செல்வ வேட்கை
செல்வம் சேர்ப்பதற்கான அரிப்பை எந்தச் சவுக்கடியாலும் தடுத்து நிறுத்தமுடியாது. ஒருமுறை லக்ஷ்மிதேவிக்கும் நாராயணருக்கும் இடையே ஒரு சர்ச்சை நடைபெற்றது. இருவருக்குள் யார் மனிதரின் இதயங்களில் உயர்ந்த இடத்தை வகிக்கிறார்கள் என்பதே அது. ஒரு சோதனை மூலம் அதற்கு முடிவுகாணத் தீர்மானித்தார்கள்.

லக்ஷ்மிதேவி ஓர் ஆன்மீக போதகராக உலகுக்கு வந்தாள். பக்தர்கள் அவளது பாதங்களைக் கழுவிப் பூஜை செய்தால், அதற்குப் பயன்படுத்தப்பட்ட தாம்பாளங்களும் பாத்திரங்களும் தங்கமாக மாறின! அவளுக்கு எங்கெங்கும் ஒரே வரவேற்பு. பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. எங்கு பார்த்தாலும் பித்தளை, தாமிரம் மற்றும் அலுமினியப் பாத்திரங்கள் மலைபோல வந்து குவிந்தன.

இதனிடையே, நாராயணரும் ஒரு சாஸ்திர பண்டிதராக பூமிக்கு வந்தார். அவர், ரிஷிகள் நியமித்துச் சென்ற பாதையில் மகிழ்ச்சிக்கும் சந்தோஷத்துக்குமான வழிகளை ஏராளமானவர்களுக்கு விவரித்தார். ஆனால், லக்ஷ்மிதேவி உலோகங்களைத் தங்கமாக்குவதைக் கேள்விப்பட்டதும், அவர்கள் நாராயணரின் போதனைகளில் ஆர்வமிழந்தனர். லக்ஷ்மிதேவியின் விஜயத்தையே விரும்பினர். நகரங்களிலும் கிராமங்களிலும் லக்ஷ்மிதேவி நுழைந்ததும், நாராயணரைக் கிளப்பி அனுப்பிவிட்டனர். ஏனென்றால், லக்ஷ்மிபூஜை நடத்துவதற்கு அவரது உபன்யாசங்கள் இடையூறாக இருந்தனவாம்!

நன்றி: சனாதன சாரதி, ஜூலை 2018

பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா

© TamilOnline.com