பாலாஜிமடம் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்
ஜூன் 2, 2019 ஞாயிறன்று சான் ஹோசேவில் உள்ள பாலாஜிமடம் திருக்கோவில் (5004 North First Street, San Jose, CA) 7வது ஆண்டு மகாகும்பாபிஷேக விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த லாபநோக்கற்ற ஆன்மீக அமைப்பு, படைப்புகள் அனைத்திலும் நிலவும் ஒருமையை மனிதன் உணரும் பொருட்டாக, வேதங்கள் உபநிஷதங்கள் புகலும் பிரபஞ்ச சத்தியத்தைப் பரப்ப அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான நிகழ்ச்சிகள் மே மாதம் 31, வெள்ளிக்கிழமையன்று கணேசபூஜை, குருபூஜை, பூமிபூஜை, புண்யாகவாசனம் ஆகியவற்றுடன் தொடங்கி,108 கலச ஆராதனை மற்றும் இரவு மஹாப்பிரசாதத்துடன் நிறைவடையும்.

ஜூன் 1, இரண்டாம் நாள், கணேச பூஜை, நவக்கிரக ஹோமம், வாஸ்து ஹோமம் தவிர நவக்கிரகம், சிவன் மற்றும் நந்தியின் ஜலநிவாச, க்ஷீரநிவாச, தான்யநிவாச அஷ்டவந்தன பூஜைகள் நடைபெறும். மதியம் மஹாப்பிரசாதம் வழங்கப்படும். அடுத்துக் கலைநிகழ்ச்சிகள், 108 கலசாபிஷேகம் நடைபெறும். முக்கியஸ்தர்கள் கௌரவிக்கப்படுவர். இரவு மஹாப்பிரசாதத்துடன் நிகழ்வுகள் நிறைவேறும்.

ஜூன் 2, மூன்றாம் நாள், கணேசபூஜையை அடுத்து நவக்கிரகங்கள், சிவன் மற்றும் நந்தி ஸ்தாபனம் நடைபெறும். மதியம் மகாப்பிரசாதம் வழங்கப்படும். பின்னர் ஸ்ரீ பாலாஜி கல்யாணம் மற்றும் பஜனைகள் நடைபெறும்

தினந்தோறும் ஆரத்தி, பிரசாதத்துக்குப் பின்னர் பீடாதிபதி சுவாமி ஆனந்தநாத் நாராயணானந்தா அவர்கள் அருளுரை வழங்குவார்கள். 1993ம் ஆண்டு அமெரிக்காவுக்கு பிரம்மச்சாரியாக வந்த சுவாமிகள், பல கோவில்களில் பூஜாரியாக இருந்தபின், 2006ல் பாலாஜிமடக் கோவிலைத் தொடங்கினார். 2010ம் ஆண்டு சன்யாச ஆச்ரமத்தை மேற்கொண்டார். ஜாதி, மத பேதமின்றி மானுட ஒருமைப்பாட்டைச் சுவாமி வலியுறுத்துகிறார். "கடவுளை நம்புகிற அனைவரும் அன்போடு வழிநடத்தப்பட வேண்டியவர்களே" என்கிறார் சுவாமி.

முழு விவரங்களுக்குப் பார்க்க: www.balajitemple.net

ஆங்கில மூலம்: மதுமிதா பேனர்ஜீ

© TamilOnline.com