ஜெயலட்சுமியின் அமெரிக்கக் கனவு நனவாகுமா?
ஜெயலட்சுமி புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையைச் சேர்ந்த பள்ளி மாணவி. புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் +1 படித்து வரும் இவருக்கு, பொது அறிவில் அளவற்ற ஆர்வம். பாடப் புத்தகங்களோடு தினந்தோறும் நாளிதழ்களை வாசித்துத் திறனை வளர்த்துக்கொண்ட இவர், கேரம், வினாடி-வினா, கபடி, கட்டுரைப் போட்டி உட்படப் பலவற்றில் மாவட்டம் மற்றும் மாநில அளவில் பரிசுகள் பெற்றிருக்கிறார். தமிழ் நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் 'இளந்திரு விருது' பெற்றவர். இவர் Go4Guru நிறுவனம் நடத்திய ISSC-2020 நடத்திய இணையவழித் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.



2020ம் ஆண்டு மே மாதம் அமெரிக்காவில் நடக்கும் இறுதித்தேர்வில் பங்கேற்கத் தேர்வாகியிருப்பதுடன் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தைப் பார்வையிடவும், அங்குள்ள அறிவியலாளர்களோடு கலந்துரையாடவும் அழைக்கப்பட்டுள்ளார். இறுதித் தேர்வில் வென்றால் 10,000 டாலர் பரிசுத்தொகை கிடைக்கும். ஆனால், அமெரிக்கா சென்று திரும்புவதற்கான முழுச்செலவையும் மாணவியே மேற்கொள்ள வேண்டும். (ஜெயலட்சுமி மட்டுமல்ல; அவரைப் போன்ற பல மாணவியர் தமிழகத்திலிருந்து நாசா செல்ல இருக்கின்றனர்).



வறிய குடும்பத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி, பிற மாணவியருக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தும், விடுமுறை நாட்களில் முந்திரிப்பருப்பு விற்றும் தனது பொருளாதாரத் தேவைகளைச் சமாளிக்கிறார்."குடும்பத்தை அப்பா கவனிப்பதில்லை. நான், என் அம்மா, தம்பி கோவிந்தராஜ் மூவரும் என் சித்தப்பா வீட்டில் வசிக்கிறோம். அம்மா மனநோயாளி ஆகிவிட்டார். இருந்த ஓட்டு வீடு கஜா புயலில் தரைமட்டமாகிவிட்டது. அமெரிக்காவில் 2020 மே மாதம் நடைபெற உள்ள தேர்வில் பங்கேற்று முதல் பரிசைப் பெற ஆசைதான். அதற்கான தகுதியும், ஆர்வமும் என்னிடம் இருக்கிறது. ஆனால் அங்கு சென்று வருவதற்கு தேவையான பணம் இல்லை. நல்ல உள்ளங்கள் உதவி செய்தால் நான் அமெரிக்கா சென்று, போட்டியில் வெற்றி பெறுவேன்" என்கிறார் ஜெயலக்ஷ்மி.

சிறிது சிறிதாக உதவிகள் வரத்தொடங்கி இருக்கின்றன என அறிகிறோம். ஜெயலட்சுமியின் கனவு நிறைவேறட்டும் என வாழ்த்துவோம், உதவுவோம்.

அரவிந்த்

© TamilOnline.com