ஜனனி சிவகுமார்
ஜனனி சிவகுமார் உயர்நிலைப் பள்ளியில் (Metuchen High School, Metuchen, NJ) 10ம் வகுப்பு படிக்கும் மாணவி. ஆனால் அவர் ஐக்கிய நாடுகள் சபையின் 74வது பொதுமன்றத்தின் தட்பவெப்பச் செயல்பாட்டு மாநாட்டில் உலகத் தலைவர்களிடையே, உலக சமாதான நாளான செப்டம்பர் 20, 2019 அன்று பேசியபோது அனைவரும் மூச்சுவிட மறந்து கேட்டனர். இது எப்படிச் சாத்தியமாயிற்று?

ஜனனி 2018ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் தன்னார்வ நிறுவனங்கள் மாநாட்டிற்குப் பங்கேற்கச் சென்றபோது பலவற்றைக் கூர்ந்து கவனித்தார். அதில் சூழல் செயல்பாடு, பொறுப்பு வாய்ந்த உற்பத்தியும் நுகர்வும், பாலின சமத்துவம் ஆகியவை அவரது கவனத்தை ஈர்த்தன. சொல்ல மறந்து விட்டோமே, இவர் இந்தியாவில் கேர்ள்ஸ்ப்ளே குளோபல் என்கிற அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறார். அதன்மூலம் சென்ற கோடை விடுமுறையில் கிட்ஸ் ஃபார் கிளைமேட் ஆக்‌ஷன் என்கிற இயக்கத்தையும் ஆரம்பித்தார்.டிரைஸ்டேட் தமிழ்ப்பள்ளியின் வளர்தமிழ் இயக்கம் இந்தச் செயல்திட்டத்தை ஐக்கிய நாடுகள் சபைக்குப் பரிந்துரைத்தது. மிகுந்த போட்டிக்கிடையே தேர்ந்தெடுக்கப்பட்ட 10 திட்டப்பணிகளில் இது ஒன்றாயிற்று. இவரை ஐக்கிய நாடுகள் சபை பொதுமன்றத்தில் பேச அழைத்தபோது ஜனனி மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார். அங்கே தமது உரையில் "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்ற கணியன் பூங்குன்றனாரின் அமரத்துவம் பெற்ற அறிவிப்பையும், சுவாமி விவேகானந்தரின் "எழுமின், விழிமின், இலக்கை எட்டும்வரை நில்லன்மின்" என்ற உயிர்ப்பான அறைகூவலையும் ஜனனி மேற்கோள் காட்டியிருந்தார்.

"சென்னையில் சென்ற ஆண்டு ஏற்பட்ட கடும் தண்ணீர் பஞ்சம், நமக்கு ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புக் குறித்து என் கண்களைத் திறந்துவிட்டது. அவர்கள் குடிக்கவும் விவசாயத்துக்கும் தண்ணீர் இல்லாமல் திண்டாடியதை, கோடை விடுமுறையில் அங்கு சென்றபோது பார்த்தேன். சென்ற சில வருடங்களாகவே கோடை விடுமுறைக்கு என் பெற்றோரின் ஊருக்குச் சென்று அங்குள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களைச் சந்தித்து அவர்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்து வருகிறேன். அங்குள்ள ஆயிரத்துக்கும் மேலான பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு என்னுடைய சூழல் செயல்பாட்டுச் செய்தி சென்று எட்டியுள்ளது. வாழ்க்கையில் சிறுசிறு மாற்றங்களைச் செய்து கொள்வதன் மூலமே நாம் சூழலில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவர முடியும்" என்கிறார் ஜனனி.முன்னரே UNICEF நடத்தும் இளையோர் குரல் என்கிற வலைப்பக்கத்தில் எழுதிவருகிறார் ஜனனி. அதில் உலகளாவிய பிரச்சனைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகளைப் பற்றிய இவரது கட்டுரைகள் பலரின் கவனத்தைக் கவர்ந்தவை அதுமட்டுமல்லாமல் வேர்ல்ட் வீகன் விஷன் என்கிற லாபநோக்கற்ற அமைப்பிலும் இவர் இளையோர் தூதுவராக இருக்கிறார். UN Global Girls Word Cup Finals டீமின் மதிப்பீட்டுக் குழுவிலும் இவர் உறுப்பினர். தீவிர வீகனான இவர் NJ Student Sustainability Coalition (NJSSC) அமைப்பின் சென்ட்ரல் ஜெர்சிக்கான ஒருங்கிணைப்பாளர். "அமெரிக்காவில் உள்ள கால்நடைப் பண்ணைகளில் இருந்து வெளியாகும் கிரீன்ஹவுஸ் வாயுக்கள், வாகனங்களில் இருந்து வெளியாகும் நச்சுப்புகையினால் ஏற்படும் தீங்கினைவிட அதிகத் தீமையை உண்டாக்குகின்றன" என்கிறார் ஜனனி.

ஜனனி பேச்சில், செயலில் மட்டுமல்ல விளையாட்டிலும் வீரர்தாம். Jersey Knights என்னும் மாவட்ட சாக்கர் டீமிலும், பள்ளி சாக்கர் டீமிலும் விளையாடும் இவர் பள்ளியின் சுற்றுச்சூழல் சங்கம், வீகன் கிளப் ஆகியவற்றிலும் உறுப்பினர். தமிழ் நாட்டில் தனது கேர்ள்ஸ் ப்ளே குளோபல் அமைப்பின் மூலம் பெண்களும் விளையாட்டுக்களில் பங்கேற்றுத் தன்னம்பிக்கை, உடல்வலிமை, மனவுறுதி ஆகியவற்றைப் பெறவேண்டும் என்கிற விழிப்புணர்வை ஊட்டி வருகிறார்.சின்மயா மிஷனின் பாலவிஹார், ஹிந்து ஸ்வயம் சேவக் சங்கத்தின் பால கோகுலம் ஆகியவை இவருக்கு பாரதத்தின் கலாசாரம், அறம் இவை குறித்த தெளிவான பார்வையைக் கொடுத்தது. ராமேஸ்வரம், சபரிமலை தொடங்கி, ஹரித்வார், ரிஷிகேசம் வரை இந்தியாவின் புண்ணியத் தலங்களையும் இவர் தரிசித்திருக்கிறார். இந்தியர்களைத் தட்டியெழுப்ப விவேகானந்தரின் வீரவுரைகளுக்கு இணையில்லை என்கிறார் ஜனனி.

அது சரி பொதுச்சேவையில் எப்படி இத்தனை ஆர்வம் என்று கேட்டால், தன் பெற்றோரிடம் இருந்து வந்தது என்கிறார். அவருடைய தாயார் கார்த்திகா பழனிச்சாமி, தாமே ஒரு மென்பொருள் நிர்வாகியாகப் பணியாற்றிய போதும், நியூ ஜெர்சியில் ஒரு தமிழ்ப்பள்ளியைத் தொடங்கி நடத்த இடையறாது உழைப்பதைப் பார்த்து, தனக்கும் பொதுச்சேவையில் ஈடுபாடு வந்தது என்கிறார். சொந்தமாக ஒரு மென்பொருள் கம்பெனி நடத்துகிற தந்தையார் சிவகுமார் கந்தசாமியும் தாயாரும் கோயம்புத்தூரின் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாம்.ஜனனியின் BBC நேர்காணல், Linked In பதிவுமதுரபாரதி

© TamilOnline.com