ஹூஸ்டன் தமிழ் இருக்கைக்கு நிதியுறுதி ஒப்பந்தம்
அக்டோபர் 1, 2019 நாளன்று ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி மற்றும் கலாசார ஆய்வை ஆதரிக்கும் பொருட்டு இருக்கை ஒன்றை ஏற்படுத்த $2 மில்லியன் டாலர் நிதி தருவதற்கான ஒப்புதல் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. ஹூஸ்டன் தமிழாய்வு இருக்கை (Houston Tamil Studies Chair, Inc. - HTSC) என்னும் லாபநோக்கற்ற அமைப்பு இதனைச் செய்துள்ளது. 2019ல் தொடங்கப்பட்ட இவ்வமைப்பு ஹூஸ்டன் பல்கலையில் தமிழாய்வுகளுக்கென ஓர் இருக்கை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் ரேனு கட்டோர், HTSC அமைப்பின் நிர்வாக உறுப்பினர்களோடு கொண்ட நெடுங்காலத் தொடர்பை நினைவுபடுத்திப் பேசினார். திரு சாம் கண்ணப்பன் பேசுகையில் சங்கப் புலவர் கணியன் பூங்குன்றனாரின் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பதை நினைவுகூர்ந்து, அதனை பாரதப் பிரதமர் மோதி அவர்கள் அண்மையில் பேசியதையும் குறிப்பிட்டு, ஒற்றுமையை வலியுறுத்தினார். தமிழ் அமெரிக்கர்களின் சாதனையைக் குறித்துப் பேசினார் டாக்டர் எஸ்.ஜி. அப்பன். HTSC அமைப்பின் நிதிநிலைமை குறித்துத் திரு தூப்பில் நரசிம்மன் எடுத்துரைத்தார்.

இந்த நிதி இரண்டு கட்டங்களாக அளிக்கப்படும். "எமது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இந்த மானியம் உலக அளவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தும்" என்றார் ஆன்டோனியோ டி. டில்லிஸ் (Dean of the College of Liberal Arts and Social Sciences, UH).

திருவாளர்கள் சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன், டாக்டர் எஸ்.ஜி. அப்பன், சொக்கலிங்கம் நாராயணன், பெருமாள் அண்ணாமலை, டாக்டர் நா. கணேசன், தூப்பில் வி. நரசிம்மன், டாக்டர் திருவேங்கடம் ஆறுமுகம் ஆகியோரின் நெடுநோக்கில் துவக்கப்பட்ட HTSC அமைப்பின் நிதி திரட்டல் முயற்சிகளையும் இவர்கள் முன்னெடுத்துச் செல்கிறார்கள்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com