தென் கலிஃபோர்னியா தமிழ்ப் பள்ளி: 8ம் ஆண்டுவிழா
ஏப்ரல் 28, 2018 அன்று தென் கலிஃபோர்னியா தமிழ்ப்பள்ளி தனது ஆண்டு விழாவை, வேலி உயர்நிலைப்பள்ளி (சான்டா ஆனா) அரங்கத்தில் கொண்டாடியது. பெற்றோர்கள் தங்கள் நண்பர்களையும், உறவினர்களையும் கலந்து கொள்ள அழைத்ததைப் பார்த்து அமைப்பாளர்கள் விழாவின் பிரம்மாண்டத்தை உணர்ந்தனர். சிறப்பு விருந்தினராக, இர்வைன் நகர நிர்வாக உறுப்பினர் திருமதி ஃபாராஹ் கான் வந்திருந்து சிறப்பித்தார்.

தன்னார்வலர்கள், 60 ஆசிரியர்கள், 300 மாணவர்கள், விருந்தினர்கள் என 800 பேர் வந்திருந்தனர். அத்துணை குழந்தைகளும் மேடையேறி தமிழ்த்தாய் வாழ்த்திசைக்க, குத்துவிளக்கேற்றி ஆரம்பிக்கப்பட்டது விழா. பல்வேறு போட்டிகளில் வென்ற 215 மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

சென்ற ஆண்டு 100 குறட்பாக்கள் சொல்லி, திருக்குறள் செல்வன் மற்றும் திருக்குறள் செல்வி விருதுகளை வென்ற கௌதம் அருண்குமார் மற்றும் அவந்திகா க. சந்திரன் இருவரும் இவ்வருடம் முறையே 500 மற்றும் 310 குறட்பாக்களைச் சொல்லி அசத்தினர். திருக்குறள் போட்டியில் பங்கு பெற்றவர்கள் எண்ணிக்கை சென்ற ஆண்டினும் பன்மடங்கு. அதில் நான்கே வயதான ஆரவ், 20 குறட்பாக்களைக் கூறியது ஒரு சாதனை.

இரு புதிய பள்ளிகள் (பேக்கர்ஸ் ஃபீல்ட் , சான்டா மரியா) தென் கலிஃபோர்னியா தமிழ்ப் பள்ளியுடன் இணைந்தன. 3 இடங்களில் செயல்பட்ட நம் பள்ளிகள், இனி 5 இடங்களில் செயல்படும். சென்ற ஆண்டின் வரவுசெலவுக் கணக்கு, வந்திருந்தோரின் பார்வைக்குச் சமர்ப்பிக்கப் பட்டது. புதிய பள்ளி பேக்கர்ஸ்ஃபீல்ட் மாணவர்களின் நடனம் மிகச்சிறப்பு. விழாவில் கலந்துகொள்ள 3 மணி நேரம் பயணித்து வந்திருந்தன பேக்கர்ஸ்ஃபீல்ட் குடும்பங்கள்.

சிறப்பு விருந்தினர் ஃபாராஹ் கான் கையால் 10 மாணவர்களுக்கு பட்டமளிக்கப்பட்டது. இது பள்ளியின் 2வது பட்டமளிப்பு விழா. வாழ்த்திப் பேசிய ஃபாராஹ் கான் "வணக்கம்" என்று தொடங்கியது வந்திருந்தோருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. பல்வேறு பட்ட கலாச்சார நிகழ்வுகளை ஊக்கப்படுத்தும் அமெரிக்கச் சூழ்நிலையைக் குறிப்பிட்ட அவர், இர்வைன் குளோபல் வில்லேஜ் நிகழ்வில் நம் தமிழ் கலாச்சாரச் சாவடி கவனத்தை ஈர்த்ததையும் குறிப்பிட்டார். இந்த நிகழ்வு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரைக் கவரும் விழா என்பதும், ஃபாராஹ் கான் அதன் அமைப்பாளர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கன.

நிகழ்வின் கடைவீதிப் பகுதியில், 5 தொழில்முறை வணிகர்களும், 9 தொழில்சாரா வணிகர்களும் கடைகள் அமைத்திருந்தனர். அவ்வனைவரும் பொருளீட்டியதுடன், நம் விருந்தினர்களின் மனதும், வயிறும் நிறைந்தன.

கடைவீதியைப் பார்க்க

நீராதாரம் குறைவதைச் சுட்டிக்காட்டிய 3ம் வகுப்பு மாணவர்களின் நாடகம், 2ம் வகுப்பு மாணவர்களின் பட்டிமன்றம் மற்றும் இதர வகுப்பு மாணவர்கள் நடனங்கள் நிகழ்ச்சியில் இடம்பெற்றன.

இந்நிகழ்வின் அனைத்துப் பகுதிகளும் காண

சென்ற ஆண்டில் தமிழ் கற்றுப் பட்டம் வாங்கிய வள்ளி இவ்வருடம், இளம் ஆசிரிய உதவியாளராக பணிபுரிந்து உதவியது, திருக்குறள் போட்டி, பேச்சுப்போட்டி, குறுக்கெழுத்துப் போட்டிகளில் சிறார்களின் பெரும் அளவிலான பங்கேற்பு போன்றவை நமக்கு உணர்த்துவது தமிழ் மொழியின் வாழையடி வாழையான வளர்ச்சி மற்றும் தொடர்ச்சியை.

ஸ்ரீராம் காமேஸ்வரன்,
தென் கலிஃபோர்னியா

© TamilOnline.com