மதுரை பாத்திமா கல்லூரி முன்னாள் மாணவியர் சந்திப்பு
மதுரையில் 1953ம் ஆண்டு தொடங்கப்பெற்று, சிறந்த பெண்கள் கல்லூரியாக இயங்கி வருகிறது பாத்திமா கல்லூரி. இது மதுரை மாவட்டத்தில் துவங்கப்பட்ட இரண்டாவது பெண்கள் கல்லூரியாகும். வழக்கமான கல்விப் பயிற்சி மட்டுமன்றி, மகளிர் மேம்பாடு கருதி, ஆய்வகப் பயிற்சி, தையல், ஆடை வடிவமைப்பு, உள்மனை அலங்காரம், உணவுத்துறை, மென்பொருள் ஆகிய துறைகளிலும் பயிற்சி அளித்து வருகிறது இக்கல்லூரி.

இக்கல்லூரி முதல்வர் சகோதரி செலின் சகாய மேரி மற்றும் பாத்திமாக் கல்லூரி முன்னாள் மாணவியர் அமைப்பின் தலைவர் பேரா. கலா ஆல்பர்ட் இருவரும் மூன்று வார காலம் அமெரிக்காவில் பயணம் செய்து அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் வாழும் கல்லூரியின் முன்னாள் மாணவியரைச் சந்தித்தனர். விரிகுடாப்பகுதியில் வசிக்கும் முன்னாள் மாணவியருடனான சந்திப்பு நவம்பர் 15ம் நாள் நிகழ்ந்தது. விரிகுடாப் பகுதி மட்டுமன்றி, கலிஃபோர்னியாவின் பிற பகுதிகளில் வசிக்கும் முன்னாள் மாணவியரும் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.

அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் வசிக்கும் பாத்திமா கல்லூரி முன்னாள் மாணவியர் அமைப்பின் தலைவராக பாரதி சங்கர ராஜுலுவும் செயலராக அருணா ஶ்ரீநிவாசனும் பொருளாளராக வித்யா பாலசுப்பிரமணியனும் தேர்வுசெய்யப் பெற்றனர். பல்வேறு ஆண்டுகளில் பயின்றவர்கள், ஏறத்தாழ பதினாறுபேர் பங்கேற்ற இச்சந்திப்பினை மதுரவல்லி திருவேங்கடம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

தொடர்புக்கு: பேரா.கலா ஆல்பர்ட்
மின்னஞ்சல்: fcalumnaemdu@gmail.com

© TamilOnline.com