இளவேனில் வாலறிவன்
பிரேசிலில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார் இளவேனில் வாலறிவன்.

ரியோ-டி-ஜெனீரோ நகரில் நடந்த இப்போட்டிகளில் 72 நாடுகளைச் சேர்ந்த 541 வீர, வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெறுவது, 2020ம் ஆண்டு நடக்கவுள்ள டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கான தகுதிக்கும் முக்கியம் என்பதால் இங்கே போட்டி மிகக் கடுமையாக இருந்தது.

இதில், 10 மீ. ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் 251.7 புள்ளிகள் பெற்று தங்கத்தைக் கைப்பற்றினார். உலகக் கோப்பைத் தொடரில் இந்தப் பிரிவில் தங்கப்பதக்கம் வெல்லும் மூன்றாவது இந்தியரும், முதல் தமிழரும் ஆவார் இளவேனில். இதற்கு முன் நடந்த போட்டிகளில் அபூர்வி சண்டேலா, அஞ்சலி பகவத் ஆகியோர் தங்கம் வென்றுள்ளனர். இளவேனில் கடந்த ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியிலும் ஜூனியர் பிரிவில் தங்கம் வென்றிருக்கிறார்.

சீனியர் பிரிவில் தனது முதலாவது பதக்கத்தை வென்றிருக்கும் இளவேனிலுக்கு வயது 20. பிறந்தது கடலூர். தந்தை முனைவர் வாலறிவன் அஹகமதாபாதில் பணியாற்றுகிறார். தாய் முனைவர் சரோஜா அங்குள்ள கல்லூரி ஒன்றின் முதல்வர். சகோதரர் இறைவன் ராணுவத்தில் பணிபுரிகிறார்.

இறைவன் சிறுவயதிலிருந்தே துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றார். அதைப் பார்த்த இளவேனிலுக்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டது. முறையாகப் பயிற்சி பெற்றார். கூடவே படிப்பிலும் சுட்டி. மருத்துவம் மற்றும் இஞ்சினீயரிங் படிப்புக்கான இடம் கிடைத்ததும், துப்பாக்கிப் பயிற்சிக்கு நேரம் வேண்டுமென்பதால், அவற்றைத் தவிர்த்து இளங்கலைப் படிப்பில் சேர்ந்தார். அவரது கடும் உழைப்பு அவருக்கு இந்த வெற்றியைத் தந்திருக்கிறது.



© TamilOnline.com