இரட்டை வயலின் இசை: சூர்யா சுந்தரராஜன் & பரத் ரமேஷ்
ஜூன் 2, 2019 அன்று, மாசசூஸட்ஸ், வெஸ்ட்ஃபோர்டு, ஸ்டோனி புரூக் பள்ளியில், கர்னாடக வயலின் வல்லுனர் குரு சூர்யா சுந்தரராஜன் தமது மாணவர் பரத் ரமேஷுடன் இணைந்து வயலின் இசை விருந்தளித்தார்.

இந் நிகழ்ச்சி, மாசசூஸட்ஸ் கலாசார கவுன்சிலின் பாரம்பரிய கலைப்பயிற்சி மானியத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது. சூர்யா மற்றும் பரத், மாநிலத்தின் பாரம்பரியக் கலை பயிலுநர் மானியம் பெறுவோர் வரிசையில் பத்தாவது ஆவர். இந்நிகழ்ச்சி பரத் வழங்கும் முதல் முழுமையான இசை நிகழ்ச்சியாகும்.

சஹானா வர்ணத்தில் தொடங்கி, "ஸ்ரீ மகாகணபதிம்", "எந்தரோ மஹானுபாவுலு", "ஸ்ரீ காந்திமதிம்" ஆகிய சிலிர்க்க வைக்கும் கிருதிகள் தொடர்ந்தன. பின்னர், கலைஞர் மோகனத்தில் ராகம் தானம் பல்லவியும், ராஜாஜியின் "குறை ஒன்றும் இல்லை" உள்ளிட்ட பாடல்களையும் வழங்கினர்.

ஸ்ரீ லால்குடி ஜெயராமனின் பிரபலமான தேஷ் தில்லானாவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

மிருதங்கத்தில் ஸ்ரீ கௌரீஷ் சந்திரசேகரும், கடத்தில் டாக்டர் ரவி பாலசுப்பிரமணியனும், வயலின் கலைஞர்களுக்குச் சிறந்த பக்கவாத்தியத் துணை வழங்கினர். திருமதி ஹரிணி தர்பா மேடையில் தாள ஒருங்கிணைப்புச் செய்தார்.

வித்வான் குரு விட்டல் ராமமூர்த்தி அவர்கள் சென்னையிலிருந்து நிகழ்ச்சியின் பிரதான விருந்தினராக வந்திருந்தார். மாசசூஸட்ஸ் கலாசார கவுன்சிலைச் சேர்ந்த திருமதி மேகி ஹோல்ஸ்பெர்க் மாசசூஸட்ஸ் மாநிலத்திற்குக் கர்நாடக இசையின் பங்களிப்பைப் பெரிதும் பாராட்டினார்.

மாலினி பாலா,
மாசசூஸட்ஸ்.

© TamilOnline.com