அருள்மிகு ஸ்ரீபத்மநாப சுவாமி ஆலயம், திருவனந்தபுரம்
கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்னும் நாளும்
கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக்கில்லார்
விடமுடையரவின் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்தபுர நகர் புகுதும் இன்றே!
- நம்மாழ்வார்


கேரளத்தின் திருவனந்தபுரத்தில் உள்ளது ஸ்ரீ பத்மநாபசுவாமி ஆலயம். கேரள பாணியிலும் தமிழ்நாட்டுப் பாணியிலும் கலை அம்சங்களுடன் அமைந்துள்ளது இத்தலம். பிரம்ம புராணம், வராக, ஸ்கந்த, மத்ஸ்ய, பத்ம, வாயு, பாகவத புராணங்களிலும், மகாபாரதம் போன்றவற்றிலும், சங்க இலக்கியங்களிலும் கோவிலைப் பற்றிய விவரங்கள் உள்ளன.

கோவில் வசதி படைத்த பெரிய கோவிலாகும். இதற்குச் சேர, சோழ, பாண்டிய, பல்லவ அரசர்களாலும், திருவாங்கூர் அரச குடும்பத்தினராலும் விலைமதிப்பு மிக்க ஆபரணங்கள், மான்யங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. சிலப்பதிகாரத்தில், சேர அரசர் செங்குட்டுவன் காலத்தில் இத்தலத்திற்குப் பொன்னால் செய்த ஆபரணங்கள், விலையுயர்ந்த ஜாதிக் கற்கள் கோவிலுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இத்தலம் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. 108 திவ்ய தேசங்களில் இது 76வது திவ்ய தேசம். மூலவர் திருநாமம், ஸ்ரீ அனந்தபத்மநாபன். தாயார் ஸ்ரீஹரிலக்ஷ்மி என்னும் ஸ்ரீதேவி. தீர்த்தம்: மத்ஸ்ய, பத்ம, வராஹ தீர்த்தங்கள். பரசுராமர் துவாபரயுகத்தில் கோவில் நிர்வாகத்தைக் கேரள போத்திமார்கள் வசம் ஒப்படைத்தார். இந்த விவரம் கேரள மஹாத்மியம், பிரம்மாண்ட புராணத்தின் ஒரு பகுதியில் காணப்படுகிறது. ஆரம்பத்தில் இலுப்பை மரத்தில் செய்யப்பட்ட மூல விக்கிரகம் 1686ம் ஆண்டில் தீப்பிடித்தது. அதன் பின்னர் கடுசர்க்கரை யோகம் என்னும் கலவையால் 12008 சாளக்கிராம கற்களை இணைத்து புதிய சிலை உருவாக்கப்பட்டது. அனந்தன் என்ற பாம்பின் மீது பள்ளிகொண்ட அனந்த பத்மனாப சுவாமி விக்கிரகம் 18 அடி நீளம் உடையது. உடல் முழுவதும் தங்கத் தகட்டில் பதிக்கப்பட்டுள்ளது. திருவாங்கூர் சமஸ்தானம் அரச வம்சத்தை சேர்ந்தது.

பதினெட்டாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் அனுஷம் திருநாள் மார்த்தாண்ட வர்மா தனது மாமாவை வென்று தனது இருபத்தி மூன்றாவது வயதில் அரச பதவிக்கு வந்தார். அவரது உறவினர்கள் பத்மநாப சுவாமி கோவிலைப் புதுப்பித்தனர். 1750 ஆண்டு அனுஷம் திருநாளன்று திருவாங்கூர் அரசு பத்மநாப சுவாமிக்குக் கொடுக்கப்பட்டு எல்லாப் பொறுப்புக்களும் தேவஸ்தானத்தில் கொடுக்கப்பட்டது.

வில்வமங்கள சுவாமி, நாராயணனுக்குப் பூஜை செய்துவந்தார். அந்தநேரம் பெருமாள் ஒரு சிறுவன் வடிவில் வந்து பூஜையின்போது சுவாமியாருக்கு தொந்தரவு கொடுத்தார். சுவாமியார் மீது ஏறி விளையாடுவது, பூஜை புஷ்பங்களை எடுத்து நாசம் செய்வது, பூஜைப் பாத்திரங்களில் சிறுநீர் கழித்தல் என மாயக்கண்ணனின் லீலைகள் போல் நடத்தினார். கோபத்தில் சாமியார் "உண்ணி கண்ணா! தொந்தரவு செய்யாதே" என அவனைப் பிடித்து தள்ளினார். கோபமடைந்த கண்ணன் சுவாமியார்முன் தோன்றி, "பக்திக்கும் துறவுக்கும் பொறுமை தேவை. இனி நீ என்னைக் காண வேண்டுமானால் அனந்தன் காட்டுக்கு வரலாம், உன்னைச் சோதிக்கவே வந்தேன்" எனக் கூறிவிட்டு மறைந்தார். தனது தவறை உணர்ந்த சாமியார், அனந்தன் காட்டைத் தேடி அலைந்து பக்கத்தில் குடிசையில் கணவன்-மனைவி சண்டையில், "உன்னை அனந்தன் காட்டில் தூக்கி எறிந்துவிடுவேன்" என்று கத்த, அவர்களிடம் காட்டின் இருப்பிடம் தெரிந்துகொண்டு, காட்டில் கல்லும் முள்ளும் கடந்தபின் பகவானைக் கண்டார். பகவான், சுவாமியாரிடம் பசிப்பதாகக் கூற, அவர் காட்டில் கிடைத்த மாங்காயுடன் உப்புச் சேர்த்து தேங்காய்த் துண்டுடன் வைத்து பகவானுக்கு அளித்தார். பின்னர் திருவாங்கூர் மன்னரிடம் தகவல் தெரிவித்தார். மன்னன் பூஜாரிகளை அழைத்துக் கொண்டு அங்கு வந்து பார்த்தபோது பகவான் அங்கே இல்லை. இருப்பினும் கோயில் கட்ட ஏற்பாடு செய்தான். அவ்விடம் பரந்தாமன் அனந்தன் என்ற பாம்பின் மீது பள்ளிகொண்ட சிலையைப் பிரதிஷ்டை செய்தபின் பத்மநாபசுவாமி என்ற திருநாமம் சூட்டப்பட்டது.மூலவர் ஹேமகூட விமானத்தின் கீழ் வீற்றிருக்கிறார். கர்ப்பகிரகத்தில் சுவாமி விக்கிரகம் அனந்தன் என்ற பாம்பின்மீது சயனித்து திருமுகம், திருவுடல், திருப்பாதம் என மூன்று விதமாகக் காட்சி தருகிறார். மூன்று கதவுகள் மூலம் பெருமாளைத் தரிசிக்கலாம். முதல் கதவு மூலம் சயனத்தில் இருக்கும் பெருமாள், கையின் அடியில் சிவலிங்கம், ஸ்ரீதேவி-பூதேவி, பிரம்மா தாமரைமீது காட்சியளிக்கிறார். பெருமாளின் நாபியில் தாமரை காட்சியளிப்பதால் பத்மநாபசுவாமி என்ற பெயர் வழங்கப்பட்டது. இரண்டாவது கதவு மூலம் தங்கத்தாலான அபிஷேக மூர்த்திகளும், வெள்ளியாலான உற்சவ மூர்த்திகளையும் காணலாம். மூன்றாவது கதவின் மூலம் பெருமாளின் பாதங்கள், பூதேவி, மார்க்கண்டேயரைத் தரிசிக்கலாம். இரு தேவியரும் சாமரம் ஏந்தும் சிற்பங்கள், கருடன், நாரதர், தும்புரு, விஷ்ணுவின் ஆறு ஆயுதங்கள், சூரியன், சந்திரன், சப்த ரிஷிகள், மதுகைடபர் ஆகியோரும் உள்ளனர். திருவிதாங்கூர் மஹாராஜா சாஷ்டாங்க நமஸ்காரத்துடன் ஒட்டக்கல் மண்டபத்தில் பெருமாளுக்குத் தனது உடைமைகள் அனைத்தையும் தியாகம் செய்து விட்டதால், அவர் தங்க அங்கே அனுமதி கிடைத்தது. அரசர் சுவாதித்திருநாள் என்னும் பெயரில் சமஸ்கிருதத்தில் இயற்றிய, 'பத்மநாபா' என்ற முத்திரையுடன் கூடிய, பாடல்களை இன்றும் கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில் கேட்கலாம்.

கோயில் ஏழடுக்கு கோபுரத்துடன் பாண்டியர் காலப் பாணியில் கட்டப்பட்டுள்ளது. தெற்குப் பிரகாரத்தில் யோக நரசிம்மர், சன்னிதிக்கு முன்னால் அனுமானும், பின்னால் கிருஷ்ணனும் வீற்றிருக்கின்றனர். அனுமான் மீது சாற்றப்படும் வெண்ணெய் எவ்வளவு நாளானாலும் வெயில் காலத்திலும் உருகுவதில்லை. லக்ஷ்மி வராஹர் கோவிலும், ஸ்ரீநிவாசர் கோவிலும் தெற்குப் பக்கத்தில் உள்ளன. கிழக்குப் பக்கம் பிரதான வாயில் நாடக சாலையில், பிரசித்தமான கோவில் கலையான கதகளி நடனம் பத்து நாள் உற்சவத்தின்போது நடைபெறுகிறது..

பங்குனி மாதம் (மார்ச்-ஏப்ரல்), ஐப்பசி மாதங்களில் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, 41 நாள் திருவிழாவின் போது லட்சதீபம் நடக்கும். கோவிலில் பக்தர்கள் திருமணத் தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, கல்வியிற் சிறந்து விளங்கப் பிரார்த்தித்துக் கொள்கின்றனர். பெருமாளுக்கு வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். வருடந்தோறும் நவராத்திரி விழாவில் சுவாதித் திருநாள் சங்கீத விழா நடக்கிறது. கோயில் சன்னிதி காலை 4 முதல் 12 மணிவரை, மாலை 5 முதல் 8 மணிவரை திறந்திருக்கும்.

சீதா துரைராஜ்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

© TamilOnline.com