மாணவர்கள்.

சம்யுக்தாவிற்கு ஃபிஸிக்ஸில் டெஃபனிஷன்ஸ் மனப்பாடம் செய்ய வராது. புரிந்தால்தானே மனப்பாடம் ஆகும்! நெருங்கிய தோழி பல்லவிக்கும் விளக்கமாக சொல்லத் தெரியவில்லை. அவள் அப்படியே மனப்பாடம் செய்வாள். புரிந்து படித்தால்தானே மற்றவர்களுக்கு விளக்க முடியும்.

அப்போதுதான் ஸ்ரீதர் கைகொடுத்தான். ஒவ்வொரு டெஃபனிஷனையும் அவன் விளக்கிச் சொல்லும் முறையில் மனப்பாடம் செய்யாமலே மனதில் படிந்துவிடும். இவன் உடன் படிக்கும் மாணவனா அல்லது புரொஃபஸரா என்று தோன்றும். நாளடைவில் இருவருக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டது. அப்போது ஸ்ரீதர் தன் மனதில் ஏற்பட்ட காதலை அவளிடம் தெரிவித்தான்.

ஆனால் அவள் மறுத்துவிட்டாள். தனக்கு அந்தமாதிரி எண்ணம் ஏதும் இல்லை என்றாள். அதுவுமன்றி தன் பெற்றோர் ஜாதி, அந்தஸ்து இதற்கெல்லாம்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்றாள். அவள் ஒரே பெண்ணானதால் அவள்மேல் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை மிகப்பெரியது என்றாள்.

அதன் பிறகு அவன் அதைப்பற்றிப் பேசுவதில்லை. இப்போது அவளுக்குப் பெற்றோர் பார்த்த இடத்தில் நிச்சயம் நடந்துவிட்டது. எல்லோருக்கும் அழைப்பிதழ் கொடுத்ததுபோல் எந்த மன உறுத்தலும் இல்லாமல் ஸ்ரீதருக்ககும் அழைப்பிதழ் கொடுக்க அவனும் வந்து கலந்துகொண்டான். அவனைப் பார்த்துப் பரிதாபப்படுவதைத் தவிர சம்யுக்தாவுக்கு வேறு வழி தெரியவில்லை.

விருந்து முடிந்து சம்யுக்தாவிடம் விடைபெற ஸ்ரீதர் உட்பட எல்லோரும் வந்தனர். அகிலேஷ்தான் "எப்போது திருமணம்? அமெரிக்கா போனபிறகு எங்களை மறந்துவிடாதே!" என்றான்.

"அவருக்கு ஏதோ ஒரு ப்ராஜெக்ட் முடியவேண்டுமாம். அதற்கு நாலு மாதம் ஆகும் என்கிறார்கள். அதற்குள் நம் இறுதித்தேர்வும் முடிந்துவிடும். அதனால் என் பெற்றோரும் சம்மதித்துவிட்டனர்" என்றாள் சம்யுக்தா.

நிச்சயதார்த்தம் முடிந்து சில நாட்கள் ஆர்வமாக வந்த மாப்பிள்ளையின் பெற்றோர் பிறகு வருவதை நிறுத்தி விட்டனர். திருமணம் செய்துவைப்பதிலும் ஆர்வம் காட்டவில்லை. சம்யுக்தாவின் பெற்றோருக்குத்தான் வயிற்றில் நெருப்பைக் கட்டியதுபோல் இருந்தது.

சில உறவினர்களோடு போய்த் திருமணம் நாள் குறிப்பதுபற்றிப் பேசினர். அதற்கும் பொறுப்பான பதில் இல்லை.

"பிரகாஷ் பூனாவில் உள்ள அவர்கள் கம்பெனிக்கே வந்துவிடுவான். பிறகுதான் திருமணம். உங்களுக்குக் காத்திருக்க முடியாது என்றால் வேறு இடம் பார்த்துக் கொள்ளுங்கள்" என்றனர் திட்டவட்டமாக. அவர்களிடம் போராடி ஒருவழியாகப் பிரகாஷின் அதாவது மாப்பிள்ளையின் டெலிஃபோன் எண்ணும், முகவரியும் வாங்கிக்கொண்டு திரும்பினர்.

ஆனால் எத்தனை முயற்சித்தும் அவனுடன் ஃபோனில் தொடர்புகொள்ள முடியவில்லை. இரண்டு வருடங்கள ஓடிவிட்டன. சம்யுக்தாவின் அம்மா மகளின் திருமணம் நடக்கவில்லை என்ற ஏக்கத்திலேயே போய்ச் சேர்ந்துவிட்டாள். மனக்கவலையுடன் தன்னையே சுற்றிச் சுற்றி வரும் தந்தையையும் இழந்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்தாள் சம்யுக்தா. தைரியத்தையும் தெளிவையும் வரவழைத்துக் கொண்டாள். சந்தோஷமாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டாள். அதனால் தன் தோழிகளையும் அப்பாவின் நெருங்கிய நண்பர்களையும் அடிக்கடி வீட்டுக்கு அழைத்தாள்.

இதனிடையில் டோஃபெல், ஜி.ஆர்.இ. போன்ற பரீட்சைகளில் நல்ல மதிப்பெண்களுடன் தேறி அமெரிக்காவின் இரண்டு புகழ்பெற்ற கல்லூரிகளில் முழு உதவித்தொகையுடன் அட்மிஷனும் வாங்கிக் கொண்டாள்.

அமெரிக்கா என்றவுடன் அப்பா பயந்தார். "ஏன் சம்யுக்தா அந்த பிரகாஷை மறக்க முடியவில்லையா?"

"அப்பா, திருமணம் நின்றதில் எனக்கு எந்தவித வருத்தமுமில்லை. இப்படிப்பட்ட ஒருவனுடன் திருமணம் நின்றதில் சந்தோஷமே. ஆனால் நம்மை மொத்தக் குடும்பமும் சேர்த்து ஏமாற்றிவிட்டதை, என் அம்மாவை நான் இழந்ததை என்னால் மறக்கமுடியாது. அவன் அதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்."

டெக்சஸ் மாகாணத்தில் ஆஸ்டின் பல்கலைக்கழகத்தில் அவளுக்கு எம்.எஸ். படிக்க இடம் கிடைத்திருந்தது. எமிரேட்ஸ் ஃப்ளைட்ஸில் ஏறும் கேட்டில் சம்யுக்தா காத்திருக்கும் போதுதான் ஸ்ரீதரும் வந்தான். இவளைப் பார்த்து முதலில் திகைத்தவன் பிறகு சகஜமாகப் பேசலானான்.

"சம்யுக்தா, எப்படி இருக்கிறீர்கள்? இது டாலஸ் போகும் ஃப்ளைட். நீங்கள் கலிஃபோர்னியாதானே போகவேண்டும்!"

"எனக்கு ஆஸ்டின் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். படிக்க இடம் கிடைத்திருக்கிறது. நீங்கள் எப்போது யு.எஸ். வந்தீர்கள்?"

"நான் இங்கு வந்து ஒரு வருடம் ஆகிறது. நாஸாவில் சயன்டிஸ்டாக வேலை செய்கிறேன்" என்றவன் தன் ஃபோன் நெம்பர், முகவரி அடங்கிய ஐ.டி. கார்டு ஒன்றைக் கொடுத்தான்.

"எந்த உதவி வேண்டுமானாலும் தயங்காமல் உடனே ஃபோன் செய்யுங்கள். எப்படிக் கேட்பது என்ற தயக்கம் வேண்டாம். நாடுவிட்டு நாடு வந்தபின் நாம்தான் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்க வேண்டும். பிறகு சந்திக்கலாம்" என்று சொல்லிவிட்டு சம்யுக்தாவை அவள் இருக்கையில் அமர வைத்துவிட்டு ஸ்ரீதர் தன் இருக்கையைத் தேடிச் சென்றான்.

ஆறு மாதங்கள் படிப்பில் தீவிர கவனம் செலுத்தினாள். ஆஸ்டின் நகரம் முழுவதையும் நன்கு தெரிந்துகொண்டாள். ஸ்ரீதரும் அடிக்கடி பேசி சம்யுக்தாவின் திருமணம் நின்று போனதைத் தெரிந்து கொண்டான்.

அப்போதுதான் ஒருநாள் பிரகாஷின் மொபைல் எண்ணை ஶ்ரீதரிடம் கொடுத்து, முகவரி கண்டுபிடிக்கச் சொன்னாள். இருவரும் பிரகாஷ் வீட்டிற்கு சென்றனர். தனி பங்களா. வீட்டிற்கு வெளியே பச்சைப் பசேலன்று பெரிய புல்வெளி. ஒரு மரத்தில் குழந்தைகள் விளையாட ஊஞ்சல். வெளியே விளையாட்டு பொம்மைகள் இறைந்து கிடந்தன.

காலிங் பெல்லை அழுத்தினாள். பிரகாஷ்தான் வந்து கதவைத் திறந்தான். அவன் பின்னால் ஒரு சீனப் பெண்ணும், ஆணும், பெண்ணுமாக இரண்டு குழந்தைகளும்.

பிரகாஷும் சம்யுக்தாவைப் பார்த்தவுடன் நிலைமையைப் புரிந்து கொண்டான். ஶ்ரீதர் சம்யுக்தாவின் கையை அழுத்தி உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளச் சைகை காட்டினான். பிரகாஷ் தனது தவறுக்கு மன்னிப்புக் கோரினான்.

சம்யுக்தாவும், ஶ்ரீதரும் அமைதியாக வெளியேறினர். இருவரும் ஒன்றும் பேசவில்லை. அருகில் இருந்த சீன ரெஸ்டாரன்டிலிருந்து இருவருக்கும் பிடித்த நூடுல்ஸும், சூப்பும் வாங்கி வந்தான். அவளைச் சாப்பிட வைத்து, பிறகு தானும் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினான்.

இரண்டு நாட்களாக அவளிடமிருந்து எந்தச் செய்தியும் இல்லை. ஶ்ரீதர் ஃபோன் செய்துவிட்டு சம்யுக்தாவின் அபார்ட்மெண்ட்டுக்கு சென்றான். அவள் தெளிவாகத்தான் இருந்தாள். ஆனால் எப்போதும் அவள் முகத்தில் காணப்படும் அழகான சிரிப்புதான் மிஸ்ஸிங்.

"வாங்க ஶ்ரீதர். ரெண்டு நாளா நிறைய வேலை. அதோடு இறுதித் தேர்வுக்கும் தயார் செய்ய வேண்டியிருந்தது. அதனால்தான் கூப்பிட முடியவில்லை" சம்யுக்தா.

"பரவாயில்லை. ஆனால் உன் முகத்தில் சிரிப்பைக் காணோமே! ஏன்? பிரகாஷைப் பார்த்து விட்டு வந்ததாலா?"

"இல்லை. அவனைப் பார்த்துவிட்டு வந்தபிறகு ஒரு விடுதலை உணர்ச்சிதான்."

"பிறகு ஏன் உன் முகத்தில் ஏதோ சிந்தனை?"

"ஓ அதுவா? ஜாதி, அந்தஸ்து எல்லாம் பார்த்து நாம் என்ன சாதித்தோம்! என் பிரியமான அம்மாவை இழந்தேன். அப்பா நடைப்பிணமாகச் சுற்றி வருகிறார். நான் யாருமற்ற அனாதையானேன். பிரகாஷ் ஜாதியைப் பார்த்தானா, அந்தஸ்தைப் பார்த்தானா? நன்றாகத்தானே இருக்கிறான்! நான் அவனைப் பார்த்துப் பொறாமைப்பட்டுச் சொல்லவில்லை. இந்த விஞ்ஞான உலகத்தில் ஜாதி, அந்தஸ்து எல்லாம் தேவையா என்று யோசிக்கிறேன்" என்றாள் ஏதோ வகுப்பில் பாடம் எடுக்கும் ஆசிரியர் போல்.

"நல்லது, அப்படி நீ நினைப்பது உண்மையென்றால் என்னை ஏற்றுக் கொள்வாயா? ஆனால் என்னை ஏற்றுக் கொண்டாலும் இல்லாவிட்டாலும் நான் உனக்காக இருப்பேன். அதனால் நீ என்றும் அநாதையில்லை."

"இவ்வளவுக்குப் பிறகும் நீங்கள் என்னை ஏற்றுக் கொள்வீர்களா?"

"கட்டாயம்! ஏமாற்றங்களைச் சந்தித்த பிறகுதான் நமக்கே நல்ல பக்குவம் வருகிறது. பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே, அல்லவா! நீ சரியென்றால் இப்போதுகூட பதிவுத் திருமணம் செய்து கொள்ளலாம்."

"இப்போது எப்படி முடியும்? இன்னும் ஒரு தடை இருக்கிறது."

"தடையா!" என்றான் அதிர்ச்சியுடன்.

"பிரகாஷ் வீட்டில் கொடுத்த வைரநெக்லஸை நான் திருப்பித் தந்தவுடன் நம் திருமணம்தான். சந்தோஷம்தானே!" என்றாள் சம்யுக்தா.

பானுமதி பார்த்தசாரதி

© TamilOnline.com