வேணும் ஆனா வேண்டாம்!
அன்புள்ள சிநேகிதியே,
குட் மார்னிங் ஆன்ட்டி, எனக்கு ஒரு பிரச்சனை. என் கணவர், மாமியார் இரண்டு பேரும் உங்ககிட்ட கேக்கச் சொன்னாங்க.

எங்க அபார்ட்மெண்டிலேயே எனக்கு ஒரு நெருங்கிய தோழி இருக்கா. அவ மாமியார் அவளைப் பார்க்க வராங்க. இந்தியாவிலே பெரிய ஆபீசராயிருந்து ஓய்வு பெற்றவங்க. என் தோழி வேலை பாக்கறா. நான் வீட்டுல இருக்கேன். எனக்கு அஞ்சுமாசக் கைக்குழந்தை இருக்கு. போன மாசம் என் தோழி வீட்டுல பார்ட்டி இருந்தது. அப்போ ஒரு டிஷ் நல்லா இருந்து நான் பாராட்டினேன். அவுங்க மாமியார் செஞ்சாங்களாம். மாமியாருக்கு ரொம்ப சந்தோஷமாயிடுச்சு. அவுங்க அன்னைக்கு பாட்டு வேற பாடினாங்க. எனக்கு அதுவும் பிடிக்கும். அந்த மாமியாருக்கு என்னை ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அன்னையிலேர்ந்து என்னை ஓவரா பிடிச்சு வச்சுக்கிட்டு உடமாட்டேங்கறாங்க. அவுங்களுக்கு அங்கே போரடிக்குது. நான் வீட்ல இருக்கேன். தினமும் வர ஆரம்பிச்சாங்க. உனக்கு அந்த டிஷ் சொல்லிக் கொடுக்கறேன், இந்தப் பாட்டு சொல்லிக் கொடுக்கறேன்னு தொடங்கினாங்க. கொஞ்ச நாள் எனக்கும் பிடிச்சு இருந்தது. நமக்கு எவ்வளவோ உதவறாங்கன்னு சந்தோஷப்பட்டேன். இப்போ எனக்கு கஷ்டமாத் தெரியுது. குழந்தைய சரியாக் கொஞ்ச முடியலை. வீட்டு வேலை தங்கிப் போயிடறது. என் கணவர் 'Work from Home' செய்யும்போது அவருக்கும் கஷ்டமாக இருக்கு. அவங்களை ஏன் தினம் வரச் சொல்றேன்னு என்னைக் கோவிச்சுக்கிறாரு. நான் என்ன செய்ய? எப்படிச் சொல்றதுனு தெரியலே. இப்பல்லாம் அவங்க பெல் அடிச்சாலே எனக்கு திக்குன்னு இருக்கு. அவுங்க நல்லவங்கதான். ஆனா பேசும்போது ஒரு அதிகாரத் தொனி இருக்கும். எல்லாத்துலேயும் உரிமை எடுத்துக்கிட்டு, நான் செய்யும் ஒவ்வொரு வேலைக்கும் ஒரு ஒப்பீனியன் கொடுப்பாங்க. எனக்கு அது பிடிக்காமல் போயிருச்சி. அவங்களைப் புண்படுத்தாம எப்படி அவங்க வரதை நிறுத்தமுடியும்னு யோசிக்கிறேன். என் மாமியார்கிட்டே இந்தியாவிலே பேசிக்கிட்டிருந்தபோது, அவுங்க, உங்களுக்கு எழுதிக் கேட்கச் சொன்னாங்க. அவங்க இங்க வரும்போதெல்லாம் கருத்தா 'தென்றல்' வாங்கிப் படிப்பாங்க. நான் அவ்ளோ படிச்சதில்லை. ஒண்ணு, ரெண்டு உங்க கட்டுரை படிச்சுருக்கேன். நல்லா இருந்தது. ஆனா, இப்போ எனக்கு Relevent ஆக இல்லை. இப்போது புரியுது. எனக்கு வேண்டியதெல்லாம் மூன்று விஷயம்தான். 1. அந்த ஆன்ட்டி புண்படக்கூடாது. 2. அவுங்க வரதை முழுசா நிறுத்தவும் வேண்டாம். 3. எனக்கும் என் தோழி குடும்பத்துக்கும் நட்புறவு தொடரணும். தோழி கணவர் தப்பா எடுத்துக்கக் கூடாது

உதவுங்கள் ஆன்ட்டி, ப்ளீஸ்.

இப்படிக்கு,
...........


அன்புள்ள சிநேகிதியே
உங்கள் சங்கடம் புரிகிறது. சிறிய விஷயம்தான். ஆனால், அணுகுமுறை அவசியம் தேவையாக இருக்கிறது. அதுவும் அந்த அம்மா மனம் நோகாமல் இருக்கவேண்டும்.

உங்கள் தோழியிடம் இதுபற்றிப் பேசினீர்களா என்று தெரியவில்லை. அவருடைய ஆலோசனையைக் கேட்பதும் நல்லது. படித்துப் பெரிய பதவியில் ஓய்வு பெற்ற அவருக்கு, நீங்கள் ஒருமுறை, இரண்டுமுறை தவிர்க்க முனைந்தாலே புரிந்துவிடும். உங்களுடைய இளவயதும், உங்கள் ஆர்வமும் அவருடைய தனிமையைப் போக்கவும், தனித்துவத்தையும் அதிகாரத்தையும் காட்டவும் வசதியாக இருந்திருக்கிறது.

தெளிவாகவும், குழந்தைத் தனமாகவும் அவருடன் பேசலாம். எப்படி அவர் வருகையால் பொழுதுபோவதே தெரியவில்லை, இன்பமாக இருக்கிறது என்பதை எடுத்துச் சொல்லி, எப்படி வீட்டுவேலை மண்டிக் கிடக்கிறது. கணவர் கோபித்துக் கொள்கிறார் என்ற விவரத்தை குழந்தைபோலப் பேசி, அவர் வருகைக்கென்று தனி நேரம் ஒதுக்குவது சிறந்தது என்பதைச் சொல்லலாம். தினமும் ஒருமணி நேரம் அவருக்கென ஒதுக்கிவிட்டு, பிறகு இரண்டு நாளைக்கு ஒருமுறை என்று மெள்ளக் குறைத்துக் கொள்ளலாம். இல்லை ஒருமுறை அவர் உங்கள் வீட்டிற்கும், இன்னொரு முறை நீங்கள் அவர் வீட்டிற்கும் செல்வதுபோல ஏற்பாடு செய்து கொள்ளலாம். மொத்தத்தில், you have to make her feel important; you have to acknowledge her support and help with sincerity. Same ways you can make her realize her visits as mild intrusions and inconvenience. புரிந்துகொள்வார் என்று நினைக்கிறேன்.

வாழ்த்துக்கள்,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்
Personal Queries: drcv.listens2u@gmail.com

© TamilOnline.com