இதுவும் வானப்பிரஸ்தம் தான்
"கமலி... கமலி" எங்க இருக்கே என்று உற்சாகமாகக் கூவியபடி வீட்டிற்குள் நுழைந்தான் மோகன்.

"ஏங்க, என்ன ஒரே குஷி? கமலிக்கு என்ன வெச்சிருக்கீங்க?" என்றபடி வந்தாள் கமலி.

"கமலி ஒரு சந்தோஷ சமாசாரம். என்னை அமெரிக்காவிற்கு வரச் சொல்லுது என் கம்பெனி."

"அடி சக்கை. எவ்வளவு நாள் டூர்?"

"டூர் இல்லை. எனக்குப் பதவி உயர்வு கொடுத்து எங்க ஹெட் ஆஃபிஸ் கூப்பிடுது."

"அப்படியா ரொம்ப சந்தோஷம். நீங்க எப்பக் கிளம்பணும்?

"எப்பக் கிளம்பறதா? நல்ல வேடிக்கை. நாம உடனே நம்ம குடும்பத்துடன் கிளம்பி ஆகணும்"

"அப்போ பசங்க படிப்பு..."

"அவங்களே ஸ்கூல் அட்மிஷனும் வாங்கித் தராங்களாம்."

"அப்புறம் என்னங்க, கிளம்ப வேண்டியதுதானே!"

"அங்கதான் சிக்கல். நம் குடும்பத்துக்கு மட்டும்தான் ஏற்பாடு செய்வார்கள். பங்களா, கார் எல்லாம் தருவார்கள். சம்பளமும் நாலு மடங்கு கூடும். கொஞ்ச நாள் போனா அவங்களே கிரீன் கார்டும் ஏற்பாடு செய்வாங்களாம். ஆனா..."

"ஆனாவாவது ஆவன்னாவது. இந்த மாதிரி இன்னொரு தடவை கிடைக்குமா? உடனே புறப்பட ஏற்பாடு செய்யறதை விட்டு என்ன தயக்கம்?"

"என்ன தயக்கமா? அம்மாவை என்ன செய்வது? நம் சொந்தப் பொறுப்பில் கூட்டிட்டு போனாலும் வயசான அம்மாவுக்கு கிளைமேட் ஒத்துவருமா? டூரிஸ்ட் விசாவும் ஆறு மாசம்தான் கிடைக்கும். என்ன செய்றது? அதுதான் புரியல..."

"அம்மாவைக் கூட்டிட்டு போக முடியாது. தனியாவும் அவங்களை விடமுடியாது. அப்போ என்னதான் செய்றது?"

"இப்படி ஒரு சந்தர்ப்பம் இனிமே வாழ்வில் வராது. அதான் என்ன செய்றதுன்னே புரியல" என்றான் மோகன்.

"ஏண்டா, மோகன்... நீ பேசினதைக் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன். இதுக்கென்னடா இவ்வளவு யோசனை" என்றபடி உள்ளே வந்தாள் அம்மா.

"இல்லம்மா உனக்கு நான் ஒரே பிள்ளை. உன்னை இந்த வயசான காலத்துல இங்க எப்படித் தனியா விட்டுட்டு போக முடியும் சொல்லு?" என்றான் மோகன்.

"உனக்கு கிடைத்திருப்பது உன் வாழ்வில் உயர்ந்த அங்கீகாரம். நல்ல வாய்ப்பை நழுவ விடலாமா?"

"இல்லம்மா. இந்த வயதில் உன்னைத் தனியாத் தவிக்கவிட்டுப் போறது நியாயமா?"

"இதுல என்னடா நியாயம், அநியாயம்? நீ படிக்க ஹாஸ்டலுக்குப் போனபோது நான் தனியா இருக்கலையா? இல்லே வேலைக்கு வெளியூர் போனபோது தனியா இருக்கலையா?"

"அப்போ உனக்கும் வயசு கம்மி. நீ டீச்சர் வேலைக்குப் போய்க்கிட்டு இருந்த. நீ தனியாக் கஷ்டப்பட்டு வேலை பார்த்து என்னைப் படிக்க வச்சு பெரிய ஆளாக்கி இருக்கே."

"ஆமாண்டா... என் கடமையை நான் செஞ்சேன் அதுக்கென்ன?"

"அதுக்கென்னவா? நீ உன் கடமையைச் செய்த மாதிரி உன் வயதான காலத்தில் நான் என் கடமையைச் செய்ய வேண்டாமா? என் கல்யாணத்துக்கு பிறகு நீயும் ரிடயர் ஆகிட்ட. என்கூட வந்து இந்தப் பத்து வருஷமாத்தானே இருக்கே."

"ஆமாண்டா. நல்ல மருமகள் கிடைச்சா. சேர்ந்து சந்தோஷமாய் வாழ்ந்தோம். பேரன், பேத்தியை பக்கத்தில் இருந்து பார்த்து சந்தோஷப்பட்டேன். ஆமா கமலிக்கு அங்க வேலை கிடைக்குமா?"

"ஆமாம்மா. அவ ஹெட் ஆஃபீசும் அங்க இருக்கறதுனால அவளுக்கும் ஏற்பாடு செய்றதாச் சொன்னார்கள்."

"அப்புறம் என்னடா யோசனை! ஏதாவது நல்ல முதியோர் இல்லமாப் பார்த்து என்னைச் சேர்த்துட்டு நிம்மதியாப் போவீங்களா, அதை விட்டுட்டு..."

"ஐயோ! என்ன வார்த்தை சொல்லிட்டீங்க அத்தை. இந்த வயசுல குடும்பத்தைவிட்டு உங்களைப் பிரிச்சு முதியோர் இல்லத்தில சேர்க்கற பாவத்தைச் செய்யச் சொல்றீங்களா?"

"இதுல என்னம்மா பாவம் இருக்கு? ரொம்ப காலத்துக்குப் பிறகு என் வயசுக்கேத்த தோழிகள், பொழுதுபோக்கு, பஜனை, பத்திரிகை, டிவி நிகழ்ச்சின்னு எல்லாம் கிடைக்குமே! சுவையான, சத்தான, எளிதில் ஜீரணமாகிற உணவு, மருத்துவர் கவனிப்பு எல்லாம் கிடைக்குமாம். எல்லாம் ஒண்ணா ஒரே இடத்தில் கிடைக்கும்போது ஏன் வீணாக் கவலைப்படறே."

"இல்ல... மீண்டும் எங்களையெல்லாம் பிரிஞ்சு தனியா இருக்கணுமே" என்று இழுத்தனர் இருவரும்.

"என்ன இழுக்குற? அடக் கிறுக்குகளா! அந்தக் காலத்துல வானப்பிரஸ்தம்னு ஒண்ணு இருந்தது. தெரியுமா, உங்களுக்கு?"

"வானப்பிரஸ்தமா? அப்படின்னா..?" என்றனர் இருவரும் ஒரே குரலில்.

"அப்படிக் கேளு. நல்லபடியா இல்லற வாழ்க்கை வாழ்ந்து மக்கள், மருமக்கள் பேரன், பேத்திகள் என்று வாழ்ந்து முடித்த பிறகு, முதியவர்கள் அவர்களைப் பிரிந்து தேசாந்திரம் போய்விடுவார்கள். தம் காலம் முடியும் வரை, கிடைத்ததைச் சாப்பிட்டுவிட்டு கோவில்களிலோ, காடுகளிலோ இருப்பார்கள். இதுதான் வானப்பிரஸ்தம். ஆனா, இன்னிக்கு உங்க நன்மைக்காக நான் முதியோர் இல்லம் போவதும் ஒருவகை வானப்பிரஸ்தம் தான். என்ன எல்லா சௌகரியங்களும் நிறைந்த வானப்பிரஸ்தம்."

"இல்லம்மா. இது சரியில்ல... என் சுயநலத்துக்காக உன்னைத் தனியா விடறதா?"

"போடா போ. முட்டாப் பயலே! ஆளில்லாத காட்டிலே அலையற வானப்பிரஸ்தம் இல்லடா இது. என்ன ஒண்ணும் அநாதரவா விட்டுட்டுப் போகலை! உன்னால கவனிக்க முடியாததனால ஒரு பத்திரமான இடத்தில் என்னை ஒப்படைக்கச் சொல்றேன். விடுமுறை கிடைத்தால் நீயும் வந்து பார்க்கலாம். தினம் வாட்ஸப்ல பேசிக்கலாம். ராக்கெட்டில் போற காலத்திலே கட்ட வண்டிலதான் போவேன்னு பிடிவாதம் பிடிக்காதே. பிரம்மச்சரியம், இல்லறம், வானப்பிரஸ்தம் அல்லது சன்னியாசம் என்ற நிலைகளில் நான் மூணாவதில் இருக்கேன். எந்தத் தாயும் தன் பிள்ளை முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையா இருக்கமாட்டா. புரிஞ்சுக்கோ" என்றாள் அம்மா

புரிந்தும் புரியாமல், "எனக்கு இப்படி ஒரு மனம் வருமா?" என்று யோசித்தபடி அங்கிருந்து மோகன் நகர்ந்தான்.

பார்வதி கல்யாணராமன்,
கேரி, வடகரோலினா

© TamilOnline.com