மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் – 17)
முன்கதை: ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை அறிமுகம் செய்தாள். என்ரிக்கே, க்ரிஸ்பர் முறையால் எவ்வாறு மரபணு எழுத்துத் தொடர்களில் ஓரெழுத்தைக்கூட மாற்றி நோய்களை நிவர்த்திக்கவும், உணவு உற்பத்தியைப் பெருக்க முடியும் என்று விளக்கினார். பிறகு க்ரிஸ்பர் முறையின் பலவீனங்களைப் பற்றி விளக்கி அவற்றைத் தன் ஆராய்ச்சியால் நிவர்த்தித்துள்ளதாகவும், ஆனால் திடீரென நுட்பம் தவறாக செயல்படுவதாகவும் தெரிவித்தார். சூர்யா முதலில் சக நிறுவனரான விக்ரம் மேத்தாவை சந்தித்தார். அவர் க்ரிஸ்பர் வெட்டல் ஒட்டல் முறையின் அடிப்படைக் குறைகளைத் தம் குழுவினர் எவ்வாறு புதுப் புரதங்களைக் உருவாக்கி நிவர்த்தித்தனர் என்று விளக்கலானார். வாருங்கள் சூர்யாவோடு போய் மேலே நடப்பதைப் பார்க்கலாம்...

*****


க்ரிஸ்பர் முறையின் குறிவைக்கும் பழுதை நிவர்த்திக்க sgRNA என்னும் புரதத்தையும், மரபணு எழுத்துக்களை சரியான எண்ணிக்கை மட்டும் வெட்டுவதற்கு ரிபோ ந்யூக்ளீயோ புரதத்தையும் தேர்ந்தெடுத்து பயன்படுத்துவதை விக்ரம்தான் கண்டுபிடித்தார் என்றும் அத்தகைய புரதங்களைக் கண்டுபிடிப்பது மிகக்கடினம் என்று என்ரிக்கே பாராட்டியதும், ஷாலினியும் விக்ரமைப் பாராட்டினாள்.

சூர்யாவும் விக்ரமைப் பாராட்டிவிட்டு, "பிரமாதந்தான் விக்ரம். நீங்கள் அப்படித் தேர்ந்தெடுத்ததால் க்ரிஸ்பர் பழுதுகள் நிவாரணமாச்சு, இல்லையா?" என்று கேட்டார்.

விக்ரம் குழம்பினார். "அதைத்தானே இதுவரை விவரிச்சோம்? என்ன மீண்டும் மீண்டும் அதைப்பத்தியே கேட்கறீங்க?!"

என்ரிக்கேயும் தலையாட்டி ஆமோதித்து கேள்விக்குறியுடன் பார்த்தார். "ஆமாம் சூர்யா. விக்ரமின் தளராத முயற்சியால்தான் எப்படி சரியா வேலை செய்யக்கூடிய புரதச் சேர்க்கையைக் கண்டுபிடிக்க முடிஞ்சுதுன்னு இவ்வளவு நேரம் விவரமா விளக்கினோமே. நீங்க என்ன மீண்டும் அதைப்பத்தியே கேட்கறீங்க! ஒண்ணும் விளங்கலயே. நீங்க வேற எதையோ சொல்ல வர்றீங்க போலிருக்கு. தயவுசெஞ்சு வெளிப்படையா விளக்கிடுங்க!"

சூர்யா முறுவலுடன் தொடர்ந்தார். "எப்படி புரதச் சேர்க்கையைக் கண்டு பிடிச்சீங்கன்னு நீங்க விவரிச்சது என்னவோ சரிதான். ஆனால் நான் கேட்டது நீங்க எப்படி முதல்முறை கண்டுபிடிச்சீங்கன்னு இல்லை. நீங்க அப்படிக் கண்டுபிடிச்ச அதே வழிமுறை, அது சரியாக வேலை செய்யாமல் மாறியபோது ஏன் அந்தப் பிரச்சனைக்கு நிவாரணம் காண உதவவில்லை என்றுதான் கேட்டேன்! ஏன் நீங்கள் தேர்ந்தெடுப்பதற்கு உடனடி முன்னோடியான நுட்பநிலைக்கு மீண்டும் திரும்பி புரதங்களை சோதிச்சு வேலை செய்யற சேர்க்கையை (combination) கண்டுபிடிக்க முடியலைன்னு கேட்கறேன். அதைத் தவிர வேற எதை எதையோதானே விவரிக்கறீங்க! இப்ப நான் என்ன கேட்கறேன்னு புரியுதா, இன்னும் விளக்கமா சொல்லணுமா?"

என்ரிக்கே சூர்யாவின் விளக்கம் புரிந்தது என்று தலையசைத்து ஆமோதித்த பின், பொங்கி வந்த விம்மலை அடக்கிக்கொண்டு தலையைத் திருப்பிக் கொண்டார்.

விக்ரம்தான் சூர்யாவுக்கு பதிலளித்தார். "அது ரொம்ப சரியான கேள்விதான் சூர்யா! ஆனா அதுக்கு எங்ககிட்ட பதிலில்லை. அதுக்கு அடிப்படை விளக்கமா, எவ்வளவோ முயன்றுதான் நல்லா வேலை செய்யற ஒரு புரதச் சேர்க்கையைக் கண்டுபிடிக்க முடிஞ்சுதுன்னுதான் சொல்லிக்கிட்டிருந்தோம். ஆனால், வேலை செய்யக்கூடிய வேற புரதச் சேர்க்கையைக் கண்டுபிடிக்கறது அவ்வளவு எளிதில்லை. முதல்ல கண்டுபிடிச்ச அளவுக்கோ, இல்லன்ன அதுக்கும் பலமடங்கு அதிகமான முயற்சியோ கால அளவோ ஆகக்கூடும். அதுனாலதான் வேலைசெஞ்ச புரதச் சேர்க்கை ஏன் குணம் மாறிச்சுன்னு கண்டுபிடிக்க பிரம்மப் பிரயத்தனம். அதுக்குத்தான் உங்களையும் என்ரிக்கே அழைச்சிருக்கார். இப்ப புரியுதா?"

என்ரிக்கேயும் சுதாரித்துக் கொண்டு விளக்கினார். "விக்ரம் சொன்னபடி, அதே புரதச் சேர்க்கையின் பிரச்சனை என்னன்னு கண்டு பிடிக்கறதுதான் எங்களுக்குச் சரியான வழி சூர்யா. நாங்களும் புரதங்கள் மட்டுமில்லாமல், வேலை செஞ்சபோது சேர்க்கையில் இருந்த எல்லா வேதிப் பொருட்களையும் ஒண்ணு விடாம பட்டியல் போட்டு அவைகளோட அளவையும் நேனோ கிராம் வரைக்கும் அளந்து ஒப்பிட்டுப் பாத்தாச்சு! ஊஹூம். வித்தியாசம் ஒண்ணுமில்லை. ஆனா விளைவு மட்டும் விபரீதமான வித்தியாசம். க்ரிஸ்பரைவிட மோசமா வேலை செய்யுது. என் தலையைச் சுவத்துல மோதிக்கலாம் போல வேதனையா இருக்கு சூர்யா. ப்ளீஸ் எப்படியாவது என்ன காரணம்னு கண்டுபிடிச்சுக் குடுங்க. இல்லன்னா எங்க ஆராய்ச்சி நிறுவனத்தை இழுத்து மூடிட்டு நான் எங்கயாவது கண்காணாம பைத்தியமா திரிய வேண்டியதா இருக்கும்!"

சூர்யா கை உயர்த்திக் காட்டி ஆறுதலளித்தார். "ஓகே, இப்பப் புரியுது, ஏன் முந்தைய ஆராய்ச்சி முறையிலேயே வேற சேர்க்கை ஏன் காணமுடியாது, ஏன் அதே சேர்க்கையோட பிரச்சனைக்கு நிவாரணம் தேடறீங்கன்னு. நான் அதுக்காக நிச்சயமா பிரயத்தனப் படறேன். ஆனா உங்க விஞ்ஞான வழிமுறையில ஒரு வித்தியாசமும் காணப்படலைங்கறது ரொம்ப ஆச்சர்யமாத்தான் இருக்கு."

சூர்யாவின் கண்களீல் மீண்டும் ஓர் ஒளி பளிச்சிட்டு மறைந்ததை ஷாலினி கவனித்து விட்டு கிரணை ஒரு பக்கமாகப் பார்த்து ஒரே புருவத்தை உயர்த்திக் கேள்வி பாவனை செய்தாள். கிரணும் ஓரு கையை மட்டும் மேலும் கீழும் நகர்த்தி சும்மா இரு, அப்புறம் பேசலாம் என்பதுபோல் சைகை செய்தான். சூர்யா எதையோ மோப்பம் பிடித்துவிட்டார் என்பதை உணர்ந்து கொண்ட ஷாலினியின் முகம் மலர்ந்துவிட்டது.

என்ரிக்கேயும் விக்ரமும் அந்தக் குறுநாடகத்தைக் கவனிக்கவில்லை. என்ரிக்கே சூர்யாவிடம் "அந்த சேர்க்கை வித்தியாசம் இல்லாததைப் பத்தி என்ன சொல்ல வர்றீங்க சூர்யா? புரியலையே!" என்றார்.

சூர்யா தலையசைத்து மறுத்தார். "அது சொல்ற அளவுக்கு ஒண்ணுமில்லை. ஒரு சின்ன துளிர் யோசனைதான். இன்னும் சில குழுவினரைப் பார்த்து பேசினப்புறந்தான் அது தெளிவா சொல்ல முடியும். அடுத்த குழு உறுப்பினரைப் பாக்கலாமா?"

அனைவரும் விக்ரம் அறையிலிருந்து வெளியேற ஆயத்தமாயினர். ஆனால் சூர்யா சட்டென்று நின்று விர்ரெனத் திரும்பி விக்ரமிடம் "ஆனால் ஒரு நிமிஷம் விக்ரம், நான் உள்ள நுழைஞ்சப்போ உங்க மனைவியின் விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் ஆசையைப்பத்திக் கேட்டேன்..." என்றார்.

புன்னகையுடன் வழியனுப்ப வந்து கொண்டிருந்த விக்ரமின் முகம் கடுகடுவென மாறி அவர் நடுநடையில் உறைந்தார். "ஆமாம் அதுக்கென்ன இப்போ?"

சூர்யா ஒரு அதிர்வெடி வீசினார்! "உங்களுக்கு ஓரளவு பணம் இருக்குன்னாலும் இந்த செலவு மிக அதிகமாயிருக்கும் போலிருக்கு. இதுக்கெல்லாம் எங்கேந்து பணம் கிடைக்குதுங்கற சந்தேகம் ஒண்ணிருக்கு. அதைப் பத்தி அப்புறம் பேசி விசாரிக்க வேண்டியிருக்கலாம்..."

விக்ரம் எரிமலையாக வெடித்தார். "என்ன சொல்றீங்க சூர்யா? வார்த்தையை அளந்து பேசுங்க. என் பணத்தேவைக்காக நானே என் கண்டுபிடிப்பையே கெடுத்துட்டேன்னு இலைமறை காயா கேக்கறீங்களா? ஜாக்கிரதை. நான் கோவத்துல நிலையிழந்துட்டா அப்புறம் உங்க நிலை மோசமாயிடும். கெட் அவுட்! என்ன என்ரிக்கே இது? பிரச்சனை தீர்க்க உதவுவார்னு வரவேற்ற என்மேலயே பழி போடப் பாக்கறாரு, நீங்களும் பாத்துக்கிட்டிருக்கீங்க? இதுதான் நம்ம நட்புக்குச் சாட்சியா? சே! ஷேம், ஷேம்!"

என்ரிக்கே அவசரமாக இடைமறித்தார். "நோ நோ விக்ரம், இது என் கருத்து இல்லவே இல்லை. சூர்யாவா எதோ சொல்றார். சூர்யா, இது சரியில்லை. விக்ரம் எவ்வளவு முயன்று கண்டுபிடிச்சதை அவரே போய்ப் பணத்துக்காக... சே சே! இருக்கவே முடியாது! ரிலாக்ஸ் விக்ரம், நான் சூர்யாவின் எண்ணத்தை சரி செய்யறேன்!"

ஆனால் சூர்யா பதிலளிக்கவில்லை. விக்ரமின் முகத்தைச் சில நொடிகள் கூர்ந்து கவனித்துவிட்டு சட்டெனத் திரும்பி அறையை விட்டு வெளியேறினார். அவருடன் ஷாலினியும் கிரணும் வெளியேறினர்.

பொங்கிப் பொருமிக் கொண்டிருந்த விக்ரம் தன் நாற்காலியில் பொத்தென விழுந்து அமர்ந்து, முகத்தை இரு கைககளிலும் தாங்கிக்கொண்டு வெளியேறியவர்களை அடங்காத கோபத்தோடு பார்த்துக்கொண்டே இருந்தார். என்ரிக்கே கையை உயர்த்திக் காட்டி அமைதிப்படுமாறு சைகை செய்துவிட்டு, பரபரப்புடன் சூர்யாவைப் பின்பற்றி விரைந்தார்...

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com