சங்கர நேத்ராலயா ஓம் டிரஸ்ட் 'திரிஷ்டி' நாட்டிய நாடகம்
செப்டம்பர் 8, 2019 அன்று, சங்கரநேத்ராலயா ஓம் டிரஸ்ட் 'திரிஷ்டி' என்ற நாட்டிய நாடகத்தை அட்லாண்டாவின், இன்ஃபினிட் எனர்ஜி மையத்தில் நடத்தியது. இதன் மூலம் திரட்டப்பட்ட $200,000 தொகை சென்னை சங்கர நேத்ராலயாவின் ஏழை நோயாளிகள் இலவச கண் சிகிச்சைத் திட்டத்துக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு மாநிலத்தவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு ஜெயகிரன் பகதலா அவர்கள் பல்வேறு மொழிகளில் சங்கர நேத்ராலயாவின் சேவைகளைப் பற்றியும், தற்போது கூகுள் தலைமைச் செயலதிகாரி திரு சுந்தர் பிச்சை அவர்களுடன் சங்கர நேத்ராலயா இணைந்து செயல்படும் நீரிழிவு விழித்திரை திட்டத்தைப் பற்றியும் அழகாகத் தொகுத்து வழங்கினார்.

சங்கர நேத்ராலயாவின் இலவச சிகிச்சை சேவைக்கென அமெரிக்காவில் நிதி திரட்டும் முயற்சிகள் குறித்தும், இந்தியாவில் சங்கர நேத்ராலயா வழங்கும் சேவைகள் குறித்தும், ஓம் டிரஸ்ட்டின் அட்லாண்டா பிரதிநிதி ஸ்ரீனி ரெட்டி வங்கிமல்லா, துணைத்தலைவர் மூர்த்தி ரெகபள்ளி மற்றும் தலைவர் பாலா ரெட்டி இந்தூர்த்தி ஆகியோர் விளக்கிப் பேசினர்.

திரிஷ்டி நாட்டிய நாடகம், ஹாசினி என்னும் கதாபாத்திரம் கண் பார்வையை இழக்கும் விதம், பார்வையின்மை காரணமாக அவர் அடையும் அனுபவங்கள், அதனையும் மீறி நடனத்தின் மீதான தனது ஆர்வத்தை அவர் திரும்பப் பெறும் விதம் ஆகியவற்றை மையக்கருவாகக் கொண்டிருந்தது. திறமையான குரு ஸ்ரீமதி பத்மஜா கெலாமும் அவரது குழுவும் இதனை அற்புதமாக வடிவமைத்து வழங்கினர். ஹாசினியாக நடித்த பிரியங்கா கசுலா "உங்கள் ஆர்வத்தைத் தொடரும்போது உள் உணர்வுகளுக்கு எல்லைகள் இல்லை" என்பதை அருமையாக வெளிப்படுத்தினார்.

இந்த நாட்டிய நாடகத்தை வழங்கக் கடினமாக உழைத்த பத்மஜா கெலாம், சித்தார்த்த கெலாம் மற்றும் குழந்தைகள் குழு, பாடல்களை எழுதிய டாக்டர் உமா உன்னி, இசையமைத்த ஆஷா ரமேஷ் ஆகிய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

மொபைல் கண் அறுவை சிகிச்சை ஊர்திக்கு நன்கொடை அளித்தவர்கள் மூர்த்தி ரேகாபள்ளி - மாதவி மற்றும் அனில் ஜாக்ரால்முடி - மகாலட்சுமி ஆவர். ஓம் டிரஸ்ட்டின் அட்லாண்டா கிளை தொடங்கியதிலிருந்து அதனை ஆதரித்து வரும் புரவலர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com