தென்றல் பேசுகிறது
மொத்தத் தானியங்கிகளின் (automobiles) எண்ணிக்கையில் மின்னுந்துகள் (Electronic Vehicles-EVs) மிகச்சிறிய சதவிகிதமே. ஆயினும் அமெரிக்காவில் 2018ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட மின்னுந்துகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட இரட்டிப்பாகி உள்ளதாம். கலிஃபோர்னியாவில் மட்டுமே 95,000 (56%) புதிய மின்னுந்துகள் பதிவாகி உள்ளன. 2020ஆம் ஆண்டில் 3,50,000 மின்னுந்துகள் விற்பனையாகும் என கணிக்கப்படுகிறது. இவற்றில் டெஸ்லா தயாரிப்புகள் விற்பனையில் முன்னணி வகிக்கின்றன. புகையுமிழா வாகனத் திட்டம் (Zero Emission Vehicle program - ZEV) ஒன்றைக் கலிஃபோர்னியா முன்னெடுக்க, வேறு பல மாநிலங்களும் இந்தத் திட்டத்தைக் கைக்கொண்டுள்ளன.

இந்திய அரசின் சிந்தனை வட்டமான நிதி ஆயோக் (The National Institution for Transforming India) இந்தியப் பிரதமரின் தலைமையின் கீழ் இயங்குவது. புதுப்பிக்கத் தக்க எரிபொருள் (Renewable fuel) பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம், அழிந்துவரும் புதைபடிவ எரிபொருள் (பெட்ரோலியம்) மீதான சார்புநிலையைக் குறைக்க எண்ணி, இருசக்கர மின்னுந்துகளைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடும்படி நிதி ஆயோக் இந்திய வாகன உற்பத்தியாளர்களை அறிவுறுத்தியது. ஆனால், பெரிய குழுமங்களான ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, டி.வி.எஸ். ஆகியவை உடனடியாக இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. 2025ஆம் ஆண்டில் 150cc-க்கும் அதிகமுள்ள இருசக்கர உந்துகள் எல்லாமே மின்னுந்துகளாக இருக்கவேண்டும் என்பதுதான் அரசின் எதிர்பார்ப்பு. அதுகூட முடியாது என்று இந்தக் குழுமங்கள் பேசுவதை, மாற்றத்துக்கு எதிரான, சூழல்நலன் சிந்தனையற்ற, இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு எதிரான போக்கு என்று வர்ணிக்க இடமுள்ளது. இவர்கள் செய்யாவிட்டால், நல்லறிவும் ஊக்கமும் கொண்ட புதிய தொழில்முனைவோர் மின்னுந்துத் தயாரிப்புப் பாதையில் கால் வைத்து, புத்தொளி வீசத் தொடங்குவார்கள். இது நடந்தே தீரும். காலம் காத்திருக்காது.

*****


அன்றாட வாழ்வில் திறமை, தன்னலமின்மை, நெடுநோக்கு, நேர்மை எனப்பல அரிய பண்புகள் கொண்டிருப்பதோடு, சமூகத்தின் மேம்பாட்டில் பங்களிக்கும் நல்லோரை ஒளிவட்டத்துக்குள் கொண்டு வருவதைத் தென்றல் வழக்கமாகக் கொண்டுள்ளமை வாசகர் அறிந்ததே. இந்த இதழில் நீங்கள் சந்திக்கப் போகும் 'திருக்குறள்' முனுசாமி அப்படி ஒருவர். ஓராண்டு முன்னர்வரை இவர் இருந்த இடம் சென்னையின் புழல் சிறைச்சாலை. "சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி" இவரைச் சிறைக்குள் தள்ளியது. அதையும் ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு, அங்கிருந்த 'வசதிகளை'ப் பயன்படுத்தி, பட்டங்களும் பட்டயங்களும் பெற்றது மட்டுமல்லாமல் திருக்குறளையும் பொருளோடு கற்றுத் தேர்ந்தார். "நான் முன்னமேயே திருக்குறளைப் படித்திருந்தால் சிறைக்குப் போயிருக்க மாட்டேன்" என்கிறார் முனுசாமி மிகவும் மென்மையாக. எந்த நாவலும் சினிமாவும் சித்திரிக்காத காதல் ஜோடியாக எம் கண்களுக்கு முனுசாமியும் மீனாவும் தெரிகிறார்கள். எதனால்? நேர்காணலைப் படித்துப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். வாயில் மெல்லுவதற்கு அவல் தயாரிப்புகள், சதாசிவ பிரம்மேந்திரர் வாழ்வின் நிறைவுப் பகுதி, சிந்தனைக்குத் தீனிபோடும் மகாபாரதப் பயணக் குறிப்புகள் என்று இந்த இதழ் வந்திருக்கிறது.

வாசகர்களுக்கு அமெரிக்கச் சுதந்திர நாள் மற்றும் குரு பூர்ணிமை தின வாழ்த்துக்கள்.

தென்றல் குழு

ஜூலை 2019

© TamilOnline.com