மூடநம்பிக்கையைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றாதீர்
அந்தக் காலத்தில் கிராமத்து வீடு ஒவ்வொன்றிலும் நிறைய நெல் மூட்டைகள் இருக்கும்; அதற்காக அங்கே ஏராளமான எலிகளும் இருக்கும். அப்படி ஒரு வீட்டில் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சத்திய நாராயண பூஜை செய்வார்கள். அதற்காக நிறையப் பாலும் நெய்யும் முதல்நாள் இரவே சேகரித்து வைப்பார்கள். அங்கிருந்த எலிகளைத் தேடிப் பூனை வருவது வழக்கம். பூனைக்கோ எலியைவிடப் பாலும் தேனும் அதிகம் பிடிக்கும். பூனைகளுக்கு எட்டாத இடத்தில் பத்திரமாகப் பாலையும் நெய்யையும் வைப்பார்கள்.

பூஜை நாளன்று எளிதாக எடுத்துப் பயன்படுத்த வசதியாகப் பாலையும் நெய்யையும் பூஜையறையின் அருகே திறந்து வைத்திருப்பார்கள். இந்தச் சந்தர்ப்பத்தைத் திருட்டுப் பூனை பயன்படுத்திக் கொள்ளும். அந்த வீட்டின் எஜமானர் பூனையின் கழுத்தைப் பிடித்துத் தூக்கிக் கொண்டுபோய், ஒரு கூடைக்குள் அடைத்து, கூடைமேல் ஒரு கனமான கல்லை வைத்துவிடுவார். அப்போது அதனால் புனிதப் பொருட்களின் அருகே போய் விஷமம் செய்யமுடியாது. ஒரு வீட்டில் ஒவ்வொரு பௌர்ணமியன்றும் இப்படிச் செய்வது வழக்கமாக இருந்தது.

அந்த வீட்டின் குழந்தைகளும், பேரக்குழந்தைகளும், பௌர்ணமி நாளன்று பூஜை இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஒரு பூனையைக் கூடைக்குள் அடைத்துக் கனத்த கல்லை வைத்துவிட வேண்டும் எனக் கருதினர். அதற்காக அவர்கள் ஒரு பூனையைத் தேடிப்பிடித்து வீட்டுக்குக் கொண்டுவந்தனர். அப்போதுதானே கூடைக்குள் பூனை வைக்கிற சடங்கைத் தவறாமல் செய்யமுடியும்!

காலப்போக்கில் இதன் உண்மையான பொருளும் நோக்கமும் மறக்கப்பட்டது. பிந்தைய தலைமுறையினர், ஒரு பூனையை முன்னோர் செய்தபடி அடைத்து வைக்காவிட்டால் ஆபத்து நேரும் என்று நம்பத் தொடங்கினர். முதலில் பெரிய தொந்தரவாகக் கருதப்பட்ட பூனைக்கு இப்போது மிகுந்த முக்கியத்துவம் கிடைத்துவிட்டது. இதுதான் குருட்டுத்தனமாகப் பின்பற்றுதல் என்பது!

நன்றி: சனாதன சாரதி, ஜனவரி 2019

பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா

© TamilOnline.com