தெரியுமா?: இரும்பு மனிதருக்கு மாபெரும் சிலை
சர்தார் வல்லபாய் பட்டேல் விடுதலைக் காலத்துத் தேசத்தலைவர்களில் ஒருவரும் சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரும் ஆவார். இந்தியாவில் குட்டிக் குட்டியாகச் சிதறிக் கிடந்த 522 சமஸ்தானங்களை ஒருங்கிணைத்த மாமனிதர். இந்த இரும்பு மனிதரை நினைவுகூரும் பிரம்மாண்டமான இரும்புச் சிலை ஒன்று குஜராத் மாநிலத்தின் நர்மதா நதியின் குறுக்கே உள்ள சர்தார் சரோவர் அணைக்கட்டை நோக்கியவாறு அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலைக்கு 'ஒருமைப்பாட்டுச் சிலை' (Statue of Unity) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

182 மீட்டர் உயரமுள்ள இந்தச் சிலையை சர்தாரின் 143வது பிறந்த நாளான 31 அக்டோபர் 2018 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி திறந்துவைத்தார். இதற்குத் தேவையான 135 மெட்ரிக் டன் கழிவு இரும்பு, குஜராத் விவசாயிகளிடமிருந்து பழைய விவசாயக் கருவிகளாகப் பெறப்பட்டது.

பாரத அன்னையின் தவப்புதல்வர்களில் ஒருவரான சர்தார் பட்டேலின் சிலை, பாரதத்தின் தென்கோடிக் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர், விவேகானந்தர் சிலைகளுக்கு இணையான மகத்துவம் கொண்டது. அடுத்த முறை இந்தியா செல்லும்போது காணத் தவறாதீர்கள்.



© TamilOnline.com