பிரக்ஞானனந்தா - உலக ஜூனியர் செஸ் சாம்பியன்
பிரக்ஞானனந்தாவுக்கு அறிமுகம் தேவையில்லை. (பார்க்க: தென்றல் ஜூலை 2018). அந்தச் சாதனையின் தொடர்ச்சியாக சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் வென்று 'உலக ஜூனியர் செஸ் சாம்பியன்' ஆகியிருக்கிறார். முதன்முறையாக இந்தியா இந்தப் போட்டியை நடத்தியது. 66 நாடுகளைச் சேர்ந்த 450 வீரர்கள் கலந்துகொண்டனர். U-14, U-16, U-18 ஆகிய மூன்று பிரிவுகளில், இரு பாலருக்கும் தனித்தனியாகப் போட்டிகள் நடந்தன. 18 வயதுக்குக் கீழ் பிரிவில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா பங்கேற்றார். மொத்தம் 11 சுற்றுகள் கொண்ட தொடரில், பிரக்ஞானந்தா 7 ஆட்டங்களில் வெற்றிபெற்று, 3 ஆட்டங்களை டிரா செய்தார்.

இறுதிப்போட்டியில் ஜெர்மனியைச் சேர்ந்த பக்கிள்ஸ் வேலன்டைனை எதிர்கொண்டார். அதுவரையிலான ஆட்டங்களில் பிரக்ஞானனந்தாதான் அதிகப் புள்ளிகளை வென்றிருந்தார். அந்த இறுதிப் போட்டியில் ஆட்டத்தை டிரா செய்து 9 புள்ளிகள் பெற்றார். இதன்மூலம் U-18 பிரிவில் உலக அளவில் புதிய சாதனை படைத்தார். பாரதம் முதன்முறையாக நடத்திய போட்டியில் ஓர் இந்தியர் வெற்றி பெற்றிருப்பது பெருமைக்குரியது. இதுநாள்வரை இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையைப் பெற்றிருந்த பிரக்ஞானனந்தா, தற்போது அவர் விரும்பியது போலவே ஜூனியர் பிரிவில் உலகச் சாம்பியன் ஆகிவிட்டார்.



"நான் விளையாடிய அனைத்துப் போட்டிகளும் சவாலாகவே இருந்தன. அனைத்து வீரர்களும் மிகச்சிறப்பாக விளையாடினார்கள். முதன்முறையாக இந்தியா பொறுப்பேற்று நடத்திய உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நான் மகுடம் வென்றதைப் பெருமையாகக் கருதுகிறேன். இந்தியாவில், இந்தியர்கள்முன் விளையாடியது மகிழ்ச்சியைத் தந்தது" என்று கூறினார் இந்த உற்சாகமான இளைஞர். இவரது வெற்றியைப் பாராட்டி உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், ட்விட்டரில், "Congrats!! Very proud of you!! In our next session in Chennai you have some nice games to show me!" என்று குறிப்பிட்டுப் பாராட்டியிருக்கிறார்.

18 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் ரஷ்ய வீராங்கனை சாம்பியன் பட்டம் வென்றார். இந்தியாவைச் சேர்ந்த வங்கிதா அகர்வால் வெள்ளியைக் கைப்பற்றினார்

இளம் சாதனையாளர்களை வாழ்த்துவோம் வாருங்கள்!

சிசுபாலன்

© TamilOnline.com