அஸ்பாரகஸ் காளான் கிரேவி
தேவையான பொருட்கள்

அஸ்பாரகஸ் தண்டுகள் (நறுக்கியது) - 2 கிண்ணம்
ஆலிவ் ஆயில் - 2 தேக்கரண்டி
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
மக்காச்சோள மாவு - 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2
பூண்டு - 2 பல்
இஞ்சித் துண்டு - 1 அங்குலம்
தக்காளி - 2
காளான் (நறுக்கியது) - 1 கிண்ணம்
உப்பு - தேவைக்கேற்ப
கரம் மசாலாத்
தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
பச்சைக் கொத்துமல்லி - 1 கைப்பிடி

செய்முறை

வெங்காயம், பூண்டு, இஞ்சியைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

சோயா சாஸ், இரண்டு தேக்கரண்டி குளிர்ந்த தண்ணீர், மக்காச்சோள மாவு மூன்றையும் ஒன்றாகக் கலந்து கரைத்து வைத்துக்கொள்ளவும்.

அடி கனமான ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்த்ததும் நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சியைப் போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.

பின்னர் அஸ்பாரகஸ் துண்டங்களைப் போட்டு வதக்கவும். அது வதங்கியதும் நறுக்கி வைத்திருக்கும் காளானைப் போடவும். காளான் நிறைய நீர் விட்டுக் கொள்ளும்.

அடுப்பை மிதமான தீயில் வைத்து வதக்கவும். பின்னர் தக்காளியைப் போட்டு ஒன்று சேர வேகவைக்கவும். அதில் மிளகாய்த் தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவை போட்டுக் கொதிக்க விடவும்.

தளர இருக்க வேண்டுமானால் சிறிது பாலோ அல்லது தண்ணிரோ விட்டுக் கொதிக்க விடவும். கடைசியாக சோயா கலவையை விட்டு ஒரு 5 நிமிடங்கள் கொதித்த பின்னர் அடுப்பிலிருந்து இறக்கவும். இதில் நறுக்கிய பச்சைக் கொத்துமல்லியைத் தூவவும்.

இந்த கிரேவியைச் சப்பாத்தி, தோசை, சாதத்துடன் கலந்து சாப்பிடலாம்

பின்குறிப்பு: வேகவைத்த கோஸ் கறி செய்வது போல் அஸ்பாரகஸ் கறி செய்யலாம். அவரைக் காயுடன் சேர்த்து பொரித்த கூட்டும் செய்யலாம். குழம்பில் காயாகவும் போடலாம். ஆம்லெட் செய்யும் போது சேர்க்கக் கூடிய காய்கறிகளான தக்காளி, வெங்காயம், காளானுடன் அஸ்பாரகஸையும் சிறியதாக நறுக்கிச் சேர்த்து வதக்கி ஆம்லெட்டில் வைத்துச் சாப்பிடலாம்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com