சத்குரு ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் (பகுதி - 2)
புதுக்கோட்டை மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் சாதுக்கள்மீது மதிப்புக் கொண்டவர். பிரம்மேந்திரரை அரண்மனைக்கு வருமாறு வேண்டினார். சதாசிவர் பதிலே சொல்லவில்லை.` இப்படியே மாதங்கள் பல கடந்தன.

எதற்கும் ஒரு வேளை வரவேண்டும் அல்லவா? அந்த வேளை வந்தது.

சதாசிவ பிரம்மேந்திரர் ஓரிடத்தில் நிலையாகத் தங்குகிறவரல்ல; சதா சஞ்சாரத்தில் இருக்கும் அவதூதர் என்பதைத் தாமதமாக உணர்ந்த புதுக்கோட்டை மன்னர், தன்னுடன் வராவிட்டாலும் பரவாயில்லை, மந்திரதீட்சை அளித்தால் போதும் என்று வேண்டினார். பிரம்மேந்திரர் மனமிரங்கினார். மணலில் தக்ஷிணாமூர்த்தி மந்திரத்தை எழுதிக் காண்பித்தார். அம்மந்திரத்தையே உபதேசமாகக் கொண்டார் மன்னர். பிரம்மேந்திரரை வணங்கி, அவர் கை பட்ட மணலைத் தமது ஆடையில் சேகரித்துக் கொண்டு அரண்மனைக்குச் சென்றார். அவர் வரைந்து காட்டிய அட்சரங்களைக் கொண்டு ஒரு யந்திரம் ஸ்தாபித்து, அம்மணலை ஒரு தங்கப் பேழைக்குள் வைத்துப் பூஜித்து வரலானார். (இன்றளவும் புதுக்கோட்டை அரண்மனையில் அந்தப் பேழை பூஜிக்கப்படுகிறது.)

மன்னருக்கு சதாசிவ பிரம்மேந்திரரைச் சென்று பார்த்து, தமக்குக் குருவாக இருந்து அருள் புரியுமாறு வேண்டிக் கொண்டார். அதை மறுத்த பிரம்மேந்திரர், மன்னருக்கு ஆஸ்தான வித்வானாக இருக்கத் தகுதியுடையவர் எனக் கோபாலகிருஷ்ண சாஸ்திரிகள் என்ற பண்டிதரை அடையாளம் காட்டினார். மன்னர் பெரிதும் மனமகிழ்ந்ததுடன், தனது அந்திமக் காலத்தில் பிரம்மேந்திரர் தனக்குக் காட்சி அளிக்க வேண்டும் என்றும் விண்ணப்பித்துக் கொண்டார். அதற்கு இசைந்த பிரம்மேந்திரர், மன்னனுக்கு ஆசி கூறி அகன்றார்.

தான்தோன்றிப் பெருமாள்
அந்தக் காலத்தில் திருப்பதி செல்வதானால் கால்நடையாகவோ, மாட்டு வண்டியிலோதான் போகமுடியும். அதற்குப் பல மாதங்கள் பிடிக்கும். வயதானவர்கள், குழந்தைகள் போன்றோரை அழைத்துச் செல்ல முடியாதபடி பல நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன. கரூரில் வசித்த சாஸ்திரிகள் ஒருவரும், கனபாடிகள் சிலரும் சதாசிவ பிரம்மேந்திரரை அணுகி, திருப்பதி செல்ல இயலாமல் சிரமப்படுவதாகவும், அதனால் அருகிலுள்ள தான்தோன்றி மலையில் பெருமாளை எழுந்தருளச் செய்யவேண்டும் என்றும் வேண்டிக்கொண்டனர்.

பிரம்மேந்திரர் தான்தோன்றி மலைக்குச் சென்று, பெருமாளுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்து ஜன ஆகர்ஷண யந்திரம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்தார். அன்றுமுதல் திருப்பதிக்குச் சென்றுவந்த பலனைத் தருவது மட்டுமல்லாமல், வேண்டுவோர் வேண்டியதை அருளும் தான்தோன்றிப் பெருமாள் என்ற சிறப்பும் அப்பெருமாளுக்குக் கிடைத்தது.

*****


Click Here Enlargeஒருமுறை தஞ்சை மன்னர் ராமேஸ்வர திருத்தல யாத்திரையை முடித்துக் கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். புன்னைமரக் காடு அடர்ந்த ஓரிடத்தின் வழியே வந்து கொண்டிருந்த போது, திடீரென அவரது மகளுக்குக் கண்கள் சிவந்து கண்ணீர் வரத் தொடங்கியது. பார்வை மங்கியது. உடனே கண்ணனூர் அம்பிகையிடம் (சமயபுரம் மாரியம்மன்) பார்வை சரியானால், தங்கத்தில் கண் செய்து வைப்பதாகவும், குடும்பத்துடன் வந்து தரிசிப்பதாகவும் வேண்டிக் கொண்டார். அன்று இரவு பாடி வீடமைத்து அந்தக் காட்டுப் பகுதியிலேயே தங்கினார். அன்றைய இரவு அவரது கனவில் தோன்றிய அம்பிகை "நான் அருகிலேயே இருக்க, நீ சமயபுரத்துக்குப் போவானேன்!" என்று கூறி மறைந்தாள்.

விடிந்ததும் மன்னர், கனவில் அம்பிகை சொன்னபடி அந்தக் காட்டின் அருகில் அம்பிகையின் சன்னதி எங்காவது இருக்கிறதா என்று தேடினார். கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒரு வேலையாள், "புற்று ஒன்றிற்குச் சிறுவர்கள் வேப்பிலை வைத்து மாரியம்மன் என்று விளையாட்டாக வழிபடுகிறார்கள். அது தவிரத் தனியாக இங்கே கோவில் எதுவும் இல்லை" என்று தெரிவித்தான். உடனே மன்னருக்கு அதில் ஏதோ குறிப்பு இருப்பதாகத் தோன்றவே அந்தப் புற்றை நோக்கிச் சென்றார். ஒரு பெரிய புன்னைமரத்தின் அடியில் அந்தப் புற்றைக் கண்டார். அதன்மீது வேப்பிலை சொருகி, பூமாலை சாற்றியிருந்தது. வேறு யாரையும் காணவில்லை. மன்னர் தேடிப் பார்த்தபோது சற்றுத் தொலைவில் மற்றொரு புன்னைமரத்தின் அடியில் சதாசிவ பிரம்மேந்திரர் தியானத்திலிருப்பதைக் கண்டார்.

இவர் பெரிய மகானாக இருக்கவேண்டும் என்று நினைத்து, அவர் கண் திறக்கும்வரை காத்திருந்தார். கண் விழித்ததும் அவரை வணங்கி, அம்பிகை தன் கனவில் வந்து கூறியதைத் தெரிவித்து, "இங்கே கோயில் ஒன்றையும் காணவில்லையே! வெறும் புற்றுதானே இருக்கிறது. வழிகாட்ட வேண்டும்" என்று வேண்டிக் கொண்டார்.

சதாசிவ பிரம்மேந்திரர், "அதுவே இது" என்று மணலில் எழுதிக் காட்டினார். அம்பிகையே புற்றுருவத்தில் எழுந்தருளியிருக்கிறாள் என்பதை உணர்ந்த மன்னர், "மக்கள் பக்தியோடு வழிபட உருவம் வேண்டுமே! அதற்குத் தாங்கள் ஏற்பாடு செய்யவேண்டும்" என்று வேண்டினார். பிரம்மேந்திரர் கஸ்தூரி, சாம்பிராணி, புனுகு, ஜவ்வாது, அகில், சந்தனம், குங்குமப்பூ, கோரோசனை, பச்சைக்கற்பூரம் ஆகியவற்றை வாங்கிவரச்செய்து, புற்று மண்ணுடன் சேர்த்துப் பிசைந்து அம்மன் உருவத்தை வடித்தார். யந்திரம் ஒன்றை எழுதி அம்மன்முன் வைத்து, "இதற்குப் பூஜை செய், உன் குழந்தையின் கண் சரியாகும்" என்று எழுதிக் காண்பித்தார்.

அவ்வாறே மன்னர் செய்ய, குழந்தைக்குப் பார்வை திரும்பியது. அன்றுமுதல் சதாசிவரையே தனது குருவாகக் கருதி வழிபட்ட மன்னர், தான் விரும்பும்போது அவரது அருட்காட்சி கிடைக்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்துகொண்டார். (புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயத்தில் இன்றும் அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தைலக்காப்பு செய்கிறார்கள். கோடைக்காலத்தில் அம்மன் முகத்தில் வியர்வை அரும்புவது மிகவும் ஆச்சரியம்.)

*****


ஒருமுறை பிரம்மத்தில் லயித்துக் காட்டு வழியில் சென்று கொண்டிருந்தார் பிரம்மேந்திரர். அந்தக் காட்டில் இஸ்லாமிய மன்னன் ஒருவன் பாடி வீடமைத்துத் தங்கியிருந்தான். அவனுக்கு உதவியாகப் பல படைவீரர்கள் இருந்தனர். அவன் அவதூதராக (ஆடையணியாதவராக) மகான் நடந்து வந்து கொண்டிருந்ததைப் பார்த்தான். அதைப் பார்த்ததும் அவனுக்கு அளவில்லாக் கோபம் உண்டாயிற்று. "கொஞ்சங்கூட வெட்கமில்லாமல் நிர்வாணமாகத் திரிந்து கொண்டிருக்கிறாயே!" என்று சினந்தவன், தனது வாளை உருவி அவரது ஒரு கையை வெட்டிவிட்டான். கை கீழே விழுந்தது, இரத்தம் பெருகியது. ஆனால் சதாசிவரோ அதுபற்றிய கவனமில்லாமல் தன்பாட்டுக்கு நடந்து போய்க்கொண்டே இருந்தார்.

திகைத்துப் போனான் மன்னன். "ஓ, இவர் பெரிய மகான் போலும். ஐயோ! இவருக்கு மிகப்பெரிய அபராதத்தைச் செய்துவிட்டேனே!" என்று அரற்றியவாறே மகானின் வெட்டுப்பட்ட கையை எடுத்துக் கொண்டு அவரைப் பின்தொடர்ந்து ஓடினான்.

மகானின் பாதங்களில் வீழ்ந்து வணங்கித் தன்னை மன்னிக்குமாறு வேண்டினான். வெட்டிய கையை அவரிடம் கொடுத்தான். அப்போதுதான் தன்நினைவு வரப்பெற்ற சதாசிவ பிரம்மேந்திரர், கையை வாங்கி, வெட்டுப்பட்ட இடத்தில் வைத்துத் தடவ, அது ஒட்டிக்கொண்டு முன்போல் ஆனது. காயமோ, தழும்போ ஏதுமில்லை.

*****


ஜீவ சமாதி
இவ்வாறு பல்வேறு சித்தாடல்களை நிகழ்த்திய சதாசிவ பிரம்மேந்திரர், இறுதியில் ஜீவசமாதி மேற்கொள்ளத் திருவுள்ளம் கொண்டார். கரூர் அருகே உள்ள நெரூரைத் தேர்ந்தெடுத்து, பக்தர்களான புதுக்கோட்டை மன்னருக்கும், தஞ்சை மன்னருக்கும் மானசீகச் செய்தி அனுப்பினார். அவர்கள் புறப்பட்டு வந்தனர். அவர்களிடம், "அன்பர்களே, குகை அமையுங்கள். அதில் நான் அமர்ந்து ஜீவசமாதி ஆகப்போகிறேன்" என்பதைக் குறிப்பால் உணர்த்தினார். அவர்கள் துக்கித்தனர். "நான் என் உடலைத் தான் உகுக்கப் போகிறேன். எனது ஆன்மா, என்னை நினைத்து உண்மையாக வழிபடுபவர்களுக்கு எப்போதும் வழிகாட்டும். கவலை வேண்டாம். செய்ய வேண்டியனவற்றைச் செய்க" என்று சைகை மொழியில் அறிவுறுத்தினார்.

குழி ஒன்று தோண்டப் பெற்று மகான் அதில் இறங்கினார். பின் தன் சீடர்களிடம், "கற்பூரம், விபூதி, உப்பு, மஞ்சள்தூள், சந்தனம், குங்குமம் போட்டு இதை மூடிவிடுங்கள். ஒன்பதாம் நாள் இதன்மேல் வில்வ விருட்சம் ஒன்று தோன்றும். சரியாகப் பன்னிரண்டாம் நாள் காசியிலிருந்து சிவலிங்கம் ஒன்றை ஒருவர் கொண்டு வருவார். அதனைப் பன்னிரெண்டு அடி தள்ளி ஸ்தாபித்து கோயில் கட்டுங்கள்" என்று உணர்த்தினார். சித்திரை சுத்த தசமி 1753ஆம் ஆண்டு மகான் ஜீவசமாதி ஆனார்.` அதே நேரத்தில் மானாமதுரை, கராச்சி போன்ற ஊர்களிலும் சமாதி அடைந்ததாகச் சொல்லப்படுகிறது.

சரியாக ஒன்பதாம் நாள். மகான் சொன்னது போலவே வில்வமரம் சமாதியின் மேல் துளிர்த்தது. பன்னிரண்டாம் நாள் காசியிலிருந்து ஒரு பிரம்மச்சாரி சிவலிங்கம் ஒன்றைக் கொண்டுவந்தார். அது பிரம்மேந்திரர் சொன்னவாறே பிரதிஷ்டை செய்யப்பட்டது. அங்கே நாடி வருவோருக்கு நன்மைகளை வாரி வழங்கும் வள்ளலாய் அருள்புரிந்து வருகிறார் பிரம்மஞானி, மகான் சத்குரு ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர்.

மகான் இயற்றிய கிருதிகள்
சதாசிவ பிரம்மேந்திரர் கீர்த்தனைகள் இயற்றியதோடு பல பாஷ்யங்களையும் வரைந்துள்ளார். "மானஸ ஸஞ்சரரே", "ஸர்வம் பிரம்ம மயம்", "பிபரே ராமரஸம்", "பஜே ரகுவீரம்", "பஜரே கோபாலம்", "ப்ரூஹி முகுந்தேதி" போன்ற அவரது கீர்த்தனைகள் மிகவும் பிரபலம். 'பிரம்மசூத்ர விருத்தி', 'பிரம்மதத்வ ப்ரகாசிகா', 'யோக சுத்தாகரா', 'ஆத்மவித்யா விலாஸம்', 'அத்வைதரஸ மஞ்சரி' போன்ற அவரது கிரந்த நூல்கள் சிறப்பானவை.

அதிஷ்டானம்
சதாசிவ பிரம்மேந்திரரின் அதிஷ்டானம், கரூருக்கு அருகே உள்ள நெரூரில் காவிரிக்கரை ஓரத்தில் அமைந்துள்ளது. கரூர் பேருந்து நிலையத்திலிருந்து 4ஆம் எண் கொண்ட நகரப் பேருந்து நெரூருக்குச் செல்கிறது. காலை 8.00 மணிமுதல் மதியம் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 முதல் 7.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும். சமாதி ஆலயத்துடன் காசி விஸ்வநாதர்–விசாலாக்ஷி ஆலயமும் உள்ளது. பிரம்மேந்திரர் சன்னதியில் நெய்விளக்கு ஏற்றுவது விசேஷம். ஒவ்வொரு வருடமும் நெரூரில் வைகாசி சுத்தபஞ்சமி அன்று தொடங்கி சுத்த தசமிவரை உற்சவம், ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஆராதனை தினத்தன்று நாமசங்கீர்த்தனமும், பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெறும். உணவருந்திய இலையில் வேண்டுதல் செய்துகொண்டு பகதர்கள் அங்கப் பிரதக்ஷிணம் செய்வது மிகவும் புகழ்பெற்றது. வரிசையில் காத்திருந்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுவர். அதே நாளில் நெரூரில் மட்டுமல்லாது மானாமதுரையில் இருக்கும் அவரது அதிஷ்டானத்திலும் ஆராதனை விழா நடைபெறும்.

தமிழகம் தந்த பரமஞானி சதாசிவர் பிரம்மேந்திரர் என்பதில் நாம் பெருமை கொள்ளமுடியும்.

பா.சு. ரமணன்

© TamilOnline.com