தெரியுமா?: கான் அகாடமி தமிழ் இணையம் திறப்புவிழா
மார்ச் 16, 2019 அன்று வெற்றிவேல்அறக்கட்டளை, கான் அகாடமி தமிழ் இணையதளத் துவக்கவிழாவை கலிஃபோர்னியா விரிகுடாப் பகுதியில் உள்ள சன்னிவேல் சமூக மையத்தில் சிறப்பாக நடத்தியது.

கலிஃபோர்னியா மாநிலத்தின் விரிகுடாப் பகுதியில் இயங்கி வரும் வெற்றிவேல் அறக்கட்டளை, 2011-ல் ஏழை மாணவர்களுக்கு இலவச மற்றும் தரமான தமிழ்வழிக் கல்வி என்ற நோக்கத்தில் தனது பயணத்தைத் துவக்கியது. கணிதம், அறிவியல், பொறியியல், மானுடவியல், பொருளாதாரம் எனப் பல்வேறு பாடங்களிலும் காணொலிகளின் வாயிலாகத் தரம்வாய்ந்த கல்வியை இலவசமாக வழங்கிவரும் கான் அகாடமியின் (Khan Academy) கல்வி வளங்களைத் தமிழாக்கம் செய்ய ஒப்புதல் பெற்று அப்பணியை அறக்கட்டளை செய்துவருகிறது. இதுவரை கணிதம், அறிவியல், மானுடவியலில் 2000 காணொலிகள் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. இவை தவிர, பயிற்சிகளையும் தமிழாக்கி இணையத்தில் இட்டுள்ளது.

இதனைக் கொண்டாடும் வண்ணம் கான் அகாடமி தமிழ் இணையதளத் துவக்க விழா நடத்தப்பட்டது. விழாவில், வெற்றிவேல் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு சொக்கலிங்கம் கருப்பையா தனது சிறுவயது கல்விப்பயணத்தை நெகிழ்ச்சியுடன் காணொலி வாயிலாகப் பகிர்ந்தார். பிறகு நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் திருமதி சிவகாமி இராமையா, தமிழக கிராமங்களின் தற்போதைய கல்விநிலை குறித்த அதிர்ச்சியூட்டும் ASER 2018 புள்ளி விவரங்களைப் பகிர்ந்தார். எடுத்துக்காட்டாக, 5-ம் வகுப்பு மாணவர்களுள் 40.7 சதவிகிதத்தினர் மட்டுமே 2-ம் வகுப்புப் பாட நூல்களைப் படிக்கும் திறன் கொண்டிருக்கின்றனர். இந்நிலை மாற உலகத்தரம் வாய்ந்த கல்வியைத் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் பல்லூடகங்களின் (multimedia) வாயிலாகத் தாய்மொழி பயிற்றுவிப்பது மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டார்.

அறக்கட்டளையின் செயல்பாடுகள் வெற்றிபெறத் தன்னார்வலர்கள் மற்றும் கொடையாளிகளின் பங்களிப்பு மிக முக்கியம் என்பதை அறக்கட்டளை நிறுவனர்கள் இருவரும் வேண்டுகோளாக முன்வைத்தனர்.

சிறப்பு விருந்தினர் திரு கோட்டலாங்கோ லியோன் கான் அகாடமி தமிழ் இணையதளத்தை துவக்கி வைத்தார். இத்தளத்தில் தமிழ்வழியே பயிலும் மாணவர்களுக்கு இலவச காணொலிகளும், பயிற்சிகளும் இடம்பெற்றுள்ளன. திரு கோட்டலாங்கோ லியோன், இரண்டு முறை ஆஸ்கார் விருது பெற்ற தமிழர். அவர் உரையாற்றுகையில் தமிழ்வழியில் கல்வி பயிலும் மாணவர்கள் அறிவுத்திறத்தில் சிறந்து விளங்குகின்றார்கள் என்றும் கான் அகாடமி, தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவர்களின் தாழ்வு மனப்பான்மையைப் போக்கி, அறிவுலகில் சிறகடிக்கச் செய்ய உதவும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

சிறப்பு விருந்தினர், ஃப்ரீமான்ட் நகரின் துணைமேயர் திரு. ராஜ் சல்வான் பேசுகையில் ஒவ்வொருவரும் நம் சமூகத்தில் வறுமையில் வாடுவோருக்குக் கல்வியளிக்க நம்மாலானதைச் செய்யவேண்டும், இது சமூகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.

கான் அகாடமி நிறுவனர் திரு சல்மான் கான், காணொலிகள் வாயிலாகக் கான் அகாடமியின் இந்த தமிழ்ப்பதிப்பு உலகெங்கிலும் வாழும் ஏழு கோடித் தமிழர்களுக்குப் பயனளிக்கும் என்று குறிப்பிட்டார். அறக்கட்டளையின் நிர்வாகிகளான அண்ணாமலை வைரவன், சுப்பு மெய்யப்பன், அடை பழனியப்பன், அருள்மொழி திண்ணப்பன், ஜெயக்குமார் கிருஷ்ணதாசு, ஜோ சைமன், குமார் ராஜு, சுபா நரசிம்மன், விசுவநாதன் அருணாச்சலம் ஆகியோர் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

அதன் பிறகு கணிதப் பயிற்சிகளைத் தமிழில் மொழியாக்கவும், நிதி திரட்டவும் உதவிய தன்னார்வத் தொண்டர்கள் சிறப்பிக்கப் பட்டனர். பின்னர், அறக்கட்டளையுடன் இணைந்து செயலாற்றிய ன் அகாடமி, தமிழ் இணையக் கல்விக் கழகம், வளைகுடாப்பகுதி தமிழ் மன்றம், தமிழ்நாடு அறக்கட்டளை, India TEAM ஆகிய அமைப்புகள் சிறப்பிக்கப்பட்டன. விழாவில் அவ்வப்போது கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் புதிர்கள் கேட்கப்பட்டன.

கான் அகாடமி தமிழாக்கப் பணியில் பங்காற்ற விருப்பமா? இதோ:
காணொலிகளையும் பயிற்சிகளையும் தமிழாக்கம் செய்யலாம்; பணிக்கு நன்கொடை அளிக்கலாம், நிதி திரட்டலாம்: நமது தமிழ்க் காணொலிகளை ஒரு பள்ளியில் நிறுவ நிதியளிக்கலாம்; நீங்கள் பணிசெய்யும் நிறுவனத்தில் Corporate Social Responsibility (CSR) திட்டம் இருந்தால், அதை நம் அறக்கட்டளையுடன் இணைந்து செயல்படப் பரிந்துரைக்கலாம்; மாணவர்களுக்கு எடுத்துச் செல்லும் ஆசிரியப் பெருமக்கள்/கல்வியாளர்களுடைய தொடர்பு இருப்பின் வெற்றிவேல் நமக்குத் தெரியப்படுத்தலாம். (சிறந்த ஆசிரியர்களையும் கல்வியாளர்களையும் பணியில் அமர்த்த அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது). கான் அகாடமி தமிழ்த் திட்டத்தைப் பரப்புரை செய்து உதவலாம்.

மேலும் விபரங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புக: info@vetrivelfoundation.org

தெய்வேந்திரன் முருகன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com