மா. அரங்கநாதன்
நவீன தமிழிலக்கியத்தில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை என்பவற்றைக் குறித்த தனித்தன்மை கொண்ட சிந்தனையுடன் செயல்படுபவர்களுள் மா. அரங்கநாதன் ஒருவர். தமிழ்க்கதை மரபின் இயல்பான மேற்கிளம்புகையாகவே அரங்கநாதன் கதைகள் உள்ளன. சங்க இலக்கியம் முதல் உலக இலக்கியம் வரையான பழக்கமும், அறிவும் அவரது தனித்த சிந்தனைக்கும் பார்வைக்கும் வளம் சேர்ப்பவையாக உள்ளன.

மா.அரங்கநாதன் நாகர்கோயிலில் 1933-ல் பிறந்து, படித்து, வளர்ந்து, சென்னைக்கு வேலைக்காகக் குடியேறியவர். சென்னை யின் கொச்சைத் தமிழின் பாதிப்புக்கு உள்ளாகாமல் தமிழ் மரபின் செழுமையில் ஊன்றி நிமிர்ந்து நிற்கும் மொழிப் புலத்தில் இயங்குபவர்.

1950-களில் பிரசண்ட விகடனில் சிறுகதைகள் எழுதத் தொடங்கி, பின்னர் நீண்ட காலமாக காணாமல் போய் விட்டார். இந்த இடைப்பட்ட காலத்தில் தேர்ந்த வாசிப்பு, தேடல், சிந்தனை, தர்க்கம் எனச் சுழன்று சிந்தனையின் புதுத் தடங்கள் சார்ந்து கவனம் கொண்டார். 'பொருளின் பொருள் கவிதை' என்ற உரைநடை நூல் மூலம் கவனிப்புப் பெற்றார். தொடர்ந்து பல்வேறு இதழ்களிலும் சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். 'வீடுபேறு', 'ஞானக்கூத்து', 'காடன் மலை' உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்தன. 'பறளியாற்று மாந்தர்' என்ற நாவலும் வெளிவந்தது. மா. அரங்கநாதன் இத் தொகுப்புகள் முலம் தமிழில் தவிர்க்க முடியாத கவனிப்புக்குரிய படைப்பாளியாக மிளிர்ந்தார். இன்னொரு புறம் விருது களும் பாராட்டுகளும் அவருக்கு வந்து குவிந்தன.

அரங்கநாதனின் கதைகளில் வாழ்வு பற்றிய புதிர் கதை யுக்திகளிலும், மொழி நடையிலும் வந்து வாசிப்புச் சார்ந்த மோதல், உணர்வு, அறிதல் என்ற புள்ளிகளில் குவிந்து, சுழல்வட்டப் பாதையில் இயங்கும் தன்மையைக் காணலாம். இவரது படைப்புகளில் மாயத்தன்மை இழையோடுகிறது. இது குறித்துப் பேராசிரியர் தமிழவன் குறிப்பிடு வதை இங்கு நோக்குவது மிகப் பொருத்தமாக இருக்கும்.

'இந்தவித மாயத்தன்மையைச் சைவநூல்களை அடிக்கடி குறிப்பிடுவதன் மூலமும் திருக்குறள் மற்றும் சேக்கிழார், மெய்கண்டார் போன்ற சமயத் தமிழ் நூல்களைப் போகிற போக்கில் தொட்டுச் செல்வதின் மூலமும் விதவிதமான கோயில்கள் பற்றிய பின்னணிக் குறிப்புகள் தருவதன் மூலமும் அடிமனத்தில் கிளப்பிவிட்டு மேல்மனதில் இன்னொரு கதையைச் சொல்வதுபோல் போக்குக் காட்டுகிறார். சிலவேளை விண்மீன், சிலவேளை மரம், இன்னும் சிலவேளை ஊர்களின் புராணம், மலை, பனை, தென்னை, அன்னாசிப்பழம் இப்படி ஒவ்வொரு தமிழகப் பொருளும் சுண்டியிழுக்கும் அர்த்தங்கள் கொண்டதாய் வந்து, வந்தது போலவே ஒரு சாயலை ஏற்படுத்தி விட்டுப் போகின்றன. இந்தத் தமிழ் கூட திராவிடப் பரம்பரை நினைவுபடுத்திய தமிழ் தான்' என மிக அழுத்தமாகக் கூறுவதன் மூலம் மா. அரங்கநாதன் சிறுகதைகள் பற்றிய மாறுபட்ட நோக்கு நிலையை முன்வைக்கின்றார்.

படைப்பு வெளி சார்ந்து யதார்த்தத்தில் நிலவும் கருத்துநிலைப் போராட்டம் குறித்த தர்க்கம் கதைமாந்தர், சூழ்நிலை, மொழி நடை சார்ந்து பின்னப்படுகிறது. இதுவே மண்ணின் மரபு நிலை நின்ற பார்வை யாகவும் விரிந்துள்ளது. இன்னோரு விதத்தில் நீண்ட தமிழிலக்கியப் பாரம்பரியத் தின் தொடர்ச்சியில் 'நவீனம்' பயணம் செய்யும் ஒரு முறைமையாகவும் எடுத்துச் செல்லும் பாங்கு அரங்கநாதனின் தனிச் சிறப்பு என்று கூறலாம்.

தமிழ் மரபு என்பது தமிழ் மரபுசார்ந்த புரிதலாகவே குறுகியுள்ளது. ஆனால் அரங்கநாதன் தமிழ் சைவத்துக்குள் இருக்கும் பாதைவழி பயணம் செய்து தான் பெற்ற இன்பம், தரிசனம் யாவற்றையும் படைப்புகளாக வெளிப்படுத்துகின்றார். அந்தவகையில் அரங்கநாதன் படைப்புலகு யதார்த்தப் பாணியாக இருந்தாலும் ஒரு நிலையில் அதீத அல்லது மிகைச் சாயல் மனவுலகின் பயணமாகவும் மேற்கிளம்புகிறது. இது அரங்கநாதனின் 'கருத்துலகம்' சார்ந்த ஒரு தேடலை வேண்டுகிறது.

மா. அரங்கநாதனின் மொத்தச் சிறுகதைத் தொகுப்பு படைப்பிலக்கியம் சார்ந்த தமிழ்மரபு குறித்த தத்துவார்த்தப் பார்வையை விரிக்கிறது இருப்பினும் அந்த 'தமிழ்த்தனம்', 'தமிழ் மரபு' பற்றிய விமரிசனம், மாற்றுப்பார்வை வெளிப்படுகையில் மா. அரங்கநாதன் பற்றிய படைப்பிலக்கியப் பார்வை இன்னும் கூர்மைப்படும். தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் மா. அரங்கநாதன் இடம் என்ன, அவர் வழிவந்த புதிய தடம் என்ன என்பவை பற்றியெல்லாம் வாசகர்கள் சுழன்று மேற்செல்வது தவிர்க்க முடியாது.

எவ்வாறாயினும் தமிழ்ச் சிறுகதை உலகில் படைப்பாளிகள் தனித்துவம் மிக்கவர்களாக இருக்கும் பொழுதுதான் சிறுகதை இலக்கியம் மேலும் சிறக்கும், வளம் பெறும். இந்தச் சிறப்புகளை வழங்கும் எழுத்தாளர்களில் மா. அரங்கநாதனும் ஒருவர் தான் என்பதில் சந்தேகமில்லை.

தெ. மதுசூதனன்

© TamilOnline.com