அரங்கேற்றம்: நேஹா பாஷ்யம்
ஆகஸ்ட் 18, 2019 அன்று மாலை நெய்வேலி குருகுலம் வழங்கிய‌ குமாரி நேஹா பாஷ்யத்தின் கர்நாடக சங்கீத அரங்கேற்றம் ஸான் ஹோசே இன்டிபென்டென்ஸ் ஹைஸ்கூல் அரங்கில் நடைபெற்றது. நேஹா கலைமாமணி நெய்வேலி சந்தானகோபாலன் அவர்களின் மாணவி. அவர் தனது குருவின் பாணியை மிக நேர்த்தியாக உள்வாங்கிப் பாடல்களிலும் மனோதர்ம ச‌ங்கீதத்திலும் அருமையாக வெளிப்படுத்தினார்.

சங்கராபரண வர்ணத்துடன் விறுவிறுப்பாகத் தொடங்கிய கச்சேரி. அம்புஜம் கிருஷ்ணாவின் "வேழ முகத்தரசே" என்னும் தர்பார் கிருதியில் களைகட்டியது. தொடர்ந்து அரிதான பாவனி ராகத்தில் அமைந்த தியாகராஜரின் "லேமி தெல்ப" கீர்த்தனத்தை ராகம், ஸ்வரங்களுடன் அபாரமாகக் கையாண்டு மனதைக் கவர்ந்தார். கரகரப்ரியா "சக்கனி ராஜ"வில் நேஹா விஸ்தாரமாக ராகம் நெரவல், கல்பனாஸ்வரங்கள் பாட, ஷ்ருதி மற்றும் அஜய்யின் பதிலில் அரங்கம் திளைத்தது. குரு திரு நெய்வேலி சந்தானகோபலன் இயற்றிய சாவேரி ராக பல்லவியை மகுடமாக எடுத்துக்கொண்டு அருமையாக ராகம் தானம் பல்லவி பாடியது கச்சேரியை உச்சத்திற்குக் கொண்டு சென்றது.

பின்னர் தமிழ்ப் பாசுரங்களை நயம்படப் பாடினார். இனிய குரலும், சுருதி சுத்தமும், கடின உழைப்பும், பல ஆண்டுகள் பயிற்சியும் நிறைவான கச்சேரிக்கு வழி வகுத்தன‌. கச்சேரிக்குக் குமாரி ஷ்ருதி சாரதி (வயலின்), திரு அஜய் கோபி (மிருதங்கம்), திரு M.N. ஹரிஹரன் (மோர்சிங்) ஆகியோர் திறம்படப் பக்கவாத்தியம் வாசித்தனர்.

உமா வெங்கட்ராமன்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

© TamilOnline.com