இந்தியருக்கு நோபெல் பரிசு
1998ல் ஆமார்த்யா சென், பொருளாதாரத்திற்கான நோபெல் பரிசு பெற்றார். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் பொருளாதார அறிஞர் அபிஜித் பேனர்ஜி, 2019ம் ஆண்டிற்கான நோபெல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். எஸ்தர் டுஃப்லோ, மைக்கேல் கிரேமர் ஆகியோருடன் இப்பரிசை இவர் பகிர்ந்து கொள்கிறார். மாசசூஸெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (MIT) பொருளியல் பேராசிரியராகப் பணியாற்றிவரும் அபிஜித், இந்தியாவில் பிறந்தவர். கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் இளநிலைக் கல்வியும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுநிலைக் கல்வியும் பயின்றார். பின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆய்வுசெய்து டாக்டர் பட்டம் பெற்றார். ஹார்வர்டு மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகங்களில் ஆசிரியப் பணிபுரிந்தார். தற்போது எம்.ஐ.டி.யில் சர்வதேசப் பேராசிரியராகப் பணி புரிந்து வருவதுடன், அப்துல் லத்தீப் ஜமீல் வறுமை நடவடிக்கை ஆய்வகத்தின் (Abdul Latif Jameel Poverty Action Lab) நிறுவனர் மற்றும் இயக்குநராகவும் இருக்கிறார். இந்த அமைப்பு கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தமிழக அரசுடன் இணைந்து பணியாற்றி வருகின்றது.

ஃபிரான்சில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் எஸ்தர் டுஃப்லோ இவரது மனைவி. இவரும் MIT பேராசிரியர். உலக அளவில் வறுமையை ஒழிப்பதற்கான இவர்களின் சோதனை அணுகுமுறைக்காக இவர்கள் நோபெல் வென்றுள்ளனர். நோபெல் பரிசு பெறும் ஆறாவது இணையர் இவர்கள். பரிசு, தங்கப் பதக்கத்துடன் 6.52 கோடி ரூபாய் ரொக்கமும் கொண்டது.

தனது பணிகளுக்காக 'அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயன்ஸ்', 'ஜெரால்டு லியோப் இன்ஃபோசிஸ்' போன்ற அமைப்புகள் வழங்கிய விருதுகளை முன்னர் அபிஜித் பெற்றுள்ளார். 2011ல் 'ஃபாரின் பாலிசி' பத்திரிகையில் உலகின் சிறந்த 100 சிந்தனையாளர்களில் ஒருவராக இடம் பெற்றார். நூற்றுக்கணக்கில் ஆய்வு கட்டுரைகளையும் மூன்று நூல்களையும் வெளியிட்டுள்ளார். 'The Name of the Disease' என்ற ஆவணப் படத்தையும் இயக்கியுள்ளார்.

நோபெல் பரிசுபெற்ற வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஹர்கோபிந்த் குரானா, சுப்ரமணியன் சந்திரசேகர், வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் வரிசையில் இணைகிறார் அபிஜித்.

அபிஜித் பேனர்ஜிக்குத் தென்றலின் வாழ்த்துக்கள்.

© TamilOnline.com