ரமணிசந்திரன்
தமிழில் சிறுகதைகள் எழுதத் துவங்கி நாவலாசிரியர்களாய் உயர்ந்தவர்கள் பலருண்டு. ஆனால், நேரடியாக நாவல் எழுதத் துவங்கி இன்றுவரையிலும் அதிகம் வாசிக்கப்படும் முன்னணி நாவலாசிரியராய் விளங்குபவர் ரமணிசந்திரன். இவர், திருச்செந்தூரை அடுத்துள்ள மூலைப்பொழிலில் ஜூலை 10, 1938ல் கணேஷ் - கமலசுந்திரதேவி இணையருக்கு மூத்த மகளாகப் பிறந்தார். இயற்பெயர் ரமணி. திருச்செந்தூர் மற்றும் பாளையங்கோட்டையில் இவரது பள்ளிப்பருவம் கழிந்தது. பெற்றோர் இருவருமே உயர்கல்வி கற்றவர்கள். வாசிப்பை நேசித்தவர்கள். அந்த வகையில் சிறுவயதில் தாயிடம் கேட்ட மகாபாரத, ராமாயணக் கதைகளும், வாசித்த கல்கி போன்றோரது நூல்களும் இவரது வாசிப்பார்வத்தை வளர்த்தன. சாராள் தக்கர் கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியம் பயின்றார். 1962ல் பாலச்சந்திரனுடன் திருமணம் நிகழ்ந்தது.

ரமணியின் தாய்மாமா தமிழ் இதழியலின் முன்னோடி மேதைகளுள் ஒருவரும், தினத்தந்தி இதழின் நிறுவனருமான சி.பா. ஆதித்தனார். சகோதரி கணவர், பத்திரிகையாளரும் எழுத்தாளருமான அ.மா. சாமி. இவர் ராணி, ராணிமுத்து இதழ்களின் ஆசிரியர். குரும்பூர் குப்புசாமி என்ற பெயரில் நாவல்கள் எழுதியவர் அ.மா.சாமிதான். 'அமுதா கணேசன்' என்ற புனைபெயரில் எழுதியவரும் இவரே. ரமணி, தனது சகோதரிக்கு எழுதி வந்த கடிதங்களையும் அதன் நேர்த்தியையும் கண்ட அ.மா. சாமி, இவரை எழுத ஊக்குவித்தார். ஆரம்பத்தில் தயங்கிய ரமணி, அ.மா. சாமியின் தொடர் தூண்டுதலால் எழுத ஆரம்பித்தார். கணவர் பெயரைத் தன் பெயருடன் இணைத்துக்கொண்டு 'ரமணிசந்திரன்' என்ற பெயரில் எழுதத் துவங்கினார். முதல் சிறுகதை ராணி வார இதழில் வெளியானது. தொடர்ந்து ராணி இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியிலும் பங்கேற்று முதல் பரிசை வென்றார். முதல் நாவல் 'ஜோடிப்புறாக்கள்' 1970ல் வெளிவந்தது. அது, 'ரமணிசந்திரன்' என்ற பெயரைப் பலரும் அறியக் காரணமானது.

ஆரம்பத்தில் ராணி, தேவி போன்ற இதழ்களில் தொடர்கள் எழுதினார் பின்னர் குமுதம், அவள் விகடன், கல்கி, குங்குமம் போன்ற இதழ்களிலும் நிறையத் தொடர்கள் எழுதத் துவங்கினார். கூடவே நாவல்களையும் எழுதினார். இவரது படைப்புகளுக்குப் பெண் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்புக் கிடைத்தது. எளிய நடை, பாசாங்கற்ற எழுத்து, யதார்த்தமான களங்கள் வாசகர்களைக் கவர்ந்தன. தேவையற்ற வர்ணனைகள், வீண் விவாதங்கள், எதிர்மறைச் சித்திரிப்புகள் இல்லாமல் பெண்கள் வாழ்வின் உண்மை நிகழ்வுகளை, அனுபவங்களைப் பேசுவதாக இவரது நாவல்கள் இருந்ததால் வாசகர் எண்ணிக்கை பெருகியது. இவரது எழுத்துக்கென்றே தனி வாசகர் வட்டம் உருவானது. லட்சக்கணக்கானோர் வாசிக்கும் தமிழின் முன்னணி எழுத்தாளராக உயர்ந்தார்.

நடுத்தர மக்களின் வாழ்க்கைச் சிக்கல்களை அடிப்படையாகக் கொண்டவை ரமணிசந்திரனின் படைப்புகள். அவர்கள் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களும் அவர்கள் அதனை எதிர்கொள்ளும் விதமும் பல நாவல்களின் கதைக்களன்களாக உள்ளன. இவரது படைப்புகளில் வன்முறைக்கோ, பெண்களின் மனதைக் கடுமையாகப் பாதிக்கும் சம்பவங்களுக்கோ ஒருபோதும் இடமில்லை. பிரச்சனைகளை நேர்மறையாக எதிர்கொண்டு வெற்றி பெற விழையும் பெண்களே இவரது கதாபாத்திரங்கள். நல்லதை மட்டுமே எழுத வேண்டும், பேச வேண்டும் என்பதே இவரது படைப்புலகக் கொள்கை என்றும் கூறலாம். ஒரு படைப்பைப் படித்தபின் மகிழ்ச்சியும், மனநிறைவும், நேர்மறைச் சிந்தனைகளும் ஏற்பட வேண்டும் என்பதே இவரது விருப்பம். அதுவே இவரது எழுத்தின் வெற்றிக்கும் முக்கியக் காரணம். இதனாலேயே இவருக்குப் பெண் வாசகர்கள் அதிகம் என்றும் சொல்லலாம்.

தனது எழுத்துப்பற்றி ரமணிசந்திரன், "என்னுடைய பாணி என்பது சுபமான முடிவுதான். நாம் நம் வாழ்க்கையை வாழ்வது எதற்காக? மகிழ்ச்சியோடு இருப்பதற்காகத்தானே? ஆனால் உண்மையில் நமக்கு நடப்பது என்ன? வாழ்க்கையில் கொஞ்சநேரம் மட்டுமே மகிழ்ச்சியையும் பெரும்பாலான நேரங்களில் கஷ்ட நஷ்டங்களையும் பிரச்னைகளையும்தான் மனிதர்களான நாம் சந்திக்கிறோம். அதனால் குறைந்த பட்சம் என் கதைகளைப் படிக்கும்போதாவது மக்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். கதை படிக்கும் அந்த நேரம் மக்கள் ரிலாக்ஸாக வேண்டும் என நினைத்து எழுதுகிறேன். என் கதையைப் படித்துவிட்டு யாரும் அழக்கூடாது என நினைக்கிறேன்" என்கிறார் ஒரு நேர்காணலில்.



தமிழில் ரமணிசந்திரனை மிகவும் கவர்ந்த எழுத்தாளர் அநுத்தமா. அனுராதா ரமணனும் பிடிக்கும். ஆங்கிலத்தில் ஜெஃப்ரி ஆர்ச்சர். சங்க இலக்கியம், குறள், பாரதி பாடல்களின் மீது மிகுந்த ஆர்வமுண்டு. 'என் உயிர் கண்ணம்மா', 'அமுதம் விளையும்', 'உன் கண்ணில் நீர் வழிந்தால்', 'கானமழை நானுனக்கு', 'திக்கு தெரியாத காட்டில்', 'காதல் என்னும் சோலையிலே', 'நின்னையே ரதியென்று', 'புது வைரம் நான் உனக்கு', 'காக்கும் இமை நானுனக்கு' என பாரதியின் பாடல் வரிகள் பலவற்றைத் தனது நாவல்களுக்குத் தலைப்பாகச் சூட்டியிருக்கிறார். அதற்கேற்றவாறு பொருத்தமாக கதைக்களனும் அமைந்திருப்பது இவரது நாவல்களின் தனிச்சிறப்பு. சிறுகதைகளை அதிகம் எழுதவில்லை.

தன் படைப்புகள் பற்றி ரமணிசந்திரன், "இறைவனால் படைக்கப்பட்ட இவ்வுலகம் அழகும் அமைதியும் நிறைந்தது. அதில் நல்லவர்களும் நல்ல நிகழ்வுகளும் 99% நிரம்பிக் கிடக்கின்றன. ஒரே ஒரு சதவிகிதத்தில் சமூகத்தைச் சீரழிக்கும் சீர்கெட்ட மனிதர்கள் இருக்கின்றனர். உதாரணமாக ஓர் அழகிய வெள்ளைநிறப் பூத்துவாலையை எடுத்துக்கொள்வோம். அது எவ்வளவு அழகாக இருக்கிறதோ அத்தகையதே இவ்வுலகு. அதன் ஓரத்தில் ஒரு துளி மை பட்டுவிட்டால் அதை ஏன் பெரிதுபடுத்த வேண்டும்?" என்று வினா எழுப்புகிறார்.

'பால் நிலா', 'தொடுகோடுகள்', 'என் கண்ணிற் பாவையன்றோ', 'வளையோசை', 'மைவிழி மயக்கம்' போன்ற நாவல்கள் பலராலும் விரும்பப்பட்டவை. 'ஜோடிப்புறாக்கள்', 'நெஞ்சே நீ வாழ்க', 'நேசம் மறக்கவில்லை நெஞ்சம்', 'ராமன் தேடிய சீதை', 'உயிரில் கலந்த உறவே', 'சிவப்பு ரோஜா', 'வெண்மையில் எத்தனை நிறங்கள்', 'விடியலைத் தேடி', 'தண்ணீர் தணல் போல் தெரியும்', 'ஒரு கல்யாணத்தின் கதை', 'கீதா', 'பூங்காற்று', 'தரங்கிணி', 'பால் நிலா', 'மதுமதி', 'வீடு வந்த வெண்ணிலவு', 'வெண்ணிலவு சுடுவதென்ன' - என இதுவரை சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட நாவல்களை இவர் எழுதியுள்ளார். அவற்றில் பல இருபது பதிப்புகளுக்கும் மேல் கண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. லட்சக்கணக்கான வாசகர்களுக்கு இவருடைய கதைகள் ஊக்க மருந்தாகவும், உற்சாக விருந்தாகவும் இருக்கின்றன என்பதை வாசகர் கடிதங்களிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. இவரது படைப்புகள் அனைத்தும் 'அருணோதயம்' பதிப்பகம் மூலம் வெளியாகியுள்ளன. இன்றைக்கும் புத்தகக் காட்சிகளில் அதிகம் விற்பனையாகும் நாவல்களில் ரமணிசந்திரனின் நாவல்களுக்கும் முக்கிய இடம் உண்டு டி.வி. சீரியல் மோகத்தையும் மீறி இவரது நாவல்கள் அதிகம் விற்பனையாவது தமிழ் எழுத்துலகில் ஒரு சாதனையே!

இவரது 'வைரமலர்' என்ற நாவலுக்கு 'தமிழ்நாடு அரசு விருது' கிடைத்துள்ளது. 'நாள் நல்ல நாள' என்ற நாவலுக்கு 'அனந்தாச்சியார் அறக்கட்டளை விருது' கிடைத்தது. 'ராணிமுத்து' இதழின் வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தின் போது 'சிறந்த எழுத்தாளார்' விருது வழங்கிச் சிறப்பித்தனர். 'வண்ணவிழி பார்வையிலே' என்ற நாவலுக்கு 'தினத்தந்தி விருது' கிடைத்திருக்கிறது. வி.ஜி.பி. விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது நாவல்களை ஆராய்ந்து பலர் எம்.ஃபில், பிஎச்.டி. பட்டம் பெற்றுள்ளனர். 1970ல் எழுதத் துவங்கி, உலகளாவிய நிலையில் இன்றளவும் வாசகர்களைத் தக்கவைத்திருக்கும் ரமணிசந்திரன், மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக எழுதி வருகிறார். குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இவரது மகன் அரவிந்த். மகள் அகிலா கிரிராஜும் ஓர் எழுத்தாளரே! தற்போது சுதந்திரப் போராட்ட காலத்தைக் களமாக வைத்து ஓர் புதிய நாவலை எழுதிக் கொண்டிருக்கிறார் ரமணிசந்திரன்.

அரவிந்த்

© TamilOnline.com