இறைநாமமும் கர்ம வினையும் சேர்ந்திருக்க முடியாது
500 ஆண்டுகளுக்கு முன்னர் கேரளத்தில் பில்வமங்களர் என்ற பெயரில் ஒரு பெரிய மகான் இருந்தார். அவருடைய பக்தியும் சாதனையும் எத்தகையவை என்றால், அவர் கூப்பிட்டால் கிருஷ்ணர் உடனே தோன்றுவார். மிகுந்த வயிற்றுவலியால் சிரமப்பட்ட ஒருவர் இதனைக் கேள்விப்பட்டார். அவர் தனது வயிற்றுவலி தீருமா தீராதா என்று கிருஷ்ணரிடம் கேட்கச் சொல்லி பில்வமங்களரை நச்சரித்தார். அதற்கு ஒப்புக்கொண்ட பில்வமங்களர் அடுத்தமுறை கிருஷ்ணர் வந்தபோது அதைக் கேட்டார். "உருளுவது நின்றால் அதுவும் நிற்கும்" என்றார் கிருஷ்ணர். "வலியில் உருண்டு புரளுவது நின்றால் அது நிற்கும்" என்பதாக அந்த நோயாளி புரிந்துகொண்டார்.

வலி மிகுந்தால் உருளாமல் என்ன செய்வது என்பதாக எண்ணிய அவர் கேரளத்தை விட்டுச் சென்றார். ஏதேனும் ஒரு புனிதத் தலத்தில், இன்னும் பெரிய மகான் ஒருவரைச் சந்தித்துத் தனது பிரச்சனைக்கு நல்ல விடை ஒன்றைப் பெற அவர் ஆசைப்பட்டார். ஆனால் பில்வமங்களரோ, பிராரப்த கர்மத்தின் (முந்தைய ஜன்மங்களில் செய்த வினைகளின்) காரணமாக இந்தத் துன்பம் வந்துள்ளது என்று கூறினார். உருளுதல் என்பதற்கு அவர் "ஒரு பிறவியில் இருந்து மற்றொரு பிறவிக்கு உருளுதல்" என்பதாகப் பொருளுரைத்தார்.

காசிக்குப் போகிற வழியில் குருரம்மா என்ற பக்தை ஒருவர் நடத்திய அன்னசத்திரத்தை அவர் அடைந்தார். அவரது துயரத்தைப் பார்த்த குருரம்மா அவரிடம் கருணையோடு பேசினார். வயிற்று வலிக்காரர் அவளிடம் முன்ஜன்ம வினையிலிருந்து தப்ப வழியில்லை என்பதால் தான் கங்கையில் முழுகி உயிரை விடப்போவதாகக் கூறினார். குருரம்மா அவரை முட்டாள் என்று கூறியதோடு, "கோபீஜன வல்லபாய நமஹ" என்ற மந்திரத்தை ஜபிக்குமாறு உபதேசித்தார். அந்த நாமம் அவரை முழுமையாகக் குணப்படுத்திவிடும் என்று கூறினார். அடுத்தமுறை வலி வந்தபோது நோயாளி அதனை ஜபிக்கவே, வலி ஓடிப்போனதைக் கண்டு அவர் ஆச்சரியப்பட்டார். வயிற்றின் மீது பலமாகக் குத்தினாலும் வலிக்கவில்லை!

காசி யாத்திரையை முடித்துக்கொண்டு அவர் கேரளத்துக்குத் திரும்பியதும் பில்வமங்களரின் பாதங்களில் விழுந்தார். முந்தைய ஜன்மங்களின் கர்மவினையால் ஏற்பட்ட வயிற்றுவலி என்ன ஆயிற்று என்று பில்வமங்களர் கேட்டார். அது போய்விட்டது என்று இவர் விடை கூறினார். பில்வமங்களர் கிருஷ்ணரை அழைத்து, "உருளுவது" என்று அவர் கூறியதன் பொருள் என்ன என்று கேட்டார். ஒரு பிறவியிலிருந்து மறு பிறவி எடுத்துப் பாவ புண்ணியங்களைச் சேர்ப்பது என்றுதான் அவர் எண்ணியிருந்தார். நோயாளியோ வலி வந்தபோது உருளுவது என்று புரிந்துகொண்டிருந்தார்.

கிருஷ்ணர் கூறியதன் பொருளோ, 'தொடர்ந்து மாற்றமடையும் இயற்கை என்பதாகிய உலகாயதப் பொருள்களில் உருளுவது' என்பதாகும். கடவுளின் நாமத்தைத் தவிர வேறெந்த எண்ணமும் இல்லாமல் நோயாளி வாழ்ந்தபோது, 'உருளுவது' நின்று போயிற்று. இறைவனின் திருநாமமும் கர்மவினைத் தொடரும் ஒன்றாக இருக்கமுடியாது. நாமஸ்மரணம் செய்தால் கதிரவனின் முன்னர் பனியேபோலப் பிராரப்தம் கரைந்துருகிப் போகும். பில்வமங்களரே இதனை அன்றுதான் அறியவந்தார்.

நன்றி: சனாதன சாரதி, டிசம்பர் 2018

பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா

© TamilOnline.com