மாமா எவ்வழி மருமகன் அவ்வழி!
கல்யாண மண்டபம் களைகட்டியிருந்தது. ஒன்பது பத்தரை முகூர்த்தம். ஏழிலிருந்தே கையில் வண்ணக்காகிதம் சுற்றிய பரிசுப்பொருட்களுடன் பட்டுப்புடவை, வேஷ்டி சகிதம் கூட்டம் வரத்துவங்கியது. ருக்மணி வாசலில் நின்று வரவேற்றுக் கொண்டிருந்தாள். திடீரென்று நினைவுக்கு வந்ததுபோல் பக்கத்தில் நின்றிருந்தவளிடம் "சிவாவை இன்னும் காணுமே" என்றாள்

"அதான் நானும் யோசிச்சேன்."

"கொஞ்சம் கவனிச்சிக்கோ. நான் போயி பார்த்துட்டு வந்துடறேன்" என்றவள் லிஃப்டில் சென்று வலதுகோடி மூலையிலிருந்த அறைக்கு வந்து கதவைத் தட்டினாள். சிவா கதவைத் திறந்து எட்டிப் பார்த்தான்.

"என்னடா, நீ இன்னும் கெளம்பலையா?"

"இதோ பத்து நிமிஷத்துல வந்துடறேன்க்கா."

"ரமா கெளம்பிட்டாளா ...?"

"அவளுக்குத்தான் பயங்கர தலைவலி. பிடிச்சு விட்டுக்கிட்டிருக்கேன்."

ருக்மணிக்குக் கோபம் வந்தது. அடக்கிக்கொண்டாள்.

"மாப்ளயோட தாய்மாமா நீ. வந்து மேடைல நிக்க வேணாமா?"

"வந்துடுவேன்க்கா. நீ போயி வந்தவங்களை கவனி." சிவா மேலே பேச விரும்பாது நிற்க, ருக்மணி எரிச்சலோடு கீழே போனாள். சாரதாவிடம் விஷயத்தைச் சொன்னாள். "ரமாவுக்கு தலைவலியாம். நம்ம அருமைத் தம்பி மசாஜ் பண்ணி விட்டுக்கிட்டிருக்கான்."

"அடப்பாவி, ஒரு மாத்திரை போட்டுக்கப்படாதா!"

"அதெல்லாம் யாரு சொல்றது" என்றவள் கணவனின் காதில் கிசுகிசுத்தாள். அந்த மேளச்சத்தத்திலும் அது அவருக்குத் தெளிவாகக் கேட்டது. வம்பு விஷயங்கள் அவர் காதில் விழாமல் போனால்தான் ஆச்சரியம். "பதினஞ்சு வருஷத்துக்கு முந்தி இதேமாதிரி ஒரு கல்யாண மண்டபத்துல உன் தம்பி அவ கால்ல விழுந்தான். விழுந்தவன் இன்னும் எழுந்துக்கவேயில்ல போ" என்று நக்கலாய்ச் சொல்லிவிட்டுப் போனார். போனவர் அங்கே, இங்கே நின்று செய்தி வாசித்துவிட்டுத்தான் போனார்.

மணமகள் ஷிவானி, தருணின் தோள்கள் உரச அமர்ந்திருந்தாள். சாரதா மணமக்களைக் கண்குளிரப் பார்த்தாள். 'அருமையான ஜோடி' மனசு சொல்லிற்று. ஒரே மகன். நல்ல வரன் அமையவேண்டுமென்று அவள் வேண்டாத தெய்வமில்லை. படிப்பு, அழகு, குணம் எல்லாவற்றிலும் தருண் நம்பர் ஒன். அவனுக்கு ஏற்றாற்போல் மனைவி அமைய வேண்டுமே என்ற சாரதாவின் கவலையை சிவாதான் தீர்த்துவைத்தான்.

"அருமையான வரன்க்கா. தருணுக்கு ஏத்த பொண்ணு. உனக்கு புடிச்சிருந்தா முடிச்சிக்கலாம்" என்று தன் நண்பனின் உறவினர் மகள் ஜாதகத்தை வாங்கித்தந்தான். ஜாதகம் அட்டகாசமாய்ப் பொருந்த, தருணுக்கும் ஷிவானியை பிடித்துப் போக, இதோ ஜோடியாக மணவறையில்.

தருணின் கண்கள் சிவாவைத் தேடின. தாய்மாமன் மேல் அவனுக்குத் தனிப்பாசம். சிறுவயதில் தருணை ஒரு நிமிடம் தரையில் விடமாட்டான். சைக்கிள் ஹேண்ட்பாரில் கூடைச்சேர் மாட்டி, தருணை உட்காரவைத்து ஊரைச் சுற்றுவான். "கொழந்தைய அவனை நம்பி அனுப்பாதடி" என்று அம்மா தலைப்பாடாய் அடித்துக்கொள்வாள்.

"விடும்மா. அவன் பத்திரமா பாத்துக்குவான்" என்பாள் சாரதா. ஊருக்குக் கிளம்பும்போது சிவாவுக்கு கண்கள் கலங்கும்.

"இன்னும் நாலுநாள் இருந்துட்டு போயேன்க்கா" கெஞ்சுவான்.

"மாமா, நீயும் வா" தருண் அவன் சட்டையைப் பிடித்திழுத்து அழுவான். வீடே ரணகளப்படும். வளர்ந்ததும் இருவருக்குமிடையே தோழமை உணர்வு உண்டாயிற்று. சகல விஷயங்களையும் பரிமாறிக்கொள்வர்.

முகூர்த்தநேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. தருண் பின்னால் நின்றுகொண்டிருந்த திவ்யாவைக் கண்ணசைத்து கூப்பிட்டான். "அத்தை, மாமா எங்க?"

"அம்மாவுக்கு தலைவலிண்ணா. அப்பா மசாஜ் பண்ணி விட்டுக்கிட்டிருக்கார்" திவ்யா அவனருகில் குனிந்து சொல்ல ஷிவானிக்கும் அது காதில் விழுந்தது.

சரியாகத் தாலி கட்டும் நேரம் சிவா வந்துவிட்டான். உடன் வந்த ரமாவின் முகம் சோர்ந்திருந்தது. தருணுக்கு மாமாவைக் கண்டதும் உற்சாகம் பீறிட்டது. சந்தோஷமாக ஷிவானியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான்.

மொய் வைத்து, போட்டோ எடுத்துக்கொண்டு, அரட்டையடித்து, சாப்பிட்டு ஏறக்குறைய மண்டபம் காலியாகியிருந்தது. வந்திருந்த பரிசுப் பொருட்களைக் காரிலேற்றி வீட்டுக்கு அனுப்பும் வேலையில் சிவா மும்முரமாக ஈடுபட்டிருந்தான். "சித்தப்பா" ஷிவானி கூப்பிட்டாள்.

"எ....என்னையா கூப்பிட்ட?" சிவா ஆச்சரியமாகக் கேட்டான்.

"ஆமா. தருணுக்கு நீங்க மாமான்னா எனக்கு சித்தப்பாதானே."

"அட ஆமா. சொல்லும்மா."

"சித்திக்குத் தலைவலி சரியாயிடுச்சா?"

"விஷயம் உன்வரைக்கும் வந்துடுச்சா!"

"அதுமட்டுமில்ல. நீங்க மசாஜ் பண்ணிவிட்டதும் தெரியும்." ஷிவானி சொல்லிக் கொண்டிருக்கும் போதே தருண் இடையில் புகுந்தான்.

"நீ மசாஜ் பண்ணிவிட்டதை லைவ் ரிலே பண்ணல. மத்தபடி எல்லாருக்கும் தெரியும் மாமா."

"கிண்டல் பண்ணாதீங்க தருண். சித்தப்பா ஈஸ் கிரேட்" என்ற ஷிவானி,

"எப்படி மசாஜ் பண்ணனும்னு உங்க மருமகனுக்குச் சொல்லி குடுத்துடுங்க சித்தப்பா. எனக்கும் அப்பப்ப தலைவலி வரும்" என்றாள் சிரித்தபடி.

"சொல்லிக் குடுத்துட்டா போச்சு" என்ற சிவா, தருணின் கைகளைப் பிடித்துக்கொண்டான்.

"மாப்ள, சும்மா அக்னியைச் சுத்தி வந்து, கடைசிவரை இணைபிரியாம இருப்போம்னு அந்த நேரத்துக்கு ஐயர் சொல்ற மந்திரத்தைத் திருப்பி சொன்னா மட்டும் போதாது. ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்குடுத்து, சுக, துக்கங்களைச் சேர்ந்தே சுமக்கணும். ரோட்டுல நாய் அடிபட்டுக் கெடந்தா பரிதாப்படறவங்க வீட்டுல மனைவிக்கு ஒடம்பு சரியில்லேன்னா, இது எப்பவும் நடக்கறதுதானேன்னு சாதாரணமா கடந்து போயிடறாங்க. ஆனா சக-உயிரை நேசிக்கிறவங்க அப்படி இருக்கமாட்டாங்க."

"கரெக்டா சொன்னீங்க சித்தப்பா."

"இந்த மனசுஇருக்கே. அன்பா ரெண்டுவார்த்தை பேசினாலும் கரைஞ்சிடும். கணவன், மனைவிக்குள்ள அந்த அன்பு இருக்கணும்மா. இருந்தா வாழ்க்கைப் பயணம் நல்லபடியா போகும்."

சிவா முடிக்க, ஷிவானி கைதட்டினாள். ருக்மணி உதடு சுழிக்க, ரமாவின் கண்களில் கண்ணீர். தருண் நெகிழ்ச்சியுடன் சிவாவின் கைகளைப் பற்றிக்கொண்டு, "மாமா எவ்வழியோ, மருமகன் அவ்வழி" என்று சொல்ல, சிவா அவனை அணைத்துக் கொண்டான்.

கிருத்திகா ஐயப்பன்,
திருச்சி, தமிழ் நாடு

© TamilOnline.com