கொஞ்சம் கதை கொஞ்சம் இலக்கணம்
அக்டோபர் 13, 2019 அன்று, அட்லாண்டா தமிழ்ப் பள்ளிகளில் தன்னார்வத் தொண்டாற்றும் ஆசிரியர்களுக்கு உதவும் வகையிலான முனைவர் அமிர்தகணேசன் (அகன்) அவர்களின் 'கொஞ்சம் கதை கொஞ்சம் இலக்கணம்' என்ற கலந்துரையாடலை, அட்லாண்டா மாநகரத் தமிழ்ச்சங்கம் ஆல்ஃபெரட்டாவில் ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சியைச் சங்கத் தலைவர் திரு குமரேஷும் செயற்குழுவின் திரு சங்கரும் துவக்கி வைத்தனர்.

திரு அமிர்தகணேசன், இங்குள்ள தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களில் பலர் முறையான ஆசிரியர் பயிற்சியும், தமிழ்க்கல்வியும் பெறாதபோதும், தாய்மொழியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லக் களமிறங்கி இருப்பதைப் பாராட்டினார். பின்னர், நன்னூலில் சொல்லப்பட்டிருக்கும் ஆசிரியர் மற்றும் மாணவருக்கான விதிகளை எளிதில் புரியும்வண்ணம் விளக்கினார்.

மகாகவி பாரதி, பாரதிதாசன் ஆகியோர் தமிழ்க் கவிதைக்கு ஆற்றிய அரும்பணியை விவரித்தார். புதுக்கவிதை வகைமையை வானம்பாடி இயக்கக் கவிஞர்கள் தமிழில் முன்னெடுத்தனர். ஆனாலும் அக்கவிஞர்கள் மரபு இலக்கணம் நன்கு அறிந்திருந்தனர். எனவேதான் அவர்களின் புதுக்கவிதைகள் இன்றும் ஒளிவீசி வருகின்றன. கற்று மீறுவது சுவைதர வல்லது. இலக்கண விதிகள்தாம் மொழியின் மாண்புக்கான உயிர்நாடி. இவற்றை ஆசிரியர்கள் புரிந்துகொண்டு, குழந்தைகளுக்கு எளிய எடுத்துக்காட்டுகள், உரையாடல்கள், பாட்டுகள், கதைகள் மூலம் கற்பிக்கலாம் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

ஆசிரியர்கள் உச்சரிப்பைச் சரியாகச் சொல்லிக் கொடுத்து, பிறமொழித் தாக்கம் மற்றும் கலப்பு இல்லாமல் பாடம் நடத்துவது மொழிச்சிதைவைத் தவிர்க்க உதவும் என்று குறிப்பிட்டார். 'கொஞ்சம் கதை' பகுதியில் எளிய தலைப்பைக் கொடுத்து, ஆசிரியர்களை எட்டு வரிகளில் குழத்தைகளுக்குப் புரியும் வகையில் கதை அல்லது பாட்டு எழுதச் சொன்னார்.

நிகழ்ச்சிக்கிடையில், பேரா. மருத்துவர் ச. இளங்கோவன் படைத்த 'இதயச் சாரல்' என்ற நூல் வெளியிடப்பட்டது. முனைவர் திரு. உதயகுமார், பிரதிகளைச் சங்கத் தலைவர் திரு குமரேஷிற்கும், லில்பர்ன் தமிழ்ப்பள்ளி முதல்வர் திரு ரவி பழனியப்பனுக்கும் வழங்கினார்.

அறிவியலாளர், தமிழ்க்கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர் என்பதையும் தாண்டி, புதுச்சேரியில் 'இணையதளப் பேரவை' என்ற அமைப்பின் மூலம் மகாகவி தமிழன்பன் பெயரில், பல இளங்கவிஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் விருதுகளை வழங்கி ஊக்குவிக்கும் முனைவர் திரு அமிர்தகணேசனின் தொண்டு போற்றற்குரியது.

ராஜி ராமச்சந்திரன்,
அட்லாண்டா

© TamilOnline.com