மரபணு மாற்றத்தின் மர்மம்!
(பாகம் - 24)

முன்கதை: ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை அறிமுகம் செய்தாள். என்ரிக்கே, க்ரிஸ்பர் முறையால் எவ்வாறு மரபணு எழுத்துத் தொடர்களில் ஓரெழுத்தைக்கூட மாற்றி நோய்களை நிவர்த்திக்கவும், உணவு உற்பத்தியைப் பெருக்கவும் முடியும் என்று விளக்கினார். பிறகு க்ரிஸ்பர் முறையின் பலவீனங்களைப் பற்றி விளக்கி அவற்றைத் தன் ஆராய்ச்சியால் நிவர்த்தித்துள்ளதாகவும், ஆனால் திடீரென நுட்பம் தவறாகச் செயல்படுவதாகவும் சொன்னார். சூர்யா அவரது தலைமை விஞ்ஞானி விக்ரம் அளவுக்கு மீறிய செலவாளி என்று அறிந்தார். நிதித்துறைத் தலைவர் ஷான் மலோனி தன் நண்பர்களிடம் பல மில்லியன் டாலர் நிதி திரட்டியதால் மிக்க கவலையில் ஆழ்ந்துள்ளதை உணர்ந்தார். அடுத்து ஹான் யூ என்னும் இன்னொரு மரபணு நிபுணர் தொழில் பொறாமை கொண்டுள்ளதை ஊகித்தார். மேலும் பீட்டர் ரெட்ஷா என்னும் மூலதனமிட்டவர் இந்தப் பிரச்சனையால் கவலை மிகக் கொண்டுள்ளதையும் உணர்ந்தார். அனைவரையும் முன்னறையில் கூட்டி, பிரச்சனையின் காரணகர்த்தா அங்கேயே உள்ளார் என்ற அதிர்வேட்டை வீசினார்! மர்மத்தைச் சூர்யா எப்படி தீர்க்கிறார் என்பதைப் பார்ப்போம்!

(இக்கதையில் உள்ள மரபணு விவரங்கள் பல விக்கிபீடியா (Wikipedia) மற்றும் பல இணையதளங்களில் உள்ள கட்டுரைகளில் காணப்படும் விவரங்களைத் தழுவி எழுதப்பட்டுள்ளன. அவற்றுக்கு என் மனமார்ந்த நன்றி!)

★★★★★


பிரச்சனை என்ன என்பதையும், அதன் காரணகர்த்தா அங்கேயே உள்ளார் என்பதையும் சூர்யா கூறவே அதிர்ந்துபோன என்ரிக்கே, தன்னையே சந்தேகித்தார் என அறிந்ததும் வெடித்தவர், சூர்யாவின் விளக்கத்தால் அமைதியானார். ஆயினும் தன் குழுவினரில் ஒருவரே காரணகர்த்தா என்ற குற்றச்சாட்டை நம்பமுடியாமல் தவித்தார்.

குழுவினரின் நெருப்புப் பார்வையை அலட்சியப்படுத்திய சூர்யா துரிதமாக விளக்கத்தைத் தொடர்ந்தார். "நான் இங்குள்ள குழுவினர் மூவரையும் பீட்டரையும் சந்தித்துப் பேசியதில் எனக்கு ஒன்று நன்கு விளங்கியது. இந்தப் பிரச்சனையின் காரணம் தொழில்நுட்பமல்ல, ஆனால் அதைச் செய்ய ஒரு தொழில் நிபுணரால்தான் முடியும் என்பது. எனவே நான் விக்ரம் மீதும் ஹான் யூ மீதும் சந்தேகத்தைப் பார்வையைத் திருப்பினேன்."

விக்ரம், ஹான் யூ இருவரும் பொங்கியெழ எத்தனிக்க, என்ரிக்கே அவர்களை அடக்கினார். "இருங்க. என்மேலயே சந்தேகிச்சிருக்காரே, அப்புறம் என்ன?! பரவாயில்லை. என்னதான் சொல்றார் பார்க்கலாம்!"

சூர்யா தொடர்ந்தார். "விக்ரம் பணத்தைத் தண்ணீரா செலவழிக்கறார்னு தெரிஞ்சதுனால அவர் போட்டியாளர் நிறுவனம் எதுலேர்ந்தாவது பணம் வாங்கிகிட்டு இந்த நிறுவனத்தைக் கவுத்துட்டு குறைஞ்ச விலைக்கு வித்து அங்க தாவிடலாம்னு திட்டம் போட்டிருப்பார்னு சந்தேகிச்சேன்."

விக்ரம் வெடித்தே விட்டார்! "ஹேய், ஹேய்! என்னைப்பத்தி என்ன சொல்ற நீ! என் செலவு என் சொந்த விஷயம். அதுக்கு என் குடும்பப் பணமே நிறைய இருக்கு. இந்த வேலையே எனக்குத் தேவையில்ல தெரியுமா? எதோ என்ரிக்கே மேல இருக்கற நம்பிக்கையாலயும் எனக்கே இந்த மரபணு க்ரிஸ்பர் நுட்பத்துமேல இருக்கற ஆர்வத்தாலயுந்தான் இப்படிப் பிரச்சனை வந்தப்புறமும் இங்க குப்பை கொட்டிக்கிட்டிருக்கேன். வேற இடத்துக்குத் தாவற அவசியம் எனக்குத் துளிகூடக் கிடையாது."

என்ரிக்கேயும் ஆமோதித்தார். "ஆமாம் சூர்யா, விக்ரம் சொல்றது அத்தனையும் சரி. அவர் முதல்லயே ரொம்பப் பரம்பரைப் பணக்காரர்..."

சூர்யா கையை உயர்த்திக் காட்டி இடைமறித்தார். "அது எனக்கே சீக்கிரம் தெரிஞ்சாச்சு. கிரணிடம் சொல்லி அவர் நிதிநிலையை வெவ்வேறு மூலங்களிலிருந்து சேகரிச்சு என் சந்தேகத்தைப் போக்கிக்கிட்டேன். விக்ரம் காரணகர்த்தா இல்லை."

விக்ரம் முகம் மலர்ந்தார். ஆனால் ஹான் யூ கொந்தளித்தார்.

"விக்ரம் இல்லை, என்ரிக்கேவும் இல்லன்னுட்டீங்க. ஆனா இதை தொழில் நிபுணர்தான் செஞ்சிருக்கணும்னும் இந்த அறையிலதான் இருக்கார்னும் சொன்னீங்க. அப்போ என்மேல பழி போடறீங்களா?"

சூர்யா கையை உயர்த்தி மறுத்துவிட்டுத் தொடரந்தார். "ஆமாம் ஹான் உங்க மேல எனக்குப் பலத்த சந்தேகம் இருக்கு. அதுவும் என்ரிக்கே மேல தொழில்ரீதியா பொறாமை இருக்குன்னு கிரணின் மின்வலை ஆராய்ச்சில அரசல் புரசலாத் தெரிஞ்சுது. ஆனா அதுமட்டும் காரணமாயிருக்க முடியாது. ஏன்னா நீங்க பல வருஷமா இந்த நிறுவனத்துல பாடுபட்டு இந்த நுட்பத்தை வளர்க்க உதவியிருக்கீங்க.

அதுனால வேற காரணம் இருக்கணும். உங்களுக்கு ஏகப்பட்ட கடன் இருக்குன்னு கிரண் கண்டுபிடிச்சு எனக்குத் குறுந்தகவல் அனுப்பியிருக்கான். யாரோ உங்களைத் தூண்டிவிட்டு இந்தப் பிரச்சனை உண்டாக்க உதவி செஞ்சா பெரும் தொகையளிக்கறதாத் தூண்டியிருக்கணும்."

ஹான் அதை அசட்டை செய்தார். "இதென்ன கதை. ஏதோ என் பழங்கதையையும் கடனைப்பத்தியும் கண்டு பிடிச்சுட்டா போதுமா? மொட்டத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடறீங்க? வெறுங்கதை. என்ரிக்கே, நான் நிச்சயமா ஒண்ணும் பாதகம் செய்யலை, என்னை நம்புங்க!"

அப்போது கிரணும் ஷாலினியும் அவர்கள் கூடியிருந்த அறைக் கதவைத் திறந்து உள்நுழைந்தனர். கிரண் தலையாட்டி ஷாலினி கையில் இருந்த ஒரு தாள்கோப்பைக் காட்டினான். ஷாலினியும் தலையாட்டி ஆமோதித்தாள்.

சூர்யா அதை அதிகம் பொருட்படுத்தாமல் தொடர்ந்தார். "சரி அதைப்பற்றி அப்புறம் விவரிப்போம். அதுக்கு முன்னால அப்படி உங்களைத் தூண்டியது யாராக இருக்கும்? வெளியாட்களாக இருக்கக் கூடும்தான். ஆனா ஏன் உள் ஆளாகவே இருக்கமுடியாது? அது இன்னும் எளிதாக நடக்கக்கூடிய விஷயம். அதுனால நிதித்துறை நிபுணரான ஷான் மலோனி மேல என் சந்தேகம் திரும்பிச்சு."

ஷான் மீண்டும் நெருப்பைக் கக்கினார். "நெனச்சேன். என்னடா இன்னும் என்மேல மட்டும் பாயலயேன்னு. ஆச்சு. நான் இந்த நிறுவனத்துக்காக எவ்வளவு உழைச்சிருக்கேன் தெரியுமா. ஒரே ஆளா பலப்பல மில்லியன் டாலர் நிதி திரட்டியிருக்கேன். எதுக்காக நான் இந்தப் பிரச்சனை செய்யணும்?"

சூர்யா தொடர்ந்தார். "நீங்க நிதி திரட்டியது உண்மைதான். ஆனா அதுவே இந்தப் பிரச்சனைக்கு அடிப்படைக் காரணமாகவும் இருக்கக்கூடும். நீங்க நிதி திரட்டிய மூலதனத்தார் சீக்கிரம் பலனளிக்குமான்னு உங்களை வற்புறுத்தியிருக்கக் கூடும். அதனால் என்ரிக்கேவைப் பதறவைத்து நிறுவனத்தின் விற்பனையை வற்புறுத்தி முடித்து வைப்பதற்காக நீங்கள் நான் முன்னமே கேட்டபடி ஹானுடன் சேர்ந்து சதிசெய்து பிரச்சனையை உருவாக்கியிருக்கக் கூடும்."

ஷான் வெறுப்புக் கலந்த உதாசீனத்தோடு சிரித்தார். "நல்ல கதையா இருக்கே இது! நீங்க சொல்றபடியே மூலதனத்தார் தொல்லையால் நிறுவனத்தை விற்க நான் முயற்சித்தாலும், இந்தப் பிரச்சனையால் நிறுவனத்தின் மதிப்பு மிகவும் குறையாதா? முதலுக்கே மோசம் வந்துடுமே! அப்போ எப்படி மூலதனத்தாருக்கு அவங்க பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியும்? சொல்லுங்க என்ரிக்கே, இவருக்கு இந்த மாதிரி விஷயம் புரியல போலிருக்கு, எதோ முடிவு சொல்லணும்னு திரிக்கறார்!"

என்ரிக்கேயும் குழப்பத்தோடு வினவினார். "ஆமாம் சூர்யா, எனக்கும் அது விளங்கலயே? எப்படி இந்தப் பிரச்சனையால மூலதனத்தார் பணத்தைத் திரும்பித் தருமாறு செய்யமுடியும்? நிறுவன மதிப்பு ஒரேயடியா சரிஞ்சு போயிடுமே?!"

சூர்யா தலையசைத்து ஆமோதித்தார். "ஆமாம் முதல்ல அப்படி சரிஞ்சுதான் போகும். ஆனா நிறுவனம் விற்க நீங்க சம்மதிக்க மாட்டீங்கன்னு குழுவினருக்கு நல்லாத் தெரியும். அதனால விற்பனையாகறதா முடிவு செஞ்சு, உங்களைத் தலைமையிலிருந்து அல்லது நிறுவனத்திலிருந்தே விலக்கிட்டு, அப்புறம், பிரச்சனை ஒரு பேரற்புதத்தால மந்திர மாயமா நிவாரணமடைஞ்சிட்டா...! அப்போ நல்ல விலைக்கு விற்கலாமில்லயா?!"

ஷான் அதை ஏற்காமல் தலையசைத்து மறுத்தார். ஆனால் என்ரிக்கேவின் முகம் வெளிறியது. "ஓ.... ஆமாம், அப்படியும் ஆகலாம். அப்படி நான் யோசிக்கவேயில்லை. ஆனா சூர்யா, ஷான் அப்படி சதி செய்திருப்பார்னு என்னால நம்பமுடியாது. அவர் சில மூலதனத்தார்களோட பேசி, பிரச்சனை சின்னதுதான், இன்னும் கொஞ்ச நாளிலேயே சரி செஞ்சு நுட்பத்தின் வெற்றியைக் கூடிய விரைவிலேயே பிரகடனப்படுத்திடுவோம்னு சொன்னதை நானே கேட்டிருக்கேனே?"

சூர்யா தலையாட்டி ஆமோதித்தார். "உண்மைதான் என்ரிக்கே. நானேகூட ஷான் இதைப்பற்றி அவருடைய சக முன்னாள் எம்.பி.ஏ. மாணவருடன் பேசியதைக் கேட்டேனே. அதனால் பிரச்சனையை உருவாக்கி விற்கும் நிலைமைக்குக் கொண்டு வருவதைச் செய்தது ஷானால் முடிந்திருக்குமே தவிர அதைச் செய்தது அவரில்லைதான். உங்களைப் பத்தி அப்படிப் பேசினதுக்கு மன்னிச்சுடுங்க ஷான். நீங்க நிரபராதி!"

ஷான் முகம் மலர்ந்தார். "அப்பாடி, நான் சில நிமிஷம் மூச்சுத் திணறிட்டேன். நான் குற்றவாளியில்லைன்னு சொன்னதுக்கு மிக்க நன்றி ... ஆனால்..."

சூர்யா தொடர்ந்தார், "ஆனால், நீங்க செய்யாத அதே காரியத்தை மற்றொரு நிதித்துறை நிபுணர் செஞ்சிருக்கலாம் அல்லவா? பல நிறுவனங்களில் இப்படிப்பட்ட பலதரச் சிக்கல்களை சந்தித்து சமாளித்த ஒருவருக்கு இது மிக எளிதுதானே? அதைத்தானே செஞ்சீங்க பீட்டர்?! ஹான் யூவுக்கு எவ்வளவு பணம் இதுவரைக்கும் கொடுத்தீங்க. இன்னும் எவ்வளவு வாக்களிச்சிருக்கீங்க? ஹூம்... மறுக்கவெல்லாம் வேண்டாம். எல்லாம் ஹான் யூவோட மேஜையைக் குடைஞ்சு ஷாலினி விஞ்ஞான நுட்ப ரீதியாகவும், கிரண் நிதி ரீதியாவும் இதோ இந்தக் கோப்புல வேண்டிய அளவு ஆதாரங்கள் திரட்டியாச்சு."

பீட்டர் தன் இருக்கையிலிருந்து குபீரென எழுந்து கையை ஆட்டிக்கொண்டு எதோ சொல்லப் போனவர் தொப்பெனத் திரும்பி விழுந்து முகத்தை மூடிக்கொண்டார். ஹான் யூவும் முகம் வெளிறித் தொய்ந்து உட்கார்ந்தார்.

என்ரிக்கே பொங்கிவந்த கோபத்தை அடக்கிக் கொண்டு "பீட்டர், கெட் அவுட். நான் உங்களை போர்டு மூலமா கவனிச்சுக்கறேன். ஹான் நீங்க மாறிட்டீங்கன்னு நெனச்சு சேத்துக்கிட்டது பாம்பை மடியில கட்டிக்கிட்டா மாதிரி ஆயிடுச்சு. விக்ரம், செக்யூரிட்டிகிட்ட சொல்லி இவரை உடனே வெளியில் தள்ளுங்க. அந்த்க் கோப்புல இருக்கற வழிமுறையைப் பாத்து உடனே அதை மாத்தி முன் நுட்பத்தை வேலை செய்ய வைக்கற வழி பாருங்க! சூர்யா, ஷாலினி, கிரண், உங்களுக்கெல்லாம் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை. எனக்கும் இந்த நிறுவனத்துக்கும் மறுவாழ்வு கொடுத்து உலகத்துக்கே இந்த மரபணு நுட்பத்துனால பலன் கிடைக்க வாய்ப்பளிச்சிருக்கீங்க!"

சூர்யா பவ்யமாகக் குனிந்து பாராட்டை ஏற்றுக் கொண்டார். "அதெல்லாம் ஒண்ணுமில்லை என்ரிக்கே. கொஞ்ச நாளானா நீங்களே கண்டுபிடிச்சிருப்பீங்க. நாங்க நிதித்துறையில யோசிச்சு துரிதமாக்கிட்டோம் அவ்வளவுதான். உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்."

ஷாலினியும் முத்தாய்ப்பு வைத்தாள். "ஆமாம் என்ரிக்கே. உங்கள் மரபணு நுட்பம் உலகுக்கே மிக முக்கியம்! சீக்கிரமே முழு நடைமுறைப் பயனுக்குக் கொண்டு வாருங்கள். ஆவலோடு எதிர்பார்க்கிறேன்!"

இங்கே நம் துப்பறியும் மூவர் விடைபெற்றுக் கொண்டனர்.

அவர்களை நாம் மீண்டும் அடுத்த விசாரணையில் சந்திப்போம்.

(முற்றியது)

கதிரவன் எழில்மன்னன்

★★★★★


கதிரவனைக் கேளுங்கள்!
ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் பாகம்-16 அடுத்த இதழில் தொடங்கும்.

ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் குறித்து முன்னர் கதிரவன் எழில்மன்னன் நுணுக்கமாகவும், சுவைபடவும் தென்றல் வாசகர்களுக்கு விவரித்து வந்துள்ளார். CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து அமைந்துள்ள இக்கட்டுரைத் தொடர் வெறும் தமிழாக்கமல்ல. கதிரவன் தமது நெடுங்கால அனுபவத்தை இதில் சேர்த்துக் கொடுக்கிறார்.

அடுத்த இதழில் ஆரம்பநிலை யுக்தி-16 வாசிக்கத் தவறாதீர்கள்.

© TamilOnline.com