செல்வன் ஷ்யாம் ரவிதத்
ஷ்யாம் ரவிதத் ஓர் இளம் மேதை. ஐந்து வயதிலேயே, பெங்களூருவில் அக்கா தீப்தி கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டு பாடிப் பார்க்கும்போது உன்னிப்பாகக் கேட்பார். ஷ்யாம் 2018ல் கிளீவ்லாண்ட் ஆராதனை விழாவில் மிருதங்கம், கொன்னக்கோல் இரண்டிலும் பரிசு பெற்றார். யூடியூபில் விடாமல் மிருதங்க வாசிப்பைக் கேட்ட ஷ்யாம், சிவாஜி நடித்த 'மிருதங்க சக்கரவர்த்தி' படத்தில் பத்மபூஷண் உமையாள்புரம் கே. சிவராமனின் மிருதங்கப் பின்னணி இசையை மிகவும் ரசித்தார். தமிழ் தாய்மொழி அல்ல என்றபோதும் அந்தப் படத்தை பலமுறை திரும்பத் திரும்பப் பார்த்தது கண்டு பெற்றோர் வியந்தனர். ஷ்யாம் தனது பிறந்தநாளான ஜூலை 24 அன்று உமையாள்புரம் சிவராமன் அவர்களிடம் நேரில் ஆசிபெற விரும்பினார். விடாமுயற்சியால் அதையும் சாதித்தார்.



தினமும் ஏழிலிருந்து ஒன்பது மணி நேரத் தீவிர சாதகம் செய்யும் ஷ்யாமைக் கண்டு வியந்த திரு ரவிசுப்பிரமணியன் ஆறே மாதப் பயிற்சிக்குப் பின் அக்டோபர் 27, 2018 அன்று போர்ட்லேண்ட் பாலாஜி கோவிலில் அரங்கேற்றம் நடத்தி வைத்தார். கச்சேரி நான்கு மணி நேரத்துக்கு மேல் நடந்தது. சிறப்பு விருந்தினராக கலைமாமணி திருவாரூர் பக்தவத்சலம் (மிருதங்கம்), கலைமாமணி கணேஷ் (வயலின்) ஆகியோர் முன்னிலையில் நெய்வேலி சந்தானகோபாலன், திருமதி சந்தியா ஸ்ரீநாத் (வயலின்) ஆகியோருடன் நடந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது. ஒன்பது வயது பாலகனின் பிஞ்சு விரல்கள் பெரிய இசைமேதை போல மிருதங்கத்தைக் கையாண்ட விதம் அனைவரையும் கவர்ந்தது. மார்ச் 2018ல் மூத்த சகோதரியின் கச்சேரிக்கு பக்க வாத்தியமாக மிருதங்கம் வாசித்தார் ஷ்யாம். இந்தியாவிருந்து வந்திருந்த விதூஷி அஞ்சனாவுடன் நீண்டதொரு கச்சேரி செய்தார். ஏப்ரல் 2019ல் கிளீவ்லேண்ட் ஆராதனை விழாவில் பிரபல இசை வல்லுனர்களின் தேர்வில் இரண்டு பிரிவுகளிலும் முதல் பரிசு பெற்றார். 200 மணி நேரத்திற்கு அதிகமான பயிற்சியை மேற்கொள்ளும் சவாலில் பங்கேற்று ஆசிரியரிடம் பாராட்டுப் பெற்றார்.



இந்தியா செல்லும்போது அடையாறு ரத்னகிரீஸ்வரர் ஆலயத்தில் ஷ்யாம் இசைக் கச்சேரிகளை உன்னிப்பாகக் கேட்பதுண்டு. டிசம்பர் மியூசிக் அகாதமி கச்சேரிகளையும் சபாக்களில் சென்று ரசிப்பார். எங்கு இசை நிகழ்ச்சி நடந்தாலும், முன்வரிசையில் அமர்ந்து தானும் தாளம் போட்டு ரசிப்பார். பின்லி துவக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் ஷ்யாமின் விருப்பப்பாடம் கணிதம். கை எப்போதும் ரூபிக் க்யூபை உருட்டிப் பல டிசைன்களை உருவாக்கும். நீச்சல் இவரது பொழுதுபோக்கு. தோட்டக்கலையில் ஆர்வம் உண்டு. பெரியவனானதும் பெரிய தோட்டத்தை அமைத்து அதில் ஆயிரம் ஓசனிச்சிட்டுகளை (humming bird) வளர்த்து, அவற்றின் நாதத்தில் லயிக்க ஆசை. சமீபத்தில் பள்ளி விழா ஒன்றில் சக மாணவர்களுக்கு மிருதங்கம் வாசித்துக் காட்டினார். சியாமா சாஸ்திரிகள் தினத்தன்று பக்கவாத்திய அணியில் ஆறு பேரோடு சேர்ந்து வாசித்த திறனை அனைவரும் பாராட்டினர். ஆர்வம், கவனம், உழைப்பு, குருபக்தி மிகக் கொண்ட ஷ்யாம் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துவோம்.

டாக்டர் கிருஷ்ணவேணி அருணாசலம்,
போர்ட்லண்ட், ஆரிகன்

© TamilOnline.com