இல்லாத கதவு
ஒரு வழியாக ரயில் கிளம்பி நகர ஆரம்பித்தது. ஹேமமாலினி பிளாட்ஃபார்ம் சத்தம் குறையவே, அப்பாடா என்று சீட்டில் சாய்ந்து கொண்டாள். கோயம்புத்தூரில் ஒரு சர்வதேச வங்கியில் கிளை மேனேஜரான ஹேமமாலினி, அலுவலக வேலையாகச் சென்னை செல்கிறாள். அங்கே அண்ணன் ராகவனையும்,அண்ணி சரசுவதியையும் பார்த்துவிட்டு அதற்கடுத்த நாள் காலை சென்னை வந்து சேர டிக்கெட் முன்பதிவு செய்திருந்தாள். உழைத்த களைப்பு கண்களை அழுத்த மேல்பெர்த்தில் ஏறிப் படுத்தாள்.

வந்த வேலை நினைத்ததை விடச் சீக்கிரமாகவே முடிந்தது. அண்ணன் வீட்டிற்கு ஆட்டோவில் கிளம்பினாள். சில்லென்ற காற்று. வெளியே தெரிந்த காட்சிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே பயணித்தாள். சட்டென்று அண்ணா, அண்ணியின் நினைவு வந்தது.இருவரும் எப்பொழுதும் உப்புப்பெறாத விஷயத்திற்குக் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு, எதிரில் இருப்பவரை தர்மசங்கடத்தில் தவிக்க வைப்பார்கள். இந்த நினைவு வந்ததும் ஹேமமாலினி சற்றுச் சோர்ந்தாள். அதிலிருந்து தப்பிக்க தலைவலி என்று சொல்லிப் படுத்துவிடத் தீர்மானித்தாள்.

அண்ணன் வீடு வந்தது. ஆட்டோ சத்தம் கேட்டு வெளியே வந்த ராகவன், "வா வா, ஹேமா" என்றபடி அவள் பையைத் தூக்கிக்கொண்டு,"சரசு, ஹேமா வந்துட்டா பாரு" என்று முகம் மலரக் குரல் கொடுத்தார். உள்ளே இருந்து வந்த சரசு,"வா ஹேமா, ஆஃபீஸ் வேலையெல்லாம் ஆச்சா" என்றாள்.

உடனே, ராகவன், "முடிக்காம வருவாளா?அவ யாரு, என் தங்கையாச்சே!" என்றார்.

ஹேமாவிற்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. இப்போது கண்டிப்பாக ரகளை ஆரம்பம் என்று நினைத்து, "ஆச்சு. எனக்குத்தான் தலைவலி மண்டையைப் பிளக்கறது. இத்தனை நாள் கழிச்சு பாக்கறோம். நெறைய பேசணும்னு ஆசையா இருக்கு" என்றவளைத் தடுத்த சரசு, "நல்ல ஸ்ட்ராங்கா காஃபி போட்டு வச்சிருக்கேன். சாப்டுட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ. சரியாயிடும்" என்றபடியே உள்ளே போனாள்.

தன்னுடைய பிளான்படித் தலைவலி என்று சொல்லித் தப்பித்தோம் என்று உள்ளூர மகிழ்ந்த ஹேமா, தனக்கு ஒதுக்கப்பட்ட அறை அழகாகவும் சுத்தமாகவும் இருப்பதைப் பார்த்துப் படுத்தவள் சட்டென்று உறங்கி விட்டாள்.

வெளிச்சம் கண்களைக் குத்தியதால் எழுந்த ஹேமா, மணியைப் பார்த்தாள். மணி எட்டு. "அடாடா, இத்தனை நேரமா தூங்கினேன்?" என்று நினைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

அவளுக்காகவே காத்திருந்தாற்போல் சற்று பரபரப்புடன் நின்றுகொண்டு இருந்த ராகவன், "குட் மார்னிங் ஹேமா, ராத்திரி நல்லாத் தூங்கினியா? இவ வேற, உன்ன எழுப்பி சாப்பிடக் கொடுக்கணும்னு சொன்னா. நாந்தான் வேண்டாம்.தூங்கட்டும்னிட்டேன்" என்றார். இதைக் கேட்டுக்கொண்டே அண்ணி வருவதைப் பார்த்த ஹேமா,வசமாக மாட்டிக் கொண்டோம், இப்போ அண்ணி,தன் பங்கு நியாயத்தைச் சொல்லி, 'நீயே சொல்லு நான் சொன்னதுதானே சரி' என்று ஆரம்பிக்கப் போகிறாள். எப்படித் தப்பிக்கப் போகிறோம் என்று பயந்தாள்.

ஒன்றுமே நடக்காததுபோல் அண்ணி, "காஃபி கொண்டு வரட்டுமா" என்று கேட்டுக்கொண்டே உள்ளே சென்றாள். அண்ணியின் இந்த வித்தியாசமான நடத்தை ஹேமாவை ஆச்சரியப்படுத்தியது. காரணத்தை அறியும் ஆசையில் அண்ணியைப் பின்தொடர்ந்து சென்றாள்.

"எப்படி அண்ணி, இப்படி கோபப்படாமல் இருக்க முடிஞ்சது?" என்று சரசுவின் கைகளை எடுத்துத் தன் கைகளுக்குள் அழுத்தியபடி கேட்டாள்.

அண்ணி, "ஹேமா, நீ நினைக்கறபடித்தான் இத்தனை நாள், அவர் நான் எதிர்பார்த்தபடி நடந்தால்தான் என்னால் சந்தோஷமாக இருக்க முடியும்னு நம்பினேன். போன மாசம், என் ஃப்ரெண்டு விஜயா வந்து சொன்னப்பறம் தான் 'என் சந்தோஷம் என் மனதில்தான் இருக்கிறது' என்பது புரிந்தது. நான் அவர் மனோபாவம் அப்படி, என்னைத் தப்பு சொல்வதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. கதவு இல்லாத சுவரில் போய் எவ்வளவு முட்டிக் கொண்டாலும் சுவர் கதவாகாது. பதிலாக நான் என் எதிர்பார்ப்பை குறைத்துக் கொள்வதால் சந்தோஷமாக இருக்க முடியும்னு புரிஞ்சது. இப்போ நாங்க சந்தோஷமாக இருக்கோம். அண்ணா அப்படியேதான் இருக்கார். இருப்பார்" என்றாள் சிரித்துக்கொண்டே.

"வாழ்க உங்கள் ஃப்ரெண்ட்" என்று சொல்லி அண்ணியை அணைத்துக் கொண்டாள். சிற்றுண்டி உண்ணும்போது சிறு வயதில் செய்த சேட்டைகள், போட்டுக்கொண்ட சண்டைகள், பெற்றவர்கள் காட்டிய பாசம் போன்றவற்றை அண்ணனும் தங்கையும் பேசிச் சிரித்தனர்.

தன்னை வழியனுப்ப இந்த வயதிலும் ஸ்டேஷன் வந்த அவர்களைப் பார்த்து கையசைத்த ஹேமா, உண்மை தெரியாமல் தலைவலி என்று பொய் சொல்லி அவர்களை ஏமாற்றியதை நினைத்து வெட்கப்பட்டாள்.

சுதா சந்தானம்,
மில்பிடாஸ், கலிஃபோர்னியா

© TamilOnline.com