ராஜி ராமச்சந்திரன் எழுதிய 'அம்மா வருவாயா'
முதல்நாள் முதல் ஷோ பார்க்கும் வாய்ப்பு கிட்டியதில்லை. ஒரு எழுத்தாளரின் முதல்நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு விழா முடிவில் வேகமாக ஓடி நூலாசிரியரைப் பார்த்து, முதல் பிரதியைக் காசு கொடுத்து வாங்கிய அனுபவம் நெகிழ்ச்சியானதே. இருவருமே புளகாங்கிதம் அடைந்த வித்தியாசமான தருணம் அது.

'அம்மா வருவாயா?' என்ற புத்தகத்தை அட்லாண்டா வாழ் ராஜி ராமச்சந்திரன் எழுத, பாண்டிச்சேரி 'ஒரு துளிக்கவிதை' என்ற இயக்கம் அட்லாண்டா பெருநிலத் தமிழ்ச் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில்தான் அது நடந்தது. புத்தகத்திற்கு அணிந்துரை எழுதிய திருமதி லட்சுமி சங்கர் நூலைப்பற்றிப் பேசியதைக் கேட்டுத்தான் இந்தப் புத்தகத்தை வாங்கினேன்.

ஆங்காங்கே துளித்துளியாகக் கிடைத்த நேரத்தில் படித்து, மூன்று நாட்களில் முடித்தேன். மிக எளிய நடை. படிப்போரை வேகமாக உள்ளிழுக்கும் எளிமை இந்த எழுத்தில் இருக்கிறது. இவை மாறுபட்ட அனுபவங்களை வைத்துக் கோக்கப்பட்ட அழகான கதம்பம்.

பயணத்தின் உல்லாசம், விருந்தின் நெகிழ்ச்சி, இருண்ட சாலையில் பயம், ஓரிரவின் திகில், பிரமித்த சேவை எனப் பல வண்ணக் கண்ணிகள். ஜோடனையற்ற அன்றாடங்கள். விழி வில்லைகள், புவியிடங்காட்டி, ஊஞ்சல் படுக்கை, கண்ணாடி நூலடை, கூப்பிடு மணி, பனிக்கூழ், நேர்த்தியான இரவு, இடையீட்டு ரொட்டி, ஓடுபொறி, குழிப்பந்தாட்ட மைதானம், திரளணி, சிற்றிடைப் பேருந்து எனத் தேர்ந்தெடுத்த தமிழ்ச்சொல் ஆக்கம் பல இருந்தாலும் கவ்வி, குறியாய் இருத்தல் என்பவை என்னைக் கவர்ந்தவை. கராஜ், டிஸ்ஆர்ம், ஹீட்டர், கராஜ் ஓப்பனர் போன்ற பயன்பாடுகளே எழுத்துக்கு நெருக்கமாகக் கொண்டுசெல்கிறது.

ஒரு புலம்பெயர் தமிழ்க் குடும்பத்தின் இந்தப் பதிவுடன் இங்கு வாழ்வோர் தமக்கு ஏற்பட்ட ஏதாவதொரு அனுபவத்தின் ஒரு புள்ளியில் தங்களைக் கட்டாயம் இணைத்துக்கொள்ள முடியும். பெரும்பான்மை புலம்பெயர் இலக்கியங்கள் போல பருவங்கள், மரங்கள், பறவைகள் பற்றிக் குறிப்புகள் எதுவுமில்லை. ஆனால் வரிக்கு வரி பலதரப்பட்ட மாந்தர்களே குழுமியுள்ளனர். எந்தப் பக்கம் வாசித்தாலும் மனிதர்கள்.

கப்பல் தொழிலாளியின் குடும்பங்களைப் பற்றிய கவலை. தொலைதூர நாட்டில் இனாம் கொடுக்கக் காசில்லாத தருணம். ஓலைக் கைவேலை விற்கும் சிறுமியைப்பற்றிய சிந்தனை. இடைச்சாதி டானிற்குச் சன்மானம். ஊஞ்சல் படுக்கை செய்யும் கடைக்காரர் மீது பரிவு எனப் பல இடங்களில் எழுத்தாளரின் கருணை வெளிப்படுகிறது.

வாசிப்பு குறைந்து வரும் தமிழ்கூறும் நல்லுலகத்தில் எழுதுவது என்பது தன்னளவில் திருப்தி கொள்ளவும் தலைக்குள் தீராமல் சுழன்று கொண்டிருக்கும் சுமைகளை இறக்கி வைக்கவும் உதவும் ஒரு வடிகால். அதைத் தாண்டி இந்த நூல் அமெரிக்காவாழ் தமிழர்களின் வாழ்க்கையின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றம், வரலாற்றுப் பதிவு.

நவம்பர் 17, 2019 அன்று விழாவில் வெளியிடப்பட்ட நூல்கள்:
ஆழியிலே அமிழ்ந்த என் அழகிய மரப்பாச்சி (பிரதீபா பிரேம்) - $5.00
பெயல் நீர் சாரல் (சங்கர் தங்கவேலு) - $5.00
அம்மா வருவாயா? (ராஜி ராமச்சந்திரன்) - $5.00
நல்லெண்ணங்கள் நாற்பது (பிரபா அனந்த்)- $2.00
நான் கேட்டறிந்த பாரதி (ச. அனந்தசுப்பிரமணியன்) - $2.00

தபால் கட்டணம் தனி. புத்தகங்கள் வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல்: raji100@gmail.com (ராஜி ராமச்சந்திரன், அட்லாண்டா)

சிவசக்திவேல்,
அட்லாண்டா, ஜார்ஜியா

© TamilOnline.com