பரணீதரன்
ஆன்மீக எழுத்தாளர், கேலிச் சித்திரக்காரர், நாடக ஆசிரியர், பத்திரிகையாளர் எனத் தொட்டதில் எல்லாம் முத்திரை பதித்தவர் பரணீதரன். இயற்பெயர் ஸ்ரீதரன். டிசம்பர் 25, 1925 அன்று, சென்னை புரசைவாக்கத்தில், டி.என். சேஷாசலம் - ருக்மிணி இணையருக்கு மகனாகப் பிறந்தார். தந்தை சேஷாசலம் நல்ல தமிழறிஞர். வழக்குரைஞருக்குப் படித்திருந்தாலும் அதனைத் தொழிலாகக் கொள்ளாமல், 'கலாநிலையம்' என்னும் இலக்கிய இதழைத் தொடங்கி நடத்திவந்தார். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் வல்ல அவர், சிறந்த இலக்கியவாதியும் கூட. நாடக ஆர்வம் உடையவர். பல ஆங்கில நாடங்களைத் தமிழில் மொழிபெயர்த்து அரங்கேற்றினார். வீடும் அலுவலகமும் ஒன்றாக இருந்தது. எப்போதும் தமிழறிஞர்களும், நாடகக் கலைஞர்களும் நிரம்பியிருந்த இல்லச்சூழலில் பரணீதரன் வளர்ந்தார்.

கார்ப்பரேஷன் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார். உயர்நிலைக் கல்வியை முத்தையா செட்டியார் உயர்நிலைப் பள்ளியிலும், தி.நகர். ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியிலும் தொடர்ந்தார். பல நாடகக் கலைஞர்கள் தினம் இல்லம் வருவர். நாடக ஒத்திகை நடக்கும். அதைப் பார்த்துப் பார்த்து வளர்ந்த இவருக்கும் நாடகத்தில் ஈர்ப்பு ஏற்பட்டது. வீட்டுக்கு வந்த சுதேசமித்திரன் உள்ளிட்ட இதழ்கள் இவர் மனதில் எழுத்தார்வத்தை வளர்த்தன. புரசைவாக்கத்தில் இருந்த வாசிப்பகம் மற்றும் நூலகத்துக்குச் செல்வதும் வழக்கமாயிற்று.

ஏதோவொரு சூழலில் தந்தை நடத்திவந்த 'கலாநிலையம்' நின்றுபோனது. அவ்விதழுக்காகத் தருவிக்கப்பட்ட வெள்ளைக் காகிதங்களில் பொழுதுபோக்காக கேலிச் சித்திரம் வரைய ஆரம்பித்தார் பரணீதரன். பார்த்தோர் பாராட்டவே, விகடனில் மாலி வரைந்திருந்த கார்ட்டூன்களைப் போல வரைய முயன்றார். அம்முயற்சியே பிற்காலத்தில் கார்ட்டூனிஸ்ட் 'சீலி', 'ஸ்ரீதர்' என்றெல்லாம் அவர் அவதாரம் எடுக்க அடிகோலின.

பரணீதரன் மூன்றாம் ஃபாரம் படித்துக் கொண்டிருக்கும் போது தந்தை காலமனார். குடும்பம் நிலைகுலைந்தது. சொத்துக்களும், வாழ்ந்த வீடும் கைவிட்டுப் போயின. பல்வேறு சிரமங்களுடன் வாடகை வீட்டில் வசிக்கும் சூழல் ஏற்பட்டது. குடும்பத்தின் பொறுப்பை மூத்த அண்ணன் ஏற்றுக்கொண்டார். சித்தப்பா மற்றும் உறவுகளின் உதவியால் வளர்ந்த பரணீதரன் பி.காம். நிறைவு செய்தார். தனது ஓவியத் திறமையைப் பயன்படுத்திச் சில மாதங்கள் சுதந்திர ஓவியராகப் பணியாற்றினார். சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக இருந்த 'நீலம்' என்ற புனைபெயர் கொண்ட நீலமேகம் இவரை ஆதரித்தார். தனது செல்லப்பெயரான 'சீலி' என்ற புனைபெயரில் சுதேசமித்திரன் இதழுக்குத் தொடர்ந்து பல கேலிச்சித்திரங்களை வரைந்தார். 1946ல் ஆனந்தவிகடனில் கேலிச் சித்திரக்காரர் ஆகப் பணியில் சேர்ந்தார். 'ஸ்ரீதர்' என்ற இயற்பெயரில் கேலிச்சித்திரங்களை வரையத் தொடங்கினார். நாட்டுநடப்பு குறித்த விமர்சனங்களைக் கேலியும் கிண்டலுமாகப் பேசிய அவற்றுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. தொடர்ந்து நகைச்சுவைத் துணுக்குகளுக்கும் சித்திரம் வரைய ஆரம்பித்தார். 1956ல் விகடனின் உதவியாசிரியராக உயர்ந்தார். அதுமுதல் கட்டுரைகளும் எழுதி விகடன் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமானார்.



ஒரு சமயம் காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளை ஸ்ரீமடத்துக்குச் சென்று சந்தித்தார் பரணீதரன். அது வாழ்வின் திருப்புமுனை ஆனது. காஞ்சி மகா பெரியவரின் ஆசியுடன் நண்பர்களுடன் இணைந்து வடநாட்டின் ஷிர்டி, பண்டரிபுரம் போன்ற பல ஆன்மீகத் தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டார். அது ஆனந்த விகடனில் 'ஆலய தரிசனம்' என்ற தலைப்பில் 'பரணீதரன்' என்ற புனைபெயரில் தொடராக வெளியானது. வாசகர்கள் அதைப் பெரிதும் வரவேற்றனர். எளிய, வாசகர்களுடன் உரையாடுவது போன்ற நடை, ஆன்மீகத் தகவல்கள், தான் கண்ட, கேட்ட செய்திகள், அனுபவங்கள் என்று அந்தத் தொடரை மிகவும் சுவைபட எழுதினார் பரணீதரன்.

தொடர்ந்து பல புனிதப் பயணங்களை மேற்கொண்டு, சித்தர்கள், ஞானிகள் பற்றியும், ஆன்மீகத் தலங்கள், ஆலயங்கள் பற்றியும் கட்டுரைகள் எழுதினார். பல மகான்களைப்பற்றி மக்கள் அறிந்துகொள்ள, பரணீதரன் காரணமாக அமைந்தார். பரணீதரனுக்கு மிகவும் புகழ் சேர்த்த தொடர் 'அருணாசல மகிமை'. சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள், பகவான் ரமண மஹரிஷி, பூண்டி மகான், வள்ளிமலை சுவாமிகள், பகவான் யோகி ராம்சுரத்குமார், இரத்தினகிரி மௌனயோகி பாலமுருகனடிமை சுவாமிகள் எனப் பலரது வரலாற்றை உலகறியக் காரணமானது அத்தொடர். வாசித்தோர் மனங்களில் ஆன்மீக வேட்கையை ஏற்படுத்திய இத்தொடருக்கு காஞ்சி மகா பெரியவரின் ஆசீர்வாதமும், பூண்டி மகானின் அருளாசியும் கிடைத்தன. யோகி ராம்சுரத்குமாரும் தனது நல்வாழ்த்துக்களை அளித்தார். தொடர்ந்து பத்ரி-கேதார் யாத்திரை, காசி-ராமேஸ்வரம் யாத்திரை, கேரள ஆலயங்கள், கர்நாடக ஆலயங்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட புனிதத் தலங்களைத் தரிசனம் செய்து, விரிவாக எழுதினார் பரணீதரன். பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகளுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்களைச் சந்தித்து, அவர்களுடைய அனுபவங்களைக் கேட்டறிந்து 'பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள்' என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதினார். முத்துசுவாமி தீட்சிதர் பற்றியும் விரிவாக ஆராய்ந்து நூல் எழுதியிருக்கிறார். தீட்சிதர் பயணம் செய்த திருத்தலங்கள் பற்றி விசாரித்து, அந்த இடங்களுக்கெல்லாம் பயணம் செய்து, ஆதாரபூர்வமான தகவல்களைத் திரட்டி எழுதப்பட்ட நூல் இது. 'அன்பே அருளே', 'தரிசனங்கள்' ஆகிய இந்த இரண்டு நூல்களிலும் காஞ்சி மகா பெரியவருடனான தனது அனுபவங்களைக் காட்சிப்படுத்தியிருக்கிறார். 'ஞானப்பித்தர்' நூல் சத்குரு சேஷாத்ரி சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு.

பரணீதரனின் புகழ் மகுடத்தில் மற்றோர் இறகாய் அமைந்தது அவர் எழுதிய நாடகங்கள். பள்ளியில் பல நாடகங்களில் நடித்தவர், நண்பர்களுடன் இணைந்து நாடகங்கள் நடத்தியவர் பரணீதரன். ஒத்திகை தொடங்கி அரங்கேற்றம்வரை தந்தையின் நாடகங்களை நேரடியாகப் பார்த்த அனுபவம் மிக்கவர். அந்த அனுபவம் அவருக்குக் கை கொடுத்தது. 'மெரீனா' என்ற புனைபெயர் பூண்டு, விகடனில் அவர் எழுதிய முதல் தொடர்கதை 'காதல் என்ன கத்திரிக்காயா?' மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து 'வடபழநியில் வால்மீகி' என்ற நகைச்சுவைத் தொடர், "யார் இந்த 'மெரீனா?" என்று திரும்பிப் பார்க்க வைத்தது. 1970ல் வெளியான 'தனிக்குடித்தனம்' நாடகம், தமிழகமெங்கும் இவரைக் கொண்டு சேர்த்தது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் இந்த நாடகம் அரங்கேறியது. பின்னர் எல்.பி. ரெகார்ட் ஆகவும் வெளியானது. ஒலிப்பதிவு நெடுநேரத் தட்டாக வெளியான முதல் தமிழ் நாடகம் 'தனிக்குடித்தனம்'! பின்னர் 'கேசட்' ஆக, குறுந்தகடாக வெளியாகி இன்றும் எம்.பி3 வடிவில் உலா வந்து கொண்டிருக்கிறது. (இந்த நாடகத்தைக் கேட்க) இது திரைப்படமாகவும் வெளியானது. சோ, கே.ஆர். விஜயா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். (பார்க்க) தொடர்ந்து 'ஊர் வம்பு', 'கால்கட்டு', 'சாந்தி எங்கே', 'நேர்மை', 'மாப்பிள்ளை முறுக்கு', 'சாமியாரின் மாமியார்', 'அடாவடி அம்மாக்கண்ணு', 'எங்கம்மா', கல்யாண மார்க்கெட்' போன்ற நாடகங்கள் விகடன் இதழில் தொடராக வெளியாகிப் பின்னர் மேடை நாடகங்களாக அரங்கேறின. நாவல் ஒன்றும் எழுதியிருக்கிறார் பரணீதரன். '61 வயதிலே' என்னும் இவர் எழுதிய அந்த நாவல், பின்னர் மேடைநாடகமாக நடிக்கப்பட்டது. மேடைக்கென்றே சில நாடகங்களும் எழுதியிருக்கிறார். 'விநாயகர் வந்தார்', 'அப்பா ஒரு அப்பாவி', மாமியார் மெச்சிய மாப்பிள்ளை', 'மாமனார் சரணாகதி', 'நாத்தனார் திலகம்', 'முருகன் அருள்' போன்றவை அவற்றில் குறிப்பிடத் தகுந்தன. 'கஸ்தூரி திலகம்' இவருக்கு மிகவும் புகழைச் சேர்த்த படைப்பாகும். இந்நூல் காந்தியின் மனைவியான கஸ்தூரிபா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை மிகையில்லாமல் சித்திரிப்பதாகும்.



'கலாநிலையம்' என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவைத் தொடங்கி அதன் மூலம் தனது நாடகங்களை நடத்திவந்த பரணீதரன், விகடனில் இருந்து 1985ல் ஓய்வுபெற்றார். பின்னர் நண்பர்ளுடன் இணைந்து 'ரஸிகரங்கா' என்ற நாடகக்குழுவைத் தோற்றுவித்து அதன்மூலம் நாடகங்களை அரங்கேற்றினார். நாடகங்களை 500 தடவைக்கும் மேல் அரங்கேற்றிய பெருமை இவருக்கு உண்டு. ஒரு வைகுண்ட ஏகாதேசி தினத்தன்று இவரது 11 நாடகங்கள் ஒரே நாளில் தொடர்ந்து நடந்தது ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது. ஒரே நாடகம், ஒரே நாளில், ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் அரங்கேறிய பெருமையும் உண்டு. 'சாமியாரின் மாமியார்' நாடகத்தை இவரது குழுவினர், இரண்டாகப் பிரிந்து இருவேறு இடங்களில் ஒரே நேரத்தில் அரங்கேற்றினர். இவரது 'எங்கம்மா' என்ற நாடகம், வானொலியில் ஒலிபரப்பாகி, பரவலான பாராட்டைப் பெற்றது. பின்னர் அது தேசிய நிகழ்ச்சியாக ஹிந்தியிலும், பிற மாநில மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு ஒரே நாளில், ஒரே நேரத்தில் ஒலிபரப்பானது. தனிக்குடித்தனத்தைத் தொடர்ந்து 'கூட்டுக் குடித்தனம்' என்ற நாடகத்தையும் எழுதியிருக்கிறார். இவரது மேடை நாடகங்களை ஆராய்ந்து, 'Humour in a Tamil Popular Comedies' என்ற தலைப்பில் ஜெர்மனியைச் சேர்ந்த Gabriella Eichinger Ferro-Luzzi ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட்டிருக்கிறார்.

பரணீதரன், காளிதாசரின் ரகுவம்சத்தைத் தமிழில் பெயர்த்துள்ளார். 'Six Mystics of India' என்பது இவர் ஆங்கிலத்தில் எழுதிய நூலாகும். இது ராகவேந்திர சுவாமிகள், ஷீரடி பாபா, சத்குரு சேஷாத்ரி சுவாமிகள், மும்முடிவரம் பாலயோகி, ஜில்லேலமுடி அம்மா மற்றும் பூண்டி மகான் போன்றோரின் வாழ்க்கைச் சரிதங்களைக் கொண்டது. புகழ்பெற்ற எழுத்தாளர் ஆர்.கே. நாராயணனும் ஆர்.கே. லக்ஷ்மணும் இவரது அத்தை மகன்களாவர். ஆர்.கே. நாராயணனின் 'கைடு' நாவலைச் சாகித்ய அகாதெமிக்காகத் தமிழில் 'வழிகாட்டி' என்ற தலைப்பில் மொழி பெயர்த்துள்ளார். ஆர்.கே. நாராயணன், தனது அமெரிக்க அனுபவங்களைப் பற்றி எழுதிய 'Dateless Diary' என்ற நூலின் பெரும்பகுதியை 'அமெரிக்காவில் நான்' என்ற தலைப்பில் விகடனில் மொழிபெயர்த்து எழுதியிருக்கிறார். பரணீதரனின் மேதைமையைப் பாராட்டித் தமிழக அரசு இவருக்கு 1993ல் கலைமாமணி விருது வழங்கிச் சிறப்பித்தது. 'நாடக சூடாமணி' விருதும் இவரைத் தேடிவந்தது.

பரணீதரன் ஜனவரி 3, 2020 அன்று, 95ம் வயதில் சென்னையில் காலமானார். ஆன்மீக எழுத்து, நாடக எழுத்து என இரண்டிலுமே முத்திரை பதித்த முன்னோடி 'பரணீதரன்' (எ) 'மெரீனா' என்றால் அது மிகையல்ல.

அரவிந்த்

© TamilOnline.com