ஆப்பிள் படுத்தும் பாடு (அத்தியாயம்-7)
ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் வீடு மிகவும் அமைதியாக இருந்தது. அருண் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தான். தூக்கத்தில் சில வார்த்தைகள் பேசிவிட்டு மீண்டும் தூங்கிப் போனான்.

பக்கரூ சீக்கிரமாக எழுந்துவிட்டு யாராவது விளையாடக் கிடைக்கமாட்டார்களா என்று சுற்றிக்கொண்டிருந்தது. அது அருணின் அறைக்குள் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்தது. சிலசமயம் 'வள்வள்' கத்திக் கொண்டது.

கொஞ்சநேரம் கழித்து அருணின் பெற்றோர் அறைக்கு ஓடியது. அறைக்கதவு மூடி இருப்பதைப் பார்த்து கதவைப் பிறாண்டியது. எப்போதுமே கீதா கதைவைத் திறந்து வைத்திருப்பார். முந்தின இரவு அருண் செய்த தொந்தரவில் அறைக்கதவை மூடியிருந்தார் போல.

பக்கரூ மீண்டும் அருணின் அறையின் உள்ளே எட்டிப் பார்த்தது. அதற்கு அருண்மீது ஏறி அவன் முகத்தை நக்கிக் கொஞ்சவேண்டும் என்று ஆசைப்பட்டது. அருண் கட்டிலில் படுத்திருந்தால் பக்கரூ அப்படிச் செய்திருக்கும். ஆனல், அன்று அனுவும் அரவிந்தும் அங்கே படுத்திருந்தது அதற்குத் தடங்கலாக இருந்தது.

அருண் ஏதோ தூக்கத்தில் உளறினான். பக்கரூ விநோதமாக அருணைப் பார்த்தது. இருந்தாலும் அருண் குரல் கேட்டதில் அதற்குச் சந்தோஷம். அனுவையும் அரவிந்தையும் சட்டை செய்யாமல் அருண்மீது ஏறிக் குதித்தது.

"மிஸ்டர் டேவிட் ராப்ளே, உங்களை என்ன பண்ணறேன் பாருங்க" என்று தூக்கம் கலையாமல் உளறிக் கொண்டிருந்தான். பக்கரூ தன்மேல் உட்கார்ந்து கொண்டு தன் முகத்தை உற்றுப் பார்ப்பதை அறியாமல் அருண் இன்னும் கனவுலகத்தில் டேவிட் ராப்ளேயுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தான்.

"மிஸ்டர் ராப்ளே, ஆப்பிள் மேலே செயற்கையான மெழுகு பூசிக் கலப்படமா பண்றீங்க? நான் அத்தையோட சேர்ந்து அதை நிரூபிக்கறேன்" என்று அருண் சவால் விட்டுக் கொண்டிருந்தான். பக்கரூ காலடிச் சத்தம் கேட்டு அறையைவிட்டு வெளியே ஓடியது. கீதாவும், பாலாவும் தங்கள் அறையிலிருந்து வருவதை பக்கரூ பார்த்தது.

பாலா கொட்டாவி விட்டபடி, "கீதா, நீங்களும் அருணும் ராத்திரி முழுக்க பேசிட்டு இருந்தீங்க போலிருக்கு? நானும் வந்து கலந்துக்கலாம்னு நினைச்சேன், ஆனால் களைப்புல தூங்கிப் போயிட்டேன்" என்றார்.

கீதா புன்னகைத்து, "அண்ணி, நானே சமாளிச்சுட்டுடேன். இதெல்லாம் எங்க அருணோட ரொம்ப சகஜம்" என்றார். இருவரும் படியிறங்கிச் சமையல் அறைப்பக்கம் போனார்கள்.

"அண்ணி, நீங்களும் அண்ணனும் நல்லாத் தூங்கினீங்களா? பயணக்களைப்பு ரொம்ப இருந்ததா?" என்று கீதா அக்கறையோடு கேட்டார். "அஷோக் நல்லாத் தூங்கினார். அது என்னமோ அவருக்கு அது ஒரு வரம். எங்க போனாலும் நல்லா தூங்கிடுவாரு" என்று பாலா சிரித்துக்கொண்டே சொன்னார்.

"அண்ணன் மாறவே இல்லை போலிருக்கு. அப்படியே சின்ன வயசுல இருந்த மாதிரியே இருக்கான்" என்றார் கீதா. பாலா தயக்கத்துடன் "கீதா, அருண் இப்ப எப்படி இருக்கான், சரியாயிட்டானா? நேற்று இரவு உங்ககூட ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தான் போல. எனக்கு ரொம்ப மனசு கஷ்டமா இருந்தது. என்னாலதான இந்தப் பிரச்சனைன்னு" என்றார்.

கீதா பாலா அருகில் வந்து அவரைக் கட்டிக்கொண்டார். "இதுக்கெல்லாம் கவலைப்படாதீங்க, அண்ணி."

"இல்ல கீதா, இந்தச் சின்ன வயசுல இப்படி ஒரு சமூகநலப் பார்வை அருணுக்கு இருக்கறது நெனக்கவே பெருமையா இருக்கு. என் குழந்தைகள் ரெண்டு பேரும் அருண்கிட்டேயிருந்து நிறையக் கத்துக்க இருக்கு."

"அத்தை, நான் சும்மாத்தான் அம்மாகிட்ட நேத்து ராத்திரி தூக்கம் வராம பேசிக்கிட்டு இருந்தேன்." அருணின் குரல் ஒலிக்கவே, பாலாவும் கீதாவும் திரும்பிப் பார்த்தார்கள். மாடியிறங்கி அருண் சமையலறைப் பக்கமாக வந்து கொண்டிருந்தான். அவன் பின்னால் பக்கரூவும் துள்ளிக் குதித்து வந்தது. "பக்கரூ குட்டி, சாரிடா. நான் உன்னை இவ்வளவு நேரமா கவனிக்காம இருந்ததுக்கு."

"அருண், எப்படிப்பா இருக்க?" என்று பாலா கேட்டார்.

"சூப்பரா இருக்கேன், அத்தை" என்று குஷியாகச் சொன்னான் அருண்.

"நிஜமாவா?" என்று பாலா கேட்டுக்கொண்டே, அருணைத் தொட்டுப் பார்த்தார்.

"எனக்கு உடம்பெல்லாம் நல்லாத்தான் இருக்கு அத்தை" என்ற அருண் அம்மாவைப் பார்த்து, "அம்மா, அத்தையும் இருக்கிறதுனால, நாம நேத்து ராத்திரி டாபிக்கைத் தொடரலாமா?" என்றான்.

பாலா கீதாவைப் பார்க்க, கீதா ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு தன் தோள்களைக் குலுக்கினார். "பாலா அத்தை அவர்களே, நீங்களே உங்கள் மருமகனின் சந்தேகங்களை இப்போதே, இந்தக் கணமே பேசித் தீர்த்து வையுங்கள்" என்று கீதா ஜோக்கடித்தார்.

பாலா, அருண் ஆரம்பிக்கட்டும் என்று காத்திருந்தார். அருண் எந்தக் கேள்வி கேட்டால், எப்படிப் பதிலளிப்பது என்று மனதுக்குள் ஒரு திட்டம் போட்டார்.

"அத்தை, நீங்க எங்க வீட்டு ஆப்பிளோட பளபளப்பு ரொம்பச் செயற்கையா இருக்குன்னு சொன்னீங்க இல்லையா?"

"ஆமாம்" மெதுவாகச் சொன்னார் பாலா. "கொஞ்சம் அதிகமாவே இருக்கு. இயற்கையில பழத்துமேல உருவாகற மெழுகு இவ்வளவு பளபளப்பு கொடுக்காது."

கீதா குறுக்கிட்டு, "அண்ணி, இவனுக்கு எங்கே ஏதாவது ரசாயனம் போட்டிருப்பாங்களோன்னு சந்தேகம். ஆனா, பழத்தோட லேபல்ல 'ஆர்கானிக்' அப்படீன்னு எழுதியிருக்கு."

"ம்ம்ம்" என்று ஆழ்ந்த யோசனையில் பாலா ஆமோதித்தார்.

"அத்தை, எங்க ஊருல இந்தமாதிரிக் கலப்படம் நடக்கறது இது முதல்முறை இல்லை. முன்னாலயும் தில்லுமுல்லு பண்ணி மாட்டிருக்காங்க" ஒரு வெறுப்போடு சொன்னான் அருண். "எல்லாம் அந்த ஹோர்ஷியானா நிறுவனத்தோட C.E.O பண்ணறதுதான். அவரைப்போல ஒரு திமிர் பிடித்த ஆள் யாருமே இந்த உலகத்துல கிடையாது. எங்க அம்மாவை எப்படியெல்லாம் திட்டியிருக்காரு தெரியுமா?"

பாலா கீதாவைப் பார்க்க, அவர் பதிலுக்கு அருண் சொல்வதை ஆமோதிக்கும் வகையில் தலையாட்டினார்.

"அத்தை, இந்தத் தடவையும் அவங்க ஏதாவது தில்லுமுல்லு பண்ணி இருந்தாங்கன்னா சரியா ஒரு அடி கொடுக்கணும் அவங்களுக்கு. நீங்க எனக்கு உதவுவீங்களா?"

பாலா கண்களில் நீர் வர, நெகிழ்ச்சியோடு அருணைக் கட்டி அணைத்துக் கொண்டார். "கட்டாயமா கண்ணா, கட்டாயமா. என்னால் முடிந்ததைச் செய்யறேன்."

"முதல்ல காலையுணவு முடிச்சிடலாமா? அருண், நீ இன்னும் பல்கூட விளக்கி இருக்கமாட்டயே? போ, அதை முடிச்சிட்டு வா. வரும்போது, அனுவையும் அரவிந்தையும் எழுப்பிக் கூட்டிக்கிட்டு வா" என்று சொல்லி, அருணை மாடிப்பக்கம் அனுப்பினார் கீதா.

(தொடரும்)

கதை: ராஜேஷ்

© TamilOnline.com