இரண்டு அதிரடி உத்தரவுகள்!
கல்வித்துறை சம்பந்தமாக இரண்டு உத்தரவுகளைத் தமிழக அரசு பிறப்பித்தது: ஒன்று அரசு அங்கீகாரம் பெறாத நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளை மூடுவதற்கான உத்தரவு. இரண்டாவது தொழில் கல்லூரிகளில் சேரப் பல ஆண்டுகளாக நடத்தி வந்த நுழைவுத் தேர்வையும், இம்ப்ரூவ்மெண்ட தேர்வையும் நிறுத்தியது.

கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தை அடுத்துத் தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெறாத நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டதை அடுத்து இப்பள்ளிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாயின. கோடைக்கால விடுமுறைக்கு பிறகும் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டது. சில பள்ளிகளில் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சில பள்ளிகள் அரசின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.

பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைள் விடப்பட்டதையடுத்து அங்கீகாரம் பெறாத பள்ளி நிர்வாகிகள் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் விதிமுறைகளுக்கேற்பச் சரி செய்துகொள்ளக் கால அவகாசம் வழங்கப் படும் என்று தமிழக அரசு அறிவித்ததை யடுத்துத் தற்காலிகமாகத் தீர்வு ஏற்பட்டது.

தொழில் கல்லூரிகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வை நிறுத்தியது பலராலும் வரவேற்கப்பட்டாலும், இந்த ஆண்டே இத்தகைய தேர்வுகளை எழுதி மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர ஆவலுடன் காத்திருக்கும் மாணவர்களுக்கு அதிர்ச்சியளித்தது. 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு புதிய திட்டப்படி மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் பணி ஜூன் 23ம் தேதிக்கு முன்பு நிறைவேற்றப்படமாட்டாது என்று அறிவித்தார்.

1984-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வந்திருக்கும் நுழைவுத்தேர்வை தமிழக அரசு நிறுத்தியதற்குப் பல காரணங்களை அறிவித்தாலும் சில அரசியல் காரணங்களுக்காகத்தான் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று பரவலாகப் பேசப்படுகிறது.

முன்னதாக, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த சில ஆண்டுகளாகவே நுழைவுத்தேர்வை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விட்டிருந்தார். நுழைவுத்தேர்வு நாட்டுப்புற மாணவர்களுக்கு எதிரானது என்றும் இதை எதிர்த்துப் போராடப் போவதாகவும் அறிவித்திருந்தார். இந்நிலையில் திடீரென்று நுழைவுத்தேர்வை நிறுத்திய உத்தரவு வெளிவந்தது. இதைத் தமிழக எதிர்க்கட்சிகளும் வரவேற்றன.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் தேவையில்லாத பொருட்செலவையும் மனஇறுக்கத்தையும் அதிகரிக்கச் செய்த நுழைவுத் தேர்வை நிறுத்தியதில் தவறு இல்லை என்று பெரும்பாலான பெற்றோர்கள் கூறினாலும், 50 சதவீத இடங்களை நன்கொடை வசூலித்து நிரப்பும் தனியார் கல்லூரிகள், பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும், பணம் கொடுத்துத் தொழில்கல்வியில் சேரலாம் என்ற நிலையை உருவாக்கும் ஆபத்து ஏற்படும் என்று அஞ்சுகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே மாணவர்களின் தலைவிதி நீதிமன்றங்களில்தான் முடிவு செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் இது போன்ற நீதிமன்ற வழக்குகள் தோன்றி மாணவர்களையும், பெற்றோர்களையும் பெரும் கவலையில் ஆழ்த்துகிறது என்றால் அது மிகையல்ல!

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com