அஸ்பாரகஸ் உசிலியல்
தேவையான பொருட்கள்

அஸ்பாரகஸ் தண்டுகள் - சில
துவரம் பருப்பு - 1/2 கப்
சிவப்பு மிளகாய்
வற்றல் - 5
சமையல் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை

அஸ்பாரகஸை அடியிலிருந்து ஓர் அங்குலம் வெட்டி விட்டு மீதி உள்ள பாகத்தைச் சிறிய துண்டங்களாக நறுக்கவும். இதை நுண்ணலையில் 4 நிமிடங்கள் உயர்திறனில் (high power) வேகவைத்துக் கொள்ளவும்.

துவரம் பருப்பை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து எடுத்து நன்றாகக் களைந்து, தண்ணீரை வடித்து விட்டு, அதனுடன் மிளகாய், தேவையான உப்பு, சிறிது பெருங்காயம் சேர்த்து, அதிகம் தண்ணீர் விடாமல் மிக்ஸியில் ரவை போல அரைக்கவும்.

அடி கனமான ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்த்ததும் அரைத்த பருப்பைப் போட்டு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

அடி தீயாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இன்னொரு விதம் என்ன வென்றால், அரைத்த பருப்பை ஒரு நுண் ணலைப் பாத்திரத்தில் வைத்து உயர்திறனில் 5 நிமிடம் வைத்துப் பின்னர் மேற்கூறிய முறையில் செய்தால் அதிக எண்ணெய் தேவைப்படாது.

ஆனால் ஒரு நிமிடத்துக்கு ஒரு முறை நுண்ணலை அவியனில் உள்ள பருப்பை ஒரு பிளாஸ்டிக் கரண்டியால் கிளறி மறுபடி வேகவைக்க வேண்டும். ஆறிய பின்பு நன்றாகக் கையால் உதிர்த்து விடவும். பின் அடி கனமான ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்தபின் பாதி வெந்து உதிர்த்த பருப்பைப் போட்டுக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

மற்றும் ஒரு முறை என்னவென்றால் நுண்ணலையில் வேகவிடாமல், பிரஷர் குக்கரில் இட்டலி வேகவிடுவது போல் குக்கர் குண்டு (weight) போடாமல் 10 நிமிடம் வேகவைக்க வேண்டும். ஆறிய பின்பு நன்றாகக் கையால் உதிர்த்து விடவும்.

அடி கனமான ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்த்ததும் வெந்து உதிர்த்த பருப்பை போட்டு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். அடி தீயாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். பருப்பு நன்றாக வெந்து பொலபொல என்று வந்தபின்பு, வெந்த அஸ்பாரகஸை போட்டு ஒன்று சேரக்கிளறி இறக்கவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com