பியானோ இசை: விஷால் சாய் கிருஷ்ணன்
ஜூன் 2, 2019 அன்று ஃபோல்சம், சாக்ரமென்டோவில் உள்ள ஹாரிஸ் சென்டரில் செல்வன் விஷால் சாய் கிருஷ்ணனின் பியானோ தனி வாசிப்பு நடைபெற்றது. 16 வயது விஷால் சுமார் 2 மணி நேரம் பியானோ வாசித்து, மனம் கவர்ந்தார்.

நிகழ்ச்சியின் ஆரம்பத்தில், 16ம் நூற்றாண்டின் பரோக் காலகட்டத்தில் ஜே.எஸ். பாக் போன்ற மேதைகள் வடித்த பாடல்களை இசைத்தார். பின்னர் இசைமேதை பீத்தோவனின் கிளாசிகல் சொனாட்டா ( 18ம் நூற்றாண்டு) விஷாலின் விரல்களில் கொஞ்சியது. அடுத்து, ஃபிரடெரிக் ஷோபின் வரைந்த பியானோ நோட்ஸை விஷால் வாசித்தார். Ernst Toch வடித்த இசையொன்றை அருமையாக வாசித்தார். நிகழ்ச்சியின் முடிவில் வாசித்த A.R. ரஹ்மானின் "ஜெய் ஹோ" அனைவரையும் கவர்ந்தது.

விஷாலின் பியானோ குரு கரோல் சுவாங், விஷால் 5 வயதுமுதல் தன்னிடம் பியானோ கற்பது, இருமுறை பன்னாட்டு பியானோ போட்டிகளில் முதல் பரிசு பெற்று நியூ யார்க் கார்னகி ஹாலில் பியானோ வாசித்துத் தன்னைப் பெருமைப்படுத்தியது ஆகிய எல்லாவற்றையும் மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார்.

நிகழ்ச்சிக்கு வருவோரைப் பரிசுப்பொருட்களுக்குப் பதிலாகப் பணமாகத் தரச் சொன்ன விஷால், அவ்வாறு சேகரமான $3386 தொகையை மதுரையிலுள்ள இந்திய பார்வையற்றோர் சங்கத்துக்கு நன்கொடையாகக் கொடுத்தார்.

நிகழ்ச்சியின் முடிவில் விஷால் நன்றி தெரிவித்தார். சகோதரி சஞ்சனா சாய் கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். பெற்றோர் திரு சாய் கிருஷ்ணன் மற்றும் திருமதி ஸ்ரீவித்யா சாய் கிருஷ்ணனை அனைவரும் பாராட்டினார்கள். நிகழ்ச்சியை ஆதரித்த SAHANA (சவுத் ஏசியன் ஹெரிடேஜ் ஆர்ட்ஸ் இன் நார்த் அமெரிக்கா) நிர்வாகக் குழுவினர் திருமதி ரம்யா ஸ்ரீனிவாஸ் மற்றும் சுதிர் குமார் விஷாலை வாழ்த்திப் பேசினார்கள்.

பத்மா மணியன்,
ஃபோல்சம், கலிஃபோர்னியா

© TamilOnline.com