அரங்கேற்றம்: ரித்திகா குஜ்ஜர் & சஞ்சனா சங்கர்
ஆகஸ்ட் 11, 2019 அன்று திரிவேணி நாட்டியப் பள்ளி நீனா குலாத்தி அவர்களின் மாணவியர் ரித்திகா குஜ்ஜர் மற்றும் செல்வி சஞ்சனா சங்கரின் நடன அரங்கேற்றம் நார்த் ஆண்டோவரில் நடைபெற்றது. இருவரும் குழந்தைப்பருவத்தில் இருந்தே ஒன்றாக நடனம் கற்றவர்.

அரங்கேற்றத்தை "பத வந்தே" என்ற விநாயக வந்தனத்துடன் ஒடிசி நடன வகையில் ஆரம்பித்தனர். அடுத்து குரு கேலுசரண் மொஹபத்ரா வசந்தா ராகத்திற்கு அமைத்த நடனத்தை ஆடினர். இது கர்நாடக இசைக்கருவிகளைப் பற்றி விவரிக்கும் அருமையான நடனம். இதில் சஞ்சனாவும் ரித்திகாவும் உற்சாகமாக ஆடினர். அடுத்தது நிகழ்ச்சியின் சிகரமாக அமைந்த, ஹம்சத்வனி ராகத்தில் அமைந்த கடினமான, குரு கேலுசரண் அமைத்த நடனம். குறிப்பாகச் சொல்வதென்றால், ஓமி அமரசிங்கம் அமைத்த நடன அசைவுகள் மிக அழகாக சஞ்சனா மற்றும் ரித்திகாவால் வெளிப்படுத்தப்பட்டன. பிரணாய் சோப்ரா இசைக் குழுவோடு ஒத்துழைத்து லய பாவங்களை வெளிக்கொணர்ந்தார்.

அடுத்து, நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாக ஜெயதேவரின் தசாவதாரம் அரங்கேறியது. சஞ்சனாவும் , ரித்திகாவும் விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும், அழகான அபிநயத்தோடு ஆடி, ஒவ்வொரு அவதாரத்தையும் தனிப்பட மிளிரச் செய்தனர். சஞ்சனாவின் நரசிம்ம அவதாரம் காண்போரை மெய் சிலிர்க்க வைத்தது.

இடைவேளைக்குப் பிறகு ரித்திகா தனியாகக் குச்சிபுடி நடனம் "ஜெயமு ஜெயமு" என்ற பாடலுக்கு ஆடினார். இது குச்சிபுடி கிராமத்தின் தெய்வம் பாலாதிரிபுரசுந்தரியைக் குறித்த பாடல். குரு வேம்பட்டி சின்ன சத்யத்தின் மிகக் கடினமான பாவங்களையும், அபிநயங்களையும் ரித்திகா திறம்பட வெளிப்படுத்தி ஆடினார். பிரணாய் சோப்ரா இப்பாடலுக்கு நட்டுவாங்கம் செய்தார். சஞ்சனா பின்னர் குச்சிபுடி பாணியில் மிகப் பிரபலமான கிருஷ்ண சப்தத்தைத் தனிநடனமாக வழங்கினார். ராஜாரெட்டி வடிவமைத்த இந்நடனத்தில் சஞ்சனா, கிருஷ்ணரிடம் ஒரு கோபிகையின் ஏக்கத்தையும், கிருஷ்ணரைக் கவர்ந்திழுக்கும் பலவித பாவங்களையும் சிறப்புறச் சித்திரித்தார். இது அவளது குரு நீனா அவர்களின் வழிகாட்டுதலும் நிபுணத்துவமும் தந்த வரம்.

அடுத்து, செல்வியர் பரதநாட்டியத்தில் யமுனாகல்யாணியில், "கிருஷ்ணா நீ பேகனே பாரோ" என்ற பாடலுக்கு நடனமாடி பாலகிருஷ்ணன் லீலைகளை உயிர்ப்பித்தனர். தாய் யசோதாவாகவே மாறி விட்டார் சஞ்சனா. குறும்புத்தனமான கிருஷ்ணனின் விளையாட்டை ரித்திகா அழகாக வெளிப்படுத்தினார். இறுதியாக, மதுரை ஆர். முரளிதரன் இசையமைத்த, மஹதி ராகத் தில்லானாவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து நடனக் கலைஞர்கள் இருவரும் பித்தளைத் தாம்பாளத்தின் விளிம்பில் நடனமாடினர். மற்றொரு குருவான திருமதி ரேவதி ராமசாமி இசைக்குழுவில் வீணை இசைத்தார்.

ஆங்கிலத்தில்: பிரணாய் சோப்ரா
தமிழாக்கம்: சீதா கௌதமன்

© TamilOnline.com