அரங்கேற்றம்: ஜனனி சிவகுமார்
மார் 23, 2019 அன்று செல்வி ஜனனி சிவகுமாரின் கர்நாடக சங்கீத அரங்கேற்றம் சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. இவர் திருமதி சங்கரி கிருஷ்ணன் அவர்களிடம் இணையம்வழியே சங்கீதம் பயின்றார். கச்சேரிக்கு அக்கரை சொர்ணலதா (வயலின்), திரு B. சிவராமன் (மிருதங்கம்), திரு நேர்குணம் சங்கர் (கஞ்சிரா) ஆகியோர் திறம்படப் பக்கம் வாசித்தனர்.

லால்குடி ஜயராமனின் அரிதாகக் கேட்கப்படும் 'வரமு' வர்ணத்துடன் கச்சேரி தொடங்கியது. நாட்டை ராகத்தில் "ஸரஸீருஹா"வை விறுவிறுப்பாகப் பாடி மனங்கவர்ந்தார் ஜனனி. இனிய குரலும் சுருதி சுத்தமும் ஜனனிக்கு இயல்பாகவே உள்ளது. ரீதிகௌளையில் தியாகராஜ சுவாமிகளின் "சேரராவதே"வை எடுத்துக்கொண்டு பாடிய ராகம், கல்பனாஸ்வரங்கள் கனஜோர். அதன்பிறகு, தீக்ஷிதரின் "ப்ருஹதம்பிகாயை" வசந்தாராகத்தில் வழங்கினார். மகுடமாக சங்கராபரணத்தை எடுத்துக் கொண்டார். அவர் வெகு அழகாக ராகம் பாட, குமாரி அக்கரை சொர்ணலதாவின் வயலின் பதிலில் அரங்கம் திளைத்தது. "ஸரோஜதள நேத்ரி" பாடலில் ஜனனி லாவகமாக கல்பனாஸ்வரங்களும், நெரவலும் "ஸாமகான வினொதினி" என்ற இடத்தில் பாடியது குறிப்பிடத்தக்கது. தனி ஆவர்த்தனத்தில் சிவராமன், சங்கர் இருவரும் அழகாக வாசிக்க அரங்கமே ஆரவாரித்தது.

ஊர்மிகா ராகத்தில் ராகம்-தானம்-பல்லவியை கண்டஜாதி த்ரிபுட தாளத்தில் நேர்த்தியாகப் பாடினார். ராகமாலிகா ஸ்வ்ரங்களுடன் முடித்து, "காக்கைசிறகினிலே" என்ற பாரதி பாடலும், "சிவசிவ" என பஜனைப் பாடலும் பாடினார். முடிவில் திருலால்குடி ஜயராமன் அவர்களின் யமுனா கல்யாணி தில்லானாவை வெகுவாக ரசித்தனர். "ஶ்ரீராமசந்திர ஸ்ருத பாரிஜாத" என்ற மங்களத்துடன் கச்சேரி இனிது நிறைவுற்றது.

குரு திருமதி சங்கரி கிருஷ்ணன், திரு லால்குடி ஜயராமனின் சிஷ்யை. நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய சங்கீத கலாச்சார்யா திருமதி ஸுகுணா வரதாச்சாரி குருவையும் சிஷ்யை ஜனனியையும் பாராட்டி ஆசீர்வதித்தார். சிறப்பு விருந்தினரான திரு வேதாந்த் ராமானுஜம் வாழ்த்துரை வழங்கினார்.

சான் ஃபிரான்சிஸ்கோ அருகே பர்லிங்கேமில் வசிக்கும் டாக்டர் பானுமதி மற்றும் திரு சிவகுமாரின் மகளான ஜனனி, பொறியியல் பட்டதாரி. பரதத்திலும் தேர்ந்தவர்.

மீனா சீதாராமன்,
பர்லிங்கேம், கலிஃபோர்னியா

© TamilOnline.com