அட்லாண்டா: லட்சுமி தமிழ் பயிலும் மையம் ஆண்டுவிழா
மார்ச் 30, 2019 அன்று, அட்லாண்டா நகரில் 33 வருடங்களாகக் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பித்துவரும் லட்சுமி தமிழ்பயிலும் மையத்தின் ஆண்டுவிழா சின்மயா நிகேதனில் சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவை, மாணவிகள் நேத்ரா மற்றும் ஹரிணி அழகுறத் தொகுத்து வழங்கினர். திரு ஜார்ஜ் மனோகரன் வரவேற்புரை வழங்கினார். விழாவிற்குத் தலைமை வகித்த மண்ணியல் வல்லுநர் திரு கணபதி சண்முகம் உரையாற்றுகையில் முதல்வர் திருமதி லட்சுமிசங்கரின் தமிழ்த்தொண்டைப் பாராட்டியதோடு தமிழின் தொன்மையையும் பெருமையையும் எடுத்துரைத்தார். மண்ணியல் சார்ந்த பல சுவாரசியமான தகவல்களை மிக எளிமையானமுறையில் விளக்கியதோடு மாணவர்களின் கேள்விகளுக்கும் உற்சாகமாக விடையளித்தார்.

பின்னர் மாணவர்கள் கலைநிகழ்ச்சிகளை வழங்கினர். சிறுமியர் கோலாட்டம், பாலர் நடனம், பியானோ மற்றும் வயலின் இசை, பாட்டு, பேச்சு, நாடகம், மழைப்பாடல், நடனம், நகைச்சுவைத் துணுக்குகள் என்று நிகழ்ச்சிகள் அனைத்துமே பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைந்தன.

முன்னாள் மாணவி அக்ஷரா, மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். திருமதி ஜெயா மாறன் 'தமிழும்இலக்கியமும்' என்ற தலைப்பில் சொற்சுவையும் பொருட்சுவையும் ததும்ப உரையாற்றினார். மாணவர்கள் வழங்கிய அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்கள் குறித்த நாடகமும், கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட 'அறுமுகனும் அறுபடை வீடும், அருணகிரியும்' என்ற கதாகாலட்சேபமும், ஆசிரியைகள் வழங்கிய திருக்குறள் பாடல்கள் கொண்டு அமைக்கப்பட்ட பின்னல் கோலாட்டமும் காண்போரைக் கவர்ந்தன.

திரு கணபதி சண்முகம் அவர்கள் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்களையும், போட்டிகளில் வென்றோருக்குப் பரிசுக் கோப்பைகளையும் வழங்கினார். திருமதி கிருத்திகா நடராஜன் நன்றியுரை வழங்க, தேசபக்திப் பாடலுடன் விழா நிறைவுற்றது.

கிருத்திகா நடராஜன்,
அட்லாண்டா

© TamilOnline.com