மாபெரும் தவறு ஒன்று
(ஆனந்த் நீலகண்டன் எழுதிய 'Ajaya - Epic of the Kaurava Clan' நூலின் தமிழாக்கமான 'கௌரவன்' நூலிலிருந்து....)

நுழையுமுன் - காந்தாரம்
படைத்தளபதி அந்த அரண்மனைக்குள் நுழைந்தபோது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. கொட்டிக் கொண்டிருந்த மழையின் மந்தமான தாளத்தைத் தவிர, அந்த அரண்மனை, வழக்கத்திற்கு மாறாக மிகவும் அமைதியாக இருந்தது. அத்தளபதி அங்கிருந்த மரப் படிக்கட்டுகளை எட்டியபோது, திடீரென்று நின்றார். அவர் மனம் முழுதும் பயத்தால் நிரம்பியிருந்தது. அவருடைய பாதங்களின் அருகே பல வினோதமான வடிவங்களில் செந்நிற நீர்க் குட்டைகள் உருவாயின. குவளை மலர்களின் வெண்மையைக் கொண்டிருந்த, அரண்மனையின் குளிர்ந்த பளிங்குத் தரைகளின்மீது, அச்செந்நிற நீர்க் குட்டைகள் பிரகாசமாகப் பளிச்சிட்டன. தன்னுடைய கவச உடையைச் சரி செய்து கொண்ட அத்தளபதி, தன் உடலைத் துளைத்துச் சென்ற வலியால் முகம் சுளித்தார். அவருடைய உடலில் ஏற்பட்டிருந்த ஏராளமான காயங்களிலிருந்து ரத்தம் வழிந்தோடிக் கொண்டிருந்தபோதிலும், அவர் அந்த வலியைப் பொருட்படுத்தாமல், தன் உயரமான, மிடுக்கான உருவத்தை நேராக வைத்துக் கொண்டார். தொலைவில் இருந்த பனி படர்ந்த மலைகளிலிருந்து வீசிய மிகக் குளிர்ந்த காற்று அவருடைய நீண்ட, கருமையான தாடியைக் கலைத்துச் சென்று, கூரிய கண்ணாடிச் சில்லுகளைப்போல் அவருடைய உடலை ஊடுருவியது. கரடுமுரடான மலைப் பகுதிகளுக்கும் பனிபடர்ந்த கணவாய்களுக்கும் பழக்கப்பட்டிராத அவர், அந்தக் கடுங்குளிரில் உறைந்து போயிருந்தார். கிழக்கில் அமைந்த கங்கைச் சமவெளியைச் சேர்ந்தவர் அவர். அவர் தன் கையில் இறுகப் பற்றியிருந்த வாள், கடந்த ஒரு மணிநேரத்தில் எண்ணற்ற வீரர்களைக் கொன்று குவித்திருந்தது.

அவரிடமிருந்து ஒருசில அடிகள் தள்ளி அவருடைய வீரர்கள் மரியாதையோடு நின்றனர். மழையின் சீற்றம் குறைந்து, இப்போது அது வெறுமனே லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. கூரையிலிருந்து சொட்டிய மழைநீர், ஓடைகளின் வழியாக ஓடிச் சென்று, மலைப்பகுதியை நோக்கி வேகமெடுத்து, தொலைவிலிருந்த புழுதியான சமவெளியின் ஊடாகப் பாய்ந்து, இறுதியில் கடலை நோக்கிச் சென்ற நீரோடு கலந்துகொண்டது. கூடவே, ஒருசில மணிநேரத்திற்கு முன்பு, காந்தாரம் எனும் மலைநகரைப் பாதுகாத்து நின்று கொண்டிருந்த, ஊர்பேர் தெரியாத எண்ணற்ற வீரர்களின் சதையையும் ரத்தத்தையும் அது உடன் சுமந்து சென்றது.

படைத்தளபதி ஆடாமல் அசையாமல் விறைப்பாக நின்றார். மேற்தளத்தில் இருந்து வந்து கொண்டிருந்த லேசான தேம்பல் ஒலிகளைக் கேட்டு அவர் தன் நெற்றியைச் சுருக்கினார். எங்கோ ஓரிடத்தில் ஒரு சேவல் கொக்கரித்தது. அதைத் தொடர்ந்து பல கோழிகள் ஒலியெழுப்பின. கோட்டைச் சுவர்களுக்கு வெளியே, கைவண்டிக்காரன் ஒருவன் தன் பொருட்களைக் கூவிக்கூவி விற்றுக் கொண்டிருந்தான். ஓர் எருமை மாட்டு வண்டியும் மணியோசை எழுப்பியவாறே கடந்து சென்று மறைந்தது. படைத்தளபதி தயக்கத்தோடு ஓரடி முன்னே எடுத்து வைத்து மாடிப்படியில் கால் வைக்க முற்பட்டார். பிறகு மீண்டும் நின்றார். கீழே கிடந்த ஏதோ ஒன்று அவருடைய பார்வையைக் கவர்ந்திருந்தது. அவர் தன் வலியைப் பொறுத்துக் கொண்டு குனிந்து அதை எடுத்தார். உடைந்து போன ஒரு சக்கரத்துடன்கூடிய ஒரு மரவண்டி அது - ஒரு சிறுவனின் விளையாட்டுப் பொருள். அதன் உடைந்த பகுதியில், காய்ந்து போன ரத்தக் கறை ஒன்று இருந்தது. அவர் பெருமூச்செறிந்தவாறு படிகளில் ஏறத் துவங்கினார். படிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதுபோல முனகின. அப்போது, சொல்லி வைத்தாற்போல், மேற்தளத்தில் தேம்பல்கள் திடுதிப்பென்று நின்றன.

அந்த நீண்ட தாழ்வாரம், ஒரு கணிசமான தூரம் நீட்டி முழக்கி, நிழலுக்குள் மாயமாய் மறைந்தது. அப்போது பனி பெய்யத் துவங்கியது. தாழ்வாரத்தின் ஓரம் நெடுகிலும் போடப்பட்டிருந்த மர பெஞ்சுகளின்மீது வெண்பனிச் செதில்கள் விழுந்து, வினோதமான வடிவங்களை உருவாக்கின. மாண்டு கிடந்த வீரர்களின் உடல்கள்மீது மிதித்துவிடாமல், அத்தளபதி, எச்சரிக்கையாகவும் மெதுவாகவும் நடந்தார். தன் இடது கையில் அந்த உடைந்த மர வண்டியையும், தன் வலது கையில் தன் வளைவான வாளையும் அவர் பிடித்திருந்தார். பனியையும் மலைகளின் கடுங்குளிரையும் அவர் வெறுத்தார். வெயில் காய்ந்த தன் சொந்த ஊரை நினைத்து அவர் ஏங்கினார். இந்த ஒரே ஒரு வேலையை முடித்துவிட்டு, மீண்டும் கங்கை நதிக்கரைக்குத் திரும்பிச் செல்ல அவர் விரும்பினார்.

ஏதேனும் சத்தம் வந்ததா என்று பார்ப்பதற்காக அவர் சிறிது நேரம் நின்றார். ஆடைகள் சரசரக்கும் ஓசை அவருக்குக் கேட்டது. அறைக்குள் தனக்காக யாரோ காத்துக் கொண்டிருந்ததை அவர் உணர்ந்தார். காயப்பட்ட அவருடைய உடல் பதற்றமடைந்தது. அவருடைய கையில் இருந்த மரவண்டி, அவருக்கு ஒரு சுமையாக ஆனது. "நான் ஏன் இதை எடுத்தேன்?" என்று அவர் வியந்தார். ஆனால் அதைத் தூக்கி எறிய அவருக்கு இப்போது மனமிருக்கவில்லை. தன் வாளின் முனையைக் கொண்டு, பாதி திறந்திருந்த அறைக்கதவை மெதுவாகத் தள்ளிவிட்டு, அவர் அந்த அறைக்குள் நுழைந்தார். அவருடைய உயரமான, அகலமான உருவம், மங்கலாக இருந்த அந்த அறைக்குள் நிழலுருவங்களை ஏற்படுத்தியது. அந்த இருட்டிற்கு அவருடைய கண்கள் பழக்கப்பட்டவுடன், அவர் அவளைப் பார்த்தார். அந்த அறையைச் சூழ்ந்திருந்த நிழல்கள் அவளைப் பாதி மறைத்திருந்தன. தன் கண்கள் தரையைப் பார்க்க, தன் கைகள் தன் கால் மூட்டுக்களைச் சுற்றியிருக்க, அவள் அமைதியாக அமர்ந்திருந்தாள். தன் தலைவிதி என்னவென்று தெரிந்து கொள்வதற்காகக் காத்திருந்ததில் அவள் மிகவும் களைத்துப் போயிருந்தாள். அத்தளபதி சோர்வாகப் பெருமூச்செறிந்தார். அவருடைய இறுக்கமான தசைகள் சற்றுத் தளர்ந்தன. "நல்லவேளை, இன்று இதற்குமேல் ரத்தப் பெருக்கு இல்லை" என்று அவர் நினைத்தார்.

மூலையில் எரிந்து கொண்டிருந்த ஒரு சிறிய எண்ணெய் விளக்கு, ஒரு சிறிய வட்ட வடிவத்தில் மங்கலான வெளிச்சத்தை ஏற்படுத்தியது. அவ்விளக்கின் பலவீனமான வெளிச்சம், அதன் வீச்சிற்கு அப்பாலிருந்த இருளை மேலும் மிகைப்படுத்த மட்டுமே உதவியது. அத்தளபதி அவ்விளக்கின் திரியை உயர்த்தினார். ஒரு பொன்னிற வெளிச்சம், நேர்த்தியான அழகுடன் திகழ்ந்த அப்பெண்ணின் மீது விழுந்தது. அத்தளபதி திடீரென்று கோபம் கொண்டு, "இத்தகைய அழகான தெய்வீகப் படைப்புகளுக்கு வருத்தத்தைக் கொண்டு வருவதுதான் என் தலையெழுத்துப் போலும்!" என்று தன் மனத்திற்குள் குமுறினார். தன் தந்தையின் வேட்கையைத் திருப்திப்படுத்துவதற்காக பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பதென்று தான் திடீரென்று உறுதிமொழி மேற்கொண்ட நாளை அவர் சபித்தார். அவருடைய வாழ்வில் இடம்பெற்றிருந்த அனைத்துப் பெண்களுக்கும் இது மகிழ்ச்சியின்மையைக் கொண்டு வந்திருந்தது. சில பெண்களின் வாழ்க்கையை அது சீரழித்தும் இருந்தது. "இன்று அப்பட்டியலில் மற்றுமொரு பெண்ணை நான் சேர்க்கவிருக்கிறேன்," என்று விரக்தியில் தன் மனத்திற்குள் அங்கலாய்த்துக் கொண்டே, திடீரென்று, தன்னைப் போன்ற ஒரு பிரம்மச்சாரி, பெண்களைத் துரத்திச் சென்று வேட்டையாடி, அவர்களுக்காகத் தன் ரத்தத்தைச் சிந்த வேண்டியிருந்த வேடிக்கையான தலைவிதியை நினைத்து அவர் வருத்தத்துடன் சிரித்தார்.

தன்னுடைய இருண்ட எண்ணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, தன் முன்னே இருந்த அழகிய பெண்ணின் முன்னால் அவர் தாழ்மையாகத் தலை வணங்கிவிட்டு, "மகளே, என் பெயர் கங்காதத்த தேவவிரதன். அஸ்தினாபுரத்தின் அரசாட்சிப் பொறுப்பாளர் நான். பீஷ்மர் என்ற என்னுடைய இன்னொரு பெயரை நீ கேள்விப்பட்டிருக்கக்கூடும். அஸ்தினாபுர இளவரசனும் என் தம்பி மகனுமான திருதராஷ்டிரனுக்கு உன்னை மணமுடிப்பதற்காக உன்னை நாடி வந்துள்ளேன்" என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து நிலவிய கனத்த மௌனத்தில், கோபத்தில் தகதகத்துக் கொண்டிருந்த அப்பெண்ணின் அழகான சாம்பல்நிறக் கண்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளாமல், பீஷ்மர் வேறு பக்கமாகத் தன் பார்வையைத் திருப்பிக் கொண்டார். பீஷ்மரின் வார்த்தைகளைக் கேட்ட அவள், மனத்தைக் கசக்கிப் பிழியும்படி ஓர் ஓலமிட்டாள். பிறகு தன்னைச் சுதாரித்துக் கொண்டு, தரையிலிருந்து எழுந்து நின்று, தலையை உயர்த்தி, மிடுக்கான கண்ணியத்துடன், "அரசாட்சிப் பொறுப்பாளரான பீஷ்மரே, காந்தாரம் உங்களை உபசரிக்கத் தவறிவிடவில்லை என்று நான் நினைக்கிறேன். உங்களை வரவேற்பதற்கு என் தந்தையார் இங்கு இல்லை என்பது குறித்து உங்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். காந்தார இளவரசி காந்தாரியான நான், அவர் சார்பாக உங்களை வரவேற்கிறேன்," என்று கூறினாள்.

அவளுடைய குரலில் இருந்த கடுமை பீஷ்மரை ஒட்டுமொத்தமாக முடக்கிப் போட்டது. அவளிடம் ஒளிவுமறைவின்றி எல்லாவற்றையும் கூறிவிட வேண்டும், தன் பேரரசிற்காகத் தான் செய்திருந்த செயல்களை நியாயப்படுத்த வேண்டும் என்ற ஒரு வினோதமான தூண்டுதல் அவருக்குள் முளைத்தது. இவ்வளவு சீரழிவுகள் நடந்த பிறகும்கூட, இத்தகைய கண்ணியத்துடனும் அமைதியுடனும் நடந்து கொண்டிருந்த அந்த இளம்பெண்ணிற்கு முன்னால் பீஷ்மர் மிகவும் சிறுமையாகவும் நியாயமற்றவராகவும் உணர்ந்தார். தான் ஒரு கொடுமைக்காரன் என்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டது. தன்னுடைய கோபம் மட்டும் தன்னிடம் திரும்பி வந்தால் நன்றாக இருக்கும் என்று அவர் ஏங்கினார். அப்படி வந்தால், அவளை வலுக்கட்டாயமாகத் தாக்கித் தன் குதிரையின்மீது அமர்த்தி, அஸ்தினாபுரத்திற்குக் கூட்டிச் சென்றுவிடலாம் என்று அவர் நினைத்தார். ஆனால் அவரால் அது முடியவில்லை. ஏனெனில், அவர் மரபுவிதிகளைப் பேணும் ஒரு வீரர். வீரப்பெருந்தகையாளர்.

"இங்கு எனக்கு வேறு என்ன வழி இருக்கிறது? அஸ்தினாபுரத்தின் அரசாட்சிப் பொறுப்பாளர் தன் தம்பி மகனுக்கு மணமுடிப்பதற்கு எந்தக் கன்னிப் பெண்ணைத் திருடிச் செல்ல வேண்டும் என்று தீர்மானித்த பிறகு, மாபெரும் பரதகண்டத்தின் எல்லைகளில் வாழ்கின்ற எங்களைப் போன்றவர்களுக்கு என்ன விருப்பத்தேர்வு இருக்கிறது? உங்களை வீணாக வருத்திக் கொள்ளாதீர்கள். எங்கள் எதிர்ப்பு முடியும் தருவாயில் உள்ளது. உங்கள் விருப்பம்போலக் காந்தாரம் உங்களுக்குச் சொந்தமாகிவிட்டது. நான் உங்கள் கைதி. குருடனான உங்கள் தம்பி மகனின் மனைவியாக ஆவதற்கு நான் உங்களுடன் வருகிறேன்."

பீஷ்மர் வாயடைத்து நின்றார். தொலைவில் தெரிந்த மலைகளின் பனி படர்ந்த சரிவுகளை அவர் வெறித்துப் பார்த்தார். அவளுக்கு முதுகு காட்டி நின்ற தன்னை, இக்கணமே ஒரு குத்துவாளை எடுத்து விரைவாகத் தன்னுடைய முதுகில் குத்தி அவளால் தன்னைக் கொல்ல முடியும் என்பதை அவர் அறிந்தார். ஆனாலும் அவளை எதிர்கொண்டு, அவளுடைய சாம்பல்நிறக் கண்களைப் பார்க்க அவர் விரும்பவில்லை. வறண்டு போயிருந்த தன் வாழ்க்கையை ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதற்கு இந்த அழகான பெண்ணின் கையால் தான் குத்துப்படுவது ஒரு சிறந்த வழியாக இருந்திருக்கும் என்று அவர் நினைத்தார். ஏனெனில், உலகில் இத்தகைய அழகான பெண்கள் இருந்தனர் என்று தெரிந்தும்கூட, தகுதியற்ற அல்லது ஆண்மையற்ற தன் தம்பி மகன்களுக்கோ, அல்லது அஸ்தினாபுரத்தின் அரியணையில் கொலுவேறிய ஏதோ ஒரு மூடனுக்கோ அவர்களைத் திருடிச் செல்ல மட்டுமே அவரால் முடிந்தது. தொடர்ச்சியான போராட்டங்கள், நயவஞ்சகம், அரசியல், சூழ்ச்சி ஆகியவையே அவருடைய வாழ்க்கையாக இருந்து வந்திருந்தன. இது அவருக்குக் களைப்பையும் சலிப்பையும் ஊட்டியது. தன் தந்தை, தன் நாடு, தன் சகோதரர்கள், அவர்களுடைய மகன்கள் என்று எப்போதும் மற்றவர்களுக்காகவே அவர் வாழ வேண்டியிருந்தது. தனக்காக ஒருபோதும் அவர் வாழவில்லை. இவை அனைத்தும் அவருக்கு விரக்தியை ஏற்படுத்தின. ஆனாலும், அஸ்தினாபுரத்தின் அரசாட்சிப் பொறுப்பாளரிடம் சவால்விடுவதற்கு ஒட்டுமொத்த பரதகண்டத்தில் ஓர் அரசன்கூட இருக்கவில்லை .

காந்தாரி ஒரு குத்துவாளால் தன் முதுகில் குத்தக்கூடும் என்ற பாதி எதிர்பார்ப்புடன் பீஷ்மர் அங்கிருந்து நடக்கத் துவங்கினார். ஆனால் அவள் வெறுமனே பணிவோடு தன்னைப் பின்தொடர்ந்து வந்ததைக் கண்டதும் அவர் ஏமாற்றமடைந்தார். அவர்கள் தாழ்வாரத்தை அடைந்தபோது, திடீரென்று வீசிய கடுமையான குளிர்காற்று பீஷ்மரின் முகத்தைத் தாக்கியதில், அவர் உடல் வெடவெடத்துப் பின்னால் திரும்பினார். அப்போது, தன் கையில் இருந்த உடைந்த மரவண்டியை அவள் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்ததை அவர் கண்டதும், அவர் மிகவும் தர்மசங்கடமாக உணர்ந்தார். அதைத் தூக்கி எறியவோ அல்லது அவளுடைய பார்வையிலிருந்து மறைக்கவோ அவர் விரும்பினார். அப்போது ஒரு தேம்பல் ஒலி கேட்டது. அது தனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த அந்த அழகான பெண்ணிடமிருந்து வரவில்லை. மாறாக, சற்று முன்பு தனக்காக அவள் எந்த அறையில் காத்துக் கொண்டிருந்தாளோ, அந்த அறையின் இருண்ட ஆழங்களில் எங்கிருந்தோ வந்தது. அச்சத்தம் பீஷ்மரின் காதுகளில் விழுந்துவிட்டிருந்ததைக் கண்ட காந்தாரியின் முகத்தில் பயமும் வெறுப்பும் பிரதிபலித்தன. பீஷ்மர் வேகமாக அந்த அறையை நோக்கி நடந்தார். காந்தாரி அவருடைய கையை இறுக்கமாகப் பிடித்து, அவருடைய முதுகைத் தன் நகங்களால் கீறி, அவரைத் தடுத்து நிறுத்த முயற்சித்தாள். பல ஆண்டுகளாகத் தன்னுள் அடக்கி வைத்திருந்த கோபமும் வெறுப்பும் ஒருசேர வெளிப்பட, திடீர் ஆவேசத்தில் அவர் அவளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அந்த அறைக்குள் நுழைந்தார். காந்தாரி நிலை தடுமாறிக் கீழே விழுந்தாலும், கண்ணிமைக்கும் நேரத்தில் சமாளித்து எழுந்து அவர் பின்னால் ஓடிச் சென்று, அவருடைய வேகத்தைக் குறைக்கும் முயற்சியில் தன் கூரிய நகங்களால் அவரை மீண்டும் கீறினாள். அவரைக் கடித்தாள். ஆனால் அவற்றால் எந்தப் பலனும் இருக்கவில்லை.

தேம்பல் சத்தம் படுக்கைக்கு அடியிலிருந்து வந்தது. பீஷ்மர் கீழே குனிந்தார். ஆனால் எதிர்பாராத விதத்தில் ஏதேனும் ஒரு கூரிய ஆயுதம் தன் முகத்தைக் கிழித்துப் பதம் பார்த்துவிடாமல் இருப்பதற்காக, அவர் தன் வாளைத் தனக்கு முன்னால் நீட்டிப் பிடித்திருந்தார். அவருடைய கையில் இருந்த பொம்மை வண்டிக்காக ஒரு சிறிய கை நீண்டது. பிறகு அது மின்னல் வேகத்தில் மறைந்துவிட்டது. ஆனால் பீஷ்மர் அச்சிறிய கையை இறுக்கமாகப் பிடித்து வெளியே இழுத்தார். அவன் ஒரு சிறுவன். அவனுக்கு ஐந்து வயதுகூட இருக்காது. அவனை வெளிச்சத்தில் பார்ப்பதற்காக, பீஷ்மர் அவனைத் தாழ்வாரத்திற்குத் தூக்கிச் சென்றார். அவன் உடல் முழுவதும் ரத்தத்தில் தோய்ந்திருந்தது. ஆனால் அவனுடைய இடது காலில் ஏற்பட்டிருந்த ஒரு காயத்தைத் தவிர அவன் உடலில் வேறு எந்தக் காயமும் இருக்கவில்லை . அவனுடைய பெரிய விலங்குக் கண்கள் பீஷ்மரைப் பார்த்தன. தன் இளம் வாழ்வில் அவன் சேகரித்திருந்த பகைமை அனைத்தும் அவன் பார்வையில் தெறித்தது. போர்க்களத்தில் அவரால் ஓராயிரம் அம்புகளை எதிர்கொள்ள முடியும், ஆனால் இச்சிறுவனின் கண்கள் அவருடைய கவசத்தையும் ஊடுருவி, அவருடைய இதயத்தின் ஆழத்தைத் துளைத்தன. பாரபட்சமின்றி இச்சிறுவனைக் கொன்றுவிடுமாறு அவருடைய ஆலோசனையாளர்கள் அவருக்கு அறிவுறுத்தியிருப்பார்கள். ஒருவன் ஒரு நாட்டைக் கைப்பற்றும்போது, எல்லா ஆண்களையும் கொன்றுவிட்டு, எல்லாப் பெண்களையும் சிறையெடுத்துச் செல்வதுதான் புத்திசாலித்தனமான செயலாக இருக்கும். தன் வாளை அச்சிறிய இதயத்திற்குள் செருகிவிடுமாறு தன் தந்தையின் குரல் தன்னைத் தூண்டியதுபோல பீஷ்மரின் காதுகளில் கேட்டது.

அவர் மிக மெதுவாக அவனைக் கீழே இறக்கினார். ஆனால் அவனுடைய கால் பலமாகக் காயப்பட்டிருந்ததால், நிற்க முடியாமல் நிலை குலைந்து அவன் கீழே விழுந்தான். "யார் இவன்?" என்று பீஷ்மர் காந்தாரியிடம் கேட்டார்.

"இவன் பெயர் சகுனி. காந்தார நாட்டின் இளவரசன். நீங்கள் அவனைக் கொன்றுவிடுவீர்கள் என்று எனக்குத் தெரியும். சத்திரியர்களின் நியாயம் அதுதானே? போர் வீரர்களின் நெறிமுறைகளைப் பற்றி எனக்கு எல்லாம் தெரியும். ஆனால் என் கண் முன்னால் அதைச் செய்ய வேண்டாம் என்று நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். அவன் என் தம்பி.... தயவு செய்து அவன்மீது இரக்கம் காட்டுங்கள்..." என்று காந்தாரி கெஞ்சினாள்.

பீஷ்மர் தர்மசங்கடத்துடன் எழுந்து நின்றார். கடுந்துயரத்தில் இருந்த அந்த ஆணவக்கார இளவரசியையோ அல்லது தன் பாதங்களில் மூச்சிரைப்புடன் விழுந்து கிடந்த அச்சிறுவனையோ அவரால் நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை. அவருடைய வாள் அவருடைய கைகளில் நடுங்கியது. அவர் மெதுவாக மண்டியிட்டு அமர்ந்து, தன் கையிலிருந்த மர வண்டி பொம்மையை அவனுக்கு அருகே வைத்தார். அவன் அதை வெடுக்கென்று எடுத்துத் தன் மார்போடு இறுக்கமாக அணைத்துக் கொண்டான். பீஷ்மரின் கண்கள் குளமாயின. தன் பலவீனத்தைக் கண்டு அவருக்கே தன்மீது எரிச்சல் ஏற்பட்டது. அவர் உடனே அச்சிறுவனை விலக்கித் தள்ளினார். சகுனி வலியில் அலறினான். "நான் அவனைக் கொல்லப் போவதில்லை. அவனை நீ எவ்வளவு தூரம் நேசிக்கிறாய் என்பதை என்னால் பார்க்க முடிகிறது. இவனையும் உன்னுடன் அஸ்தினாபுரத்திற்குக் கூட்டி வா. இவன் அங்கு ஒரு ‘குரு வம்ச' இளவரசனாக வளரட்டும்" என்று பீஷ்மர் கூறினார். தான் இவ்வளவு தூரம் இறங்கி வந்தது குறித்து அவர் ஒவ்வொரு கணமும் தன்னை வெறுத்தார்.

தன் சகோதரன் உயிர் பிழைத்தது குறித்து நிம்மதியடைந்த காந்தாரி பலமாகப் பெருமூச்செறிந்தாள். பீஷ்மர் அவர்கள் இருவரையும் பார்த்தார். காற்று வலுவடையத் துவங்கியிருந்தது. சகுனி குளிரில் நடுநடுங்கினான்.

காந்தாரி அவனைத் தன் கைகளில் தூக்கிக் கொண்டாள். ஆனால் அவனுடைய எடை தாங்காமல் அவள் தடுமாறினாள். பீஷ்மர் அவனை அவளிடமிருந்து வாங்கிக் கொண்டார். அஸ்தினாபுரத்தின் அரசாட்சிப் பொறுப்பாளர் அவனைத் தூக்கியபோது, அவன் தன் பகைமையுணர்வு முழுவதையும் ஒன்றுதிரட்டி அவருடைய முகத்தில் உமிழ்ந்தான். தன் முகத்தில் தெறித்த ரத்தம் தோய்ந்த எச்சிலைத் தன் புறங்கையால் துடைத்துவிட்டு, பீஷ்மர் தொடர்ந்து நடந்தார். அவருடைய முகம் ஒரு கருங்கல்லைப்போல இறுகிப் போயிருந்தது.

அவர்கள் அனைவரும் மீண்டும் கங்கைச் சமவெளிக்குக் குதிரைகளின்மீது பயணித்தனர். யானைகளின் நகரம் என்று அழைக்கப்பட்ட, இந்தியாவின் புகழ்பெற்ற தலைநகரமான அஸ்தினாபுரத்தில் அமைந்த அரண்மனைக்கு அவர்கள் சென்றனர். மாபெரும் வீரரான பீஷ்மரின் குதிரையின்மீது சகுனி சோர்ந்து போய்க் கிடந்தான். காந்தாரத்தின் அழகிய இளவரசி, அவர்களுக்குப் பின்னால் ஒரு குதிரையின்மீது ஒய்யாரமாக வந்தாள். அந்தப் பயணம் நெடுகிலும், தன் தம்பியின் மற்றொரு மகனான பாண்டுவிற்கு ஒரு மணப்பெண்ணைத் தேடுவது பற்றிய எண்ணங்களில் பீஷ்மர் மூழ்கிப் போயிருந்தார். பெரும் பட்டறிவு வாய்ந்த வீரரான அவர், அந்த எண்ணங்களில் மட்டும் தொலைந்து போகாமல் இருந்திருந்தால், தான் தன்னோடு கூட்டிச் சென்று கொண்டிருந்த அச்சிறுவனின் கண்களில் தகதகவென்று எரிந்து கொண்டிருந்த பகைமையுணர்வைக் காண அவர் ஒருபோதும் தவறியிருக்க மாட்டார். குரு வம்சத்தின் அரசாட்சிப் பொறுப்பாளரான அவர், தன்னுடைய நீண்ட, ஒளிமயமான வாழ்க்கையில் செய்த ஒரு மாபெரும் தவறு அது.

நன்றி: மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், போபால்

ஆங்கில மூலம்: ஆனந்த் நீலகண்டன்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

© TamilOnline.com